Published : 22 Jul 2016 12:50 PM
Last Updated : 22 Jul 2016 12:50 PM
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’னு ஆங்கிலத்தில்தான் பாடணுமா? இனி கொஞ்சும் தமிழில் பாடலாமே என்கிறது ‘நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்’ பாடல். ஐந்து வருடங்களுக்கு முன்பே தான் எழுதிய இந்தப் பாடலை நண்பர்கள் உறவினர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம் பாடியிருக்கிறார் பாடலாசிரியர் அறிவுமதி. அப்போது சிலருடைய காதுகளையும் மனதையும் மட்டுமே வருடிய இந்தப் பாடல் இப்போது வீடியோ பாடலாக இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
குழந்தைத் தமிழ் எளிய இசை
“குழந்தைகளுக்கான கதைகளோ பாடல்களோ தமிழ்ச் சூழலில் முற்போக்காக இல்லை என்கிற கவலை எனக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. ஐந்து வருடங்களாக அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பாடலைப் பாடுவேன். ஒரு கட்டத்தில் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி ‘நாம் ஏன் இந்தப் பாடலை இசையமைத்துத் தயாரிக்கக் கூடாது?’ என என்னிடம் கேட்டார். உடனடியாக இசையமைப்பாளர் அருள் கரோலியோடு இணைந்து குழந்தைத் தமிழில் எளிமையான இசை வடிவில், ‘தமிழ் பிறந்தநாள் பாடல்’யை உருவாக்கினோம்” என உற்சாகமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.
பிசாசு படத்தில் ‘நதி போகும் கூழாங்கல்’ என்கிற ஆத்மார்த்தமான பாடலை உத்ரா உன்னி கிருஷ்ணனின் தேன் சொட்டும் குரலில் வார்த்தவர் அருள் கரோலி. மீண்டும் அதே மாயாஜாலத்தை இந்தப் பாடலிலும் கொண்டுவந்திருக்கிறார். “குழந்தைகளுக்கான பாடல் என்பதாலேயே ரொம்பவும் யோசிக்கலை. வாயைத் திறந்தவுடன் பாடுற மாதிரி இருக்கணும்னு எடுத்த எடுப்பில் மனதில் உதித்த மெட்டைப் போட்டேன்” என்கிறார் அருள் கரோலி. பொதுவாக நம் ஊரிலேயே வாழ்பவர்களைவிட வெளிநாட்டில் குடியேறி யவர்கள் தமிழ் மீதும் தமிழர் பண்பாடு மீதும் அதிகமான பற்றுடன் இருப்பதாகத் தனக்குத் தோன்றும் எனச் சொன்ன அருள், இந்த இசை ஆல்பத்தைத் தயாரித்ததன் மூலம் பார்த்தசாரதி அதை நிரூபித்துவிட்டார் எனப் பாராட்டுகிறார்.
உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குப் பரிசு
கடந்த ஆண்டே பதிவு செய்யப்பட்டுவிட்டது ‘தமிழில் பிறந்தநாள்’ பாடல். ஆனால் ஜூலை 3 அன்றுதான் அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. வலைத்தமிழ்.காம் இணையதளத்திலும் அன்றே வெளியானது.
பல மாதங்களுக்கு முன்பே இசைப் பதிவு செய்துவிட்டதால் இணையதளத்தில் வெளியான இந்த வீடியோ பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் முதலில் பார்க்கவில்லை. பாடல் வைரலாகி நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அதைப் பகிர்ந்த பிறகு தன்னுடைய 50-வது பிறந்தநாளான ஜூலை 9 அன்று பார்த்ததாகச் சொல்கிறார். “என்னுடைய பிறந்தநாளில் அந்த வீடியோவைப் பார்த்தபோது என்னுடைய குழந்தை எனக்காகவே பாடியதுபோல உணர்ந்து நெகிழ்ந்துபோனேன்” என்கிறார் உன்னி கிருஷ்ணன்.
உத்ராவின் குழந்தைத்தனம் மாறாத குரல் இப்பாடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. அதிலும் அவர் பாடுவதை வீடியோவில் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியாது. இதில் இன்னொரு சிறப்பு கோபிசெட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளி காலை வணக்கத்தின்போது அத்தனை மாணவர்களும் இந்தப் பாடலைப் பாடும் காட்சியாகும். எல்லோரும் பார்த்துக் கேட்டு ரசிக்கும்படியாக வீடியோ பதிவை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் தமிழ்தம்பி, தொகுப்பாளர் எம்.சந்தீப்பும் பாராட்டுக்குரியவர்கள்.
மொத்தத்தில், உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் பிறந்தநாள் பரிசு இந்தப் பிறந்தநாள் பாடல்.
பாடலை காண: >www.valaitamil.com/tamilbirthday
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment