Published : 06 Jan 2017 11:32 AM
Last Updated : 06 Jan 2017 11:32 AM

மழை வெள்ளம் தந்த ‘மைக்ரோ’ படை

இயற்கை சீறும்போது, வலியுடன் சேர்த்துப் பலவிதமான அனுபவங் களையும் படிப்பினையையும் நமக்குத் தந்துவிடுகிறது. கடந்த ஆண்டு, சென்னையைப் புரட்டிப்போட்ட மழையும் வெள்ளமும் சென்னைவாசிகளின் மனிதாபிமானத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.

அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்றுகூடத் தெரிந்துகொள்ளப் பிரியப்படாதவர்கள் எனக் கருதப்பட்ட சென்னை வாசிகள் தெருக்களைக் கடந்து உதவிக்கரம் நீட்டி ஓடினார்கள். இதனால் எங்களுக்கு என்ன நன்மை என்று யோசிக்காமல், இரவு பகல் பார்க்காமல், கண் விழித்தது சென்னையின் இளைஞர் பட்டாளம். சென்னை இயல்புக்கு வந்ததும் இவர்களும் இயல்புக்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால், ‘சென்னை மைக்ரோ’ இளைஞர்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“மழை - வெள்ளம் உக்கிரமா இருந்த அன்னைக்கு ராத்திரி முழுக்க நாங்க 40 பேர் ஓடினோம். தண்ணீரில் தத்தளித்த மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். பொழுது விடிஞ்சதும் எங்களோடு 2,000 இளைஞர்கள் கைகோத்திருந்தாங்க. அவர்களைத் துணைக்கு வைச்சுக்கிட்டுப் பத்து நாள் சென்னை மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செஞ்சோம். குஜராத் பூகம்பம், ஆழிப்பேரலை நிகழ்வுகளின்போது களப்பணி செய்த ‘பூமிகா’, ‘எய்டு இந்தியா’ போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவியோட சென்னையில் மட்டுமில்லாமல் கடலூர், நெய்வேலி, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தன்னார்வ இளைஞர்களைக் களமிறக்கினோம்” என்கிறார் ‘சென்னை மைக்ரோ’ இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜி.

தொலைநோக்குத் திட்டங்கள்

மழை - வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பணியில் இவரோடு பின்னணிப் பாடகி சின்மயி, நடிகர் சித்தார்த், கல்பாத்தி அர்ச்சனா போன்றோரும் இணைந்தார்கள். இவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வெள்ளப் பாதிப்பின் சோகத்தைத் தங்களது நண்பர்களுக்குப் பகிர்ந்தார்கள். பகிர்தலைப் பார்த்தவர்களில் பலரும் தாராளமான நிதியளிக்க முன் வந்தார்கள். கடல் கடந்தும் நிதி குவிந்தது. அந்தச் சமயத்தில் மழை - வெள்ளத் தாக்கத்திலிருந்து முற்றாக விலகிவிட்டது சென்னை. ஆனாலும், அந்த நிதியைக் கொண்டு தொலைநோக்கில் திட்டங்களைச் செயல்படுத்த இவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அதற்காக இவர்கள் உருவாக்கியதுதான் ‘சென்னை மைக்ரோ’ அமைப்பு. இதில் சென்னையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இளைஞர்கள் அறிவிக்கப் படாத உறுப்பினர்களாக இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று எங்களுக்குள் எந்தத் திட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், நண்பர்கள் தந்த நிதியானது நூற்றுக்கு நூறு சதவீதம் பாதிக்கப்பட்ட நபர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ப பணிகளைச் செய்கிறோம்’’ என்கிறார் பாலாஜி.

புதுப்பொலிவுடன் வீடுகள்

‘சென்னை மைக்ரோ’ இளைஞர்களின் முயற்சியில், கடலூர், நெய்வேலி, கல்பாக்கம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மழை நீர் வடிந்த பிறகு இந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வரை சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் வசதிகளைச் செய்துதந்து, தொற்றுநோய்கள் பரவாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இதற்கு அடுத்தபடியாக, சென்னைக்கும் சென்னைக்கு வெளியிலும் மழையால் பாதிக்கப்பட்ட 11 ஆதரவற்றோர் இல்லங்கள் இவர்களால் புதுப்பொலிவு பெற்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளைப் பாதுகாப்பதற்கும் இவர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள். செங்குன்றம் பகுதியில் பலவகையான விலங்குகள் அடைக்கலம் கொண்டிருந்த ‘பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ்’ இல்லத்தையும் இந்தக் குழு சீரமைத்திருக்கிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சுரங்க நீர் புகுந்து நிலங்கள் கரிக்காடாயின. இந்தக் கிராமங்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பணியாற்றி சுமார் ஆயிரம் ஏக்கரில் மூடிக் கிடந்த கரிப் படலத்தை வெட்டி வெளியேற்றியிருக்கிறது ‘சென்னை மைக்ரோ’ படை.

இந்தப் புயலின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் இவர், “புயலின் போது எனக்கு போன் செய்த ஒரு பெண்மணி, ‘பாலாஜி எங்க இருக்கீங்க.. எங்க வீட்டு வாசல்ல மரம் விழுந்து கிடக்கு. கொஞ்சம் அப்புறப்படுத்திக் கொடுக்க முடியுமா?’ன்னு அதிகாரமா கேக்குறாங்க. எங்க வீட்டு வாசல்லயும் மரம் விழுந்து கிடந்துச்சு. அதை நானும் நண்பர்களும் சேர்ந்துதான் அப்புறப்படுத்தினோம். நம்மோட வீட்டு வாசல்ல விழுந்திருக்கிற மரத்த அப்புறப்படுத்த இன்னொருத்தன் வரணும்னு நினைக்காம நம்மளே இறங்கி அந்த வேலையைச் செய்யணும்கிற எண்ணம் நம்ம மக்களுக்கு எப்ப வரும் பாஸ்?’’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்.

‘சென்னை மைக்ரோ’ படையின் அடுத்த இலக்கு சென்னையின் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தியோடு கைகோப்பது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x