Published : 19 Aug 2016 12:35 PM
Last Updated : 19 Aug 2016 12:35 PM
"ஒரு முறை அப்பா என்னிடம் 'சென்னையில் நடிகர்களின் கலை நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்' என்றார். அந்த ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றைக்கு அவர் மகனுடைய கடையை ஒரு நடிகர் திறந்து வைத்திருக்கிறார் என்பது அவருக்குக் கூடுதல் சந்தோஷம். அவருடைய சின்ன ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் பெரிய ஆசையை நிறைவேற்றி இருக்கிறேன்!" என்று ஒரு திருப்திப் புன்னகையுடன் தான் கடந்து வந்த பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தேவ்.
"தேவராஜ் என்பதுதான் என் ஸ்கூல் சர்டிஃபிகேட்களில் இருக்கும் முழுப் பெயர். தொழிலுக்காக தேவ்! படித்தது, வளர்ந்தது அனைத்துமே கோயம்புத்தூரில். எனது அக்காவின் தோழிகள் வந்தாலே, நான் வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்வேன். ஏன்னா, ‘டென்த்' வரைக்கும் நான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல்லதான்.
எங்கப்பா 10 ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுவார்ன்னும் சின்ன வயசுலேயே எனக்குத் தெரியும். எம்.பி.ஏ. முடிச்சிட்டு பிஸினெஸ் பண்ணணும்கிறதுதான் என் திட்டம். என் அப்பாவும் முடிவெட்டும் கடைதான் வைத்திருந்தார். அதுபோக ரியல் எஸ்டேட்டும் பண்ணினார். அந்தக் காலத்தில் முடிவெட்டுபவர் என்றாலே சமூகத்தில் மதிப்பும் வருமானமும் ரொம்பக் குறைவுதான். அந்தச் சூழலுக்குள் நானும் வந்துடக் கூடாதேன்னு என்னை ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். கடைப் பக்கம் போனாலே, ‘இதெல்லாம் உனக்கு எதுக்கு. என்னோடு இது போகட்டும். நீ நல்லா படி'ன்னு சத்தம் போடுவார்.
தேவ் : படம்:எல்: ஸ்ரீநிவாசன்
காலேஜ் டைம்ல, என்னுடைய பெண் தோழிகளிடம் 'இப்படிப் பொட்டு வைக்காலாமே, தலையை இப்படிச் சீவலாமே'ன்னு 'ஃபேஷன் டிப்ஸ்' கொடுத்திட்டிருப்பேன். முதல்ல விளையாட்டாப் பார்த்தவங்க, அப்புறம் அவங்களே, 'நீ ஏன் ஒரு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகக் கூடாது?'ன்னு கேட்டாங்க.
காலேஜ் முடிச்சவுடனே அப்பாகிட்ட எதுவும் சொல்லாம, கொஞ்சம் பணத்தை வாங்கிட்டு மும்பைக்கு ரயில் ஏறலாம்னு முடிவு பண்ணேன். ஏன்னா ‘விருமாண்டி' படத்துக்காக கமல் சாரின் ‘லுக்'கை டிசைன் பண்ண மும்பையிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவரிடம் சேர்ந்து, அந்த வேலையை நாமும் கத்துக்கலாம்னு நினைத்தேன். ஆனா, எனக்கு இந்தி தெரியாது. அதுவே நான் மும்பை போகாம தடுத்துருச்சு.
அப்போதான் சென்னையில் இருந்த என் அக்காவின் கணவர் மூலமா ஒரு ஹேர் ஸ்டைலிங் நிறுவனம் ஒன்றைக் கேள்விப்பட்டு அங்கே சேர்ந்தேன்.
கோர்ஸ் முடிச்சிட்டு 'லைம்-லைட்'ங்கிற சலூனில் வேலைக்குச் சேர்ந்தேன். 4 ஆயிரம் ரூபாய் சம்பளம். அங்க வெளிநாட்டிலிருந்து நிறைய பேர் 'ஹேர் ஸ்டைலிங்' பண்ண வருவாங்க. அந்த மாதிரி ஹேர் டிசைனிங் நாமும் கத்துக்கணும்னு யோசிச்சேன்.
அதுக்குப் பிரபல ஹேர் ஸ்டைலிங் நிறுவனமான 'டோனி அண்ட் கை'யில் சேர்ந்து படிக்க வேண்டும். ஏன்னா, இந்த ஃபீல்டுல அதுதான் பெஸ்ட் அப்படிங்கிறது என் எண்ணம். ஆனா அந்தச் சமயம், இந்தியாவில் அந்தக் கல்லூரி கிடையாது. சிங்கப்பூர் போய்ப் படிச்சிட்டு வந்தேன்.
ஆரம்பத்திலிருந்து இப்போது வரை நான் எந்த ஒரு கஸ்டமரையும் சாதாரணமா நினைக்க மாட்டேன். ஏன்னா, ஒருத்தர் மூலமா இன்னொரு கஸ்டமர் வருவார்ங்கிறது என் நம்பிக்கை. ஹேர் ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை காரில் வருபவர்களை அதிகமாகக் கவனித்தால் அதிக ‘டிப்ஸ்' கிடைக்கும்கிற ஒரு தப்பான எண்ணம் இருக்கு. எனக்கு எல்லாருமே ஒன்னுதான்.
அப்போ எல்லாம் ‘எப்படா பிரபலங்களுக்கு ஹேர் டிசைனிங் பண்ணுவோம்?'கிற ஏக்கம் இருக்கும். 5 வருஷம் காத்திருந்தேன். என் காத்திருப்புக்குப் பலன் 2010-ம் ஆண்டு சென்னையில் திறக்கப்பட்ட 'டோனி அண்ட் கை' நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்க நிறைய பிரபலங்கள் வருவாங்க. அப்படித்தான் பாடகர் விஜய் ஜேசுதாஸ் எனுக்குப் பழக்கம். அவர் மூலமா ‘மயக்கம் என்ன' படத்துக்கு தனுஷுக்கு முடி வெட்டணும்'னு கூப்பிட்டாங்க. போயஸ் கார்டன் வீட்டுக்குப் போகும்போது எல்லாம் கை உதறியது. என்னைப் பார்த்தவுடன் ‘தேவ் என்றவுடன் ஏதோ வெளிநாட்டுக்காரர் வருவாரோ என நினைத்தேன்' என்றார் தனுஷ் சார். அவர்தான் என் கடையையும் திறந்து வைத்தார். இப்படித்தான் ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தர் எனக்குப் பழக்கம் ஆனாங்க. இப்போ 15 'செலிப்ரிட்டிஸ்' என் கஸ்டமர்ஸ்.
இந்த சிகைதிருத்தும் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும். அதுதான் என் லட்சியம். கிராமங்கள்ல சிகைதிருத்துபவர் வெளியவே வராமல் இருப்பார். அவர்களின் பிள்ளைகள், பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு அப்படியே கடையிலேயே தங்கள் ‘கரியரை' ஆரம்பிப்பாங்க. அவங்க வாழ்க்கை அப்படியே போயிடும். அந்த நிலை மாறணும். அவங்களுக்கெல்லாம் நான் ஒரு ‘இன்ஸ்பிரேஷன்' ஆக இருந்தா போதும்.
என்னை மாதிரி ஹேர் ஸ்டைலிங் செய்யும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான். ‘இது நம்ம ‘தல' சார்!'ன்னு செய்யுற வேலையை முதலில் மதிங்க. அதுவே உங்களை உயரங்களுக்குக் கூட்டிட்டுப் போகும்!"
சொல்லிவிட்டு, அடுத்த கஸ்டமரை நோக்கி ஓடுகிறார் தேவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT