Published : 28 Apr 2017 10:08 AM
Last Updated : 28 Apr 2017 10:08 AM
இன்றைய இளைஞர்கள் தங்களுடைய அறச்சீற்றத்தை, தார்மீகக் கோபத்தை, சமூக அநீதிகளுக்கு எதிரான குரலை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகிறார்கள். மீம்ஸ் போடுவது, குறும்படம் எடுப்பது எனத் தங்களுடைய விமர்சன ஆயுதங்களை அப்டேட் செய்துகொண்டேபோகிறார்கள். இவை மேலோட்டமான கேலியும் கிண்டலுமாகத் தோன்றினாலும் அவற்றுக்குள் தீவிரமான சிந்தனை இழையோடுவதையும் கவனிக்க முடிகிறது! அர்த்தமற்ற போக்கை அவர்கள் அதே பாணியில் எள்ளிநகையாடுகிறார்கள். அந்த வகையில் சோஃபியா தேன்மொழி அஷ்ரஃப் தேர்ந்தெடுத்திருப்பது ராப் இசையை.
சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் பாடிச் சாடிய ‘கொடைக்கானல் வாண்ட்’, அரசியல் அத்துமீறலை மடை திறந்து தாவும் ராப்பில் கண்டித்த, ‘என் ஓட்டு உனக்கில’, உள்ளிடவை அவருடைய வைரல் ஹிட்ஸ். இப்படி ஒவ்வொரு முறையும் அதிகார மையத்துக்கு நேருக்கு நேர் நின்று சவால்விடுகிறார் சோஃபியா. தீவிரமான பெண்ணியச் சிந்தனையை நகைச்சுவையான இசைக் கலவையில் தருவதில் கில்லாடி இந்த‘லேடி’.
சமீபகாலமாக இணையத் தலைமுறையினருக்காகவே சுவாரசியமான டிஜிட்டல் நிகழ்ச்சிகளைத் தயாரித்துவருகிறது கல்சர் மிஷின் (Culture Machine) நிறுவனம். இதில் நையாண்டியும் நக்கலுமாக ‘ஸிஸ்டா ஃப்ரம் தி ஸவுத்’ (‘Sista From The South’) என்ற தலைப்பில் இசை வீடியோக்கள், குறும்படங்கள், நகைச்சுவை உரையாடல்கள் எனப் புதிய முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார் சோஃபியா. அதில் தற்போதைய வைரல் ஹிட் ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ வீடியோ பாடல்.
ஒரு நாள் தோழிகளோடு கலகலப்பாக ஆடிப் பாடிக் கொண்டாடிவிட்டுக் கவர்ச்சியாக ஒரு செல்ஃபி எடுக்க முயன்றபோதுதான் அது புரிந்தது என்கிறார் சோஃபி. கிட்டத்தட்ட 50 கிளிக் செய்தும் ஒன்றுகூட எதிர்பார்த்த மாதிரி கவர்ச்சியாக வரவில்லை. இதனால் ஒரு விதமான மனச்சோர்வு உண்டானது. “அட! இன்றைய பெண்கள் எப்படியாவது கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்க இப்படித்தானே நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்!” என்பது அந்த நொடியில் உறைத்தது. இந்தப் போக்கை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் ‘ஐ காண்ட் டூ செக்ஸி’ பாடலுக்கான லீட் கிடைத்தது.
பெண்ணின் உடலை வர்ணிப்பதும் கேலிசெய்வதும் பழகிப்போன ஒன்றாக இச்சமூகத்தில் மாறியுள்ளது. அதை இத்தனை காலம் லாவகமாக ஆண்கள் செய்துவந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை பெண்ணின் உடல் குறித்த உரையாடலை சோஃபியா என்ற பெண்ணே தன் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் வேறுவிதமாக! கண்ணாடி போட்டுக்கொள்வது, ஹீல்ஸ் காலணி அணிவது, சேலை கட்டுவது போன்றவை ஈர்ப்பை அதிகரிக்கப் பெண்கள் மீது திணிக்கப்படுவதை இந்தப் பாடல் மூலம் அவர் அட்டகாசமாகக் கேலி செய்கிறார். பெண்ணின் உடல் அங்கங்களின் அளவைக்கூடத் தீர்மானிக்கும் ஆண் ஆதிக்கச் சிந்தனையைக் கேலியாகக் கண்டிக்கிறார். “நான் கவர்ச்சியாக இல்லை. அதை நான் காண்பிக்கவும் செய்வேன்” என அறைகூவல் எழுப்புகிறார்.
முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பாடப்பட்டாலும் சோஃபியாவின் ராப் உச்சரிப்பும், பிரஷாந்த் டெக்னோவின் குத்து பிளஸ் மேற்கத்திய இசைக் கலவையின் அமைப்பும் பாடலை ஜனரஞ்சகமாக்கியுள்ளன. கடைசியில் ‘ஐ…ஐயோ’ எனப் பாடித் தமிழ்ப் பெண்ணின் முத்திரையைக் கொடுக்கிறார் சோஃபியா.
‘பிளஷ்’ (Blush) போன்ற யூடியூப் சேனல்களுக்கு இளம் பெண் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. அப்படியிருக்க இந்த வீடியோ பாடல் அவர்களுடைய உடல் அரசியல் குறித்த புரிந்துணர்வைக் கூர்மையாக்கக்கூடிய துணிச்சலான, துடிப்புமிக்க முயற்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT