Last Updated : 19 Aug, 2016 12:21 PM

 

Published : 19 Aug 2016 12:21 PM
Last Updated : 19 Aug 2016 12:21 PM

அடுத்த பரோட்டா சூரி யார்?- கல்லிடைக்குறிச்சியைக் கலக்கிய போட்டி

‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தில், நடிகர் சூரி ஒரு ஓட்டலில் பரோட்டா போட்டியில் பங்கேற்பார். 50 பரோட்டாக்களைச் சாப்பிட்டு முடித்ததும், கடைக்காரர் அதை ஒப்புக்கொள்ளமாட்டார். ‘நீங்க கள்ளாட்டம் ஆடுறீங்க. கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்று சொல்லி ஓட்டல் முதலாளியைக் கலங்கடிப்பார். பார்ப்பதற்குச் சிரிப்பை வரவழைத்த இந்தக் காட்சி இப்போது நிஜமாகவே திருநெல்வேலியில் நடந்தேறியிருக்கிறது.

‘நம்ம ஊரு புரோட்டா சூரி யார்?’ என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடைபெற்ற ஊர் கல்லிடைக்குறிச்சி. அங்குள்ள ‘நாச்சியார் அசைவ தர்பார்’ ஓட்டலில்தான் இந்தப் போட்டி ஆகஸ்ட் 8-ம் தேதி கலகலப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த பரோட்டா போட்டிக்காக ஏதோ கிரிக்கெட் போட்டி அளவுக்குக் கலர் கலராக விளம்பரமும் செய்யப்பட்டிருந்தது. போட்டி என்றால், நிபந்தனைகள் இல்லாமல் இருக்குமா? போட்டிக்காக ஏகப்பட்ட நிபந்தனைகள் அடுக்கப்பட்டன.

போட்டியில் அதிக பரோட்டாக்களைச் சாப்பிட்டு வெற்றி பெறும் நபர்களுக்கு 5001 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை மட்டுமே நடைபெறும். அதன்பின் போட்டியில் பங்கேற்க யாருக்கும் அனுமதி கிடையாது. போட்டிக்காக ஓட்டலில் மைக் செட் கட்டப்பட்டு, போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருந்தது. மிக முக்கியமாகப் போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான முழுத் தொகையைச் செலுத்திவிட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஒருவேளை போட்டியில் பங்கேற்றுச் சாப்பிடுபவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்றும் கருணையுடன்கூடிய நிபந்தனையும் கூடவே விதிக்கப்பட்டிருந்தது.

கல்லிக்கடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் பங்கேற்க அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். குறிப்பாக 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கொஞ்சம் அதிகமாக வந்திருந்தார்கள். போட்டி தொடங்கியது; பரோட்டாக்களைப் பிய்த்துப்போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்தார்கள். போட்டியாளர்கள் சாப்பிட்ட பரோட்டாக்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ள ஆட்கள் தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர். காலை, மதியம் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்த நிலையில் மாலை ஆறு மணிக்கு மேல் கூட்டம் கூட ஆரம்பித்தது. போட்டியில் பங்கேற்க இடம் கிடைக்காதவர்களுக்கு டோக்கன் கொடுத்துப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்பவர்களைவிட போட்டியைக் காணப் பெருங் கூட்டம் கூடியிருந்தது. இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர் மிக அதிகமாக 42 பரோட்டாக்களைச் சாப்பிட்டு 5 ஆயிரம் ரூபாய் பரிசைத் தட்டி சென்றார். அவரே ‘பரோட்டா சூரி’யாகவும் அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை மணிகண்டன் என்பவர் பிடித்தார். இவர் 36 பரோட்டாக்களைச் சாப்பிட்டார்.

வித்தியாசமான இந்த பரோட்டா போட்டியை நடத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஓட்டல் நிர்வாகி மோசஸ் என்ற பாஸ்கரனிடம் பேசினோம், “இந்த ஓட்டலை 4 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கினேன். போன மாசம் எங்கள் ஓட்டலில் 7 இளைஞர்கள் சேர்ந்து தங்களுக்குள் பரோட்டா போட்டி வைத்துச் சாப்பிட்டார்கள். அதைப் பார்த்துதான் பரோட்டா போட்டி வைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நடிகர் சூரி நடித்த பரோட்டா காமெடி காட்சி மிகவும் பிரபலம் என்பதால், ‘அடுத்த பரோட்டா சூரி யார்?’ என்ற பெயரில் போட்டியை நடத்தினோம். போட்டியில் 60 பேருக்கு மேலே கலந்துகிட்டாங்க. போட்டி நடந்த அன்று கூடுதலாக 10 பேரை வேலைக்குப் போட்டிருந்தேன். கூடுதலாக இரண்டு பரோட்டா மாஸ்டர்களை நியமித்திருந்தேன். வழக்கமாக ஓட்டலில் 40 கிலோ அளவுக்குப் பரோட்டா செய்வோம். போட்டி அன்னைக்கு 80 கிலோ மாவில் பரோட்டா செய்தோம்” என்று பெருமையாகப் பேசினார்.

போட்டியை வைக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x