Last Updated : 23 Sep, 2016 11:29 AM

 

Published : 23 Sep 2016 11:29 AM
Last Updated : 23 Sep 2016 11:29 AM

நாளைய விடியலுக்குத் தீக்குச்சிகள் தேவை!

“என் உடலைக் காவல்துறை அடக்கம் செய்துவிட முடியும், விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து ஒரு போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். இது போன்ற கைவிடப்பட்ட நிலைகளின்போதுதான் சிறந்த மக்கள் தலைவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அநீதிக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும் பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன், நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். உங்கள் கையில் கிடைத்திருக்கும் துண்டறிக்கையை நகலெடுத்து உங்கள் நண்பர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து போராட்டத்தின் ஆதரவைப் பெருக்கப் பண்ணுங்கள்".

ஈழப் போராட்டத்தின் கடைசிக் காலத்தில், அந்தப் பிரச்சினையைக் கண்டும் மவுனம் காக்கும் உலக நாடுகளின் பக்கம் கவனம் கொண்டுசெல்லவும், போரை யார் நடத்துகிறார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டவும் தீக்குளித்து மரணித்தார் முத்துகுமார். அவர் எழுதி வைத்துப் போன கடைசி வரிகள் இவை.

2011 ஆகஸ்ட் 29 , மக்கள் மன்ற அமைப்பின் செங்கொடி காஞ்சிபுரத்தில் மூவர் தூக்கை எதிர்த்துத் தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சமீபமாக விக்னேஷ் என்ற இளைஞர் காவரிப் பிரச்சினையில் தீக்குளித்துத் தன்னை மாய்த்துக்கொண்டார்.

இப்படிச் சமீகாலமாகப் பல்வேறு முக்கிய அரசியல் பிரச்சினைகள் போராட்ட வடிவம் எடுக்கும் போது, இளைஞர்கள் தீக்குளித்து மாண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருவதை நாம் ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.

தற்கொலைகள் செய்துகொண்டு உயிர் துறப்பவர்களைக் கோழைகள் என்று சித்தரிக்கும் சமூகம், இம்மாதிரியான போராட்டங்களில் தீக்குளித்து உயிர் துறப்பவரை ‘வீர உரு'வாகக் கட்டமைத்து வருவதையும், வீரமரணம் என்ற அடையாளம் கொடுத்து மகிமைப்படுத்தும் விதத்தையும் நாம் கூர்மையாய் ஆய்வு செய்வதும் அவசியமாகிறது.

தீக்குளித்தல் வரலாறு

தீக்குளித்து எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்ட வடிவமாய் அதைப் பயன்படுத்துவது என்பது 12-ம் நூற்றாண்டு சோழர் காலத்திலேயே இருந்திருப்பதற்கான‌ சான்றை பேராசிரியர் வானமாமலை தன் கட்டுரையில் நிறுவியுள்ளார். விவசாயிகள், தங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துத் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முறை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இருந்திருக்கிறது.

அப்போது நிலவிய நிலவுடைமைச் சமூகத்தை மாற்றும் நோக்கோடு அப்போராட்டங்கள் இல்லையென்றாலும் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்தி, ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த விவசாயிகளின் பல்வேறு போராட்ட முறைகளுள் தீக்குளித்துத் தன்னுயிர் மாய்த்தலும் இருந்ததை அந்தக் கட்டுரையில் காண முடிகிறது.

60-களில் தொடங்கிய தேசிய இன விடுதலைக்கான குரல்கள் 1965-ல் எழுச்சி பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மையம் கொண்டு, தமிழக வரலாற்றில் மாணவர்கள் களம் இறங்கிய மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது.

மொழி உணர்வு மேலோங்கி, மொழித் திணிப்பை, வேற்று மொழி ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டனர். உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தெடுக்கப்பட்ட இளைஞர் கூட்டம், எதையும் துச்சமாய் மதித்து, எல்லாவற்றையும் துறந்து களத்தில் இறங்கினார்கள்.

உச்சத்தில் இருந்த போராட்டத்தில் 3 மாணவர்கள் உயிர்துறந்தனர் (மாயவரம் சாரங்கபாணி, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபானி) மற்றும் 4 இளைஞர்கள் தீக்குளித்தனர் (திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்). ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும் போராட்டம் நடந்தது. பின்னர் என்ன ஆனது என்பது வரலாறு.

தீக்குளிப்பின் உளவியல்

பொதுவாகப் பல்வேறு அரசியல் பிரச்சினைகள், மண்டிக் கிடக்கும் சமூகச் சிக்கல்கள், இளைஞர்கள் மீது பல விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பதின்பருவத்தினர் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர் போன்றோரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலும், அதனை மாற்றுவதற்கான வழிகளைத் தேடுவதிலும் இயல்பாகவே உணர்ச்சிவ‌யப்பட்டு இயங்கும் தன்மையராகவும், பிரச்சினைகளைப் பகுத்தறிந்து நிதானமாய் ஆய்வு செய்யும் தன்மை குறைவாகவும் இருக்கும். உணர்ச்சிப் பெருக்கு மேலோங்கி இருக்கும் நிலையில் பிரச்சினைகளை அணுகும்போது தெளிவான வழிகள் தடைப்பட்டுப் போகும்.

எனவே மனதை உலுக்குகிற‌ கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது, அதைக் கண்டும் காணாமல் பலர் இருக்கும் நிலையில், இந்நிகழ்வை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றாலும், அது ஒரு இக்கட்டான சூழலில் நெருக்கடி மிகுந்த மன நிலையில், மன உளைச்சலில் நடந்தேறுகிறது. எதுவுமே நடக்கவில்லை, முட்டி மோதுகிற பதைப்பதைக்கிற எண்ண அலைகள், எல்லோரும் துரோகம் செய்துவிட்ட நிலையில், நடக்கின்ற மிகக் கொடூரமான காட்சிகளை அசை போட்டு அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற உறுதியோடு, தீக்குளித்து மரணிக்கிறார். பிரச்சினைகளை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், போராட்டத்தைச் செழுமைப்படுத்தவும் வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

ஒரு இயக்கத்தின் நடவடிக்கைகளில் ஒன்று போராட்டம். அதில் வெவ்வேறு வழிமுறைகள் இருக்கும். பல நேரங்களில் நாம் சூழ்நிலைக்கேற்பப் போராட்ட வழிமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்காத கட்சித் தலைமைகள், உணர்ச்சியின் பிடியிலேயே தொண்டர்களை மிதக்கவைத்து, பிரச்சினைகளைப் பற்றித் தெளிவான அரசியல் புரிதல் அளிக்காமல் இன்றைய இளைஞர்களை முட்டுச்சந்தில் நிறுத்திவிடுகிறது.

தலைவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு பேசிய பேச்சால் தூண்டப்பட்டு, உடனே தீர்வு வேண்டும். ஆனால் என்ன செய்வது என்பதை அறியாத மன நிலையில் தற்கொலையை நோக்கிப் பயணிக்கின்றனர்.

இதுபோன்ற தியாகங்களுக்குப் பின் உள்ள உணர்வைப் பாராட்டலாம். ஆனால் இத்தகைய மரணங்களை வீரத்தின் வெளிப்பாடாக‌க் கட்டமைப்பது உணர்ச்சிப் பெருக்கில் இன்று போராட்டத்தில் குதிக்கிற இளைஞர்களின் உயிரை ஆயுதங்களாக்க நிச்சயம் தூண்டிவிடும்.

இளைஞர்கள் என்ன செய்யவேண்டும்?

‘யதார்த்த உலகின் தன்மையும் அதைப் பற்றிய நம்முடைய புரிதலும் ஒரே தளத்தில் இருக்குமாயின், எதார்த்த உலகத்தின் சிக்கல்களால் நாம் கைவிடப்பட்ட நிலைக்குச் சென்று செய்வதறியாது திகைக்கமாட்டோம்' என்ற மாவோவின் வரிகள் உலகினை மாற்ற aத்தனிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

சமூக மாற்றத்தை நோக்கி லட்சியப் பயணத்தில் இருக்கும் இளைஞர்களுக்குத் தோல்விகளைப் புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

நம்மால் ஜெயிக்க முடிய‌வில்லை என்றால் நம்மை நாமே ஏன் குறை சொல்ல வேண்டும்? ஒரு செயலைச் செய்வதற்கான சூழல் உகந்ததாக இல்லையென்றால், அந்தச் சூழலுக்கேற்ப நம் செயலை மாற்றியமைக்க வேண்டும். நம் லட்சியங்களை அடைய முடியாத போது, புதிய புரிதலோடு சூழ்நிலையை மறுஆய்வு செய்து கொள்ள வேண்டும். நிரந்தரமான, முழுமையான தோல்விகள் என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் பாடங்களாக நாம் எடுத்துக்கொண்டோம் எனில் சமூக மாற்றத்திற்கான லட்சியப் பாதையை நோக்கி நாம் நடக்க முடியும்.

நமக்கு முத்துக்குமார்கள் வேண்டும். செங்கொடிகள் வேண்டும். விக்னேஷ்கள் வேண்டும். உயிராயுதங்களாய் அல்ல. பல தீப்பந்தங்களை ஏற்றி, எரிமலையாய் வெடித்துச் சிதறத் தயாராக இருக்கும் இளைஞர்களை அணிதிரட்டிச் சமூக மாற்றத்தை நோக்கி நடை போட!

கட்டுரையாளர், மனநல மருத்துவர். தொடர்புக்கு: spartacus1475@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x