Last Updated : 03 Mar, 2017 10:54 AM

 

Published : 03 Mar 2017 10:54 AM
Last Updated : 03 Mar 2017 10:54 AM

செந்தூரா பூவே!

எக்கச்சக்கப் பாடல்கள் தினந்தோறும் நம் செவிப்பறையை அறைகின்றன. அவற்றில் செம்ம ‘கேட்சி’யாக இருப்பவற்றை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனாலும் “இதைப் பாடுனது யாரு?” எனக் கேட்கத் தோன்றியதே இல்லை. சில பாடல்களைக் கேட்கும்போதே “செம்ம வாய்ஸ் சான்ஸே இல்ல…” என்போம். ஆனால் நமக்குத் தெரிந்த பாடர்கள்தான் இதையும் பாடியிருப்பார்கள் என முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிடுவோம். ஆனால் சில குரல்களில் உள்ள தனித்துவம், “இது வேற லெவல் வாய்ஸ்…” எனச் சொல்லவைத்து அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரைத் தேடவைக்கும். அப்படி ‘செந்தூரா’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் பலருக்குத் தோன்றியிருக்கும். ‘யார் இந்த வசீகரக் குரலி’ எனத் தேடியபோது கிடைத்தார், லஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

கனடா குயில் கோடம்பாக்கத்தில்

மேற்கத்திய இசை ரகமான ‘ரொமாண்டிக் மெலடி’ வகைப் பாடல்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அப்படிப்பட்ட ‘ரொமாண்டிக் மெலடி’யை ‘மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா’ போன்ற தாமரையின் அழுத்தமான வரிகளைக் கொண்டு இனிமையாகத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் டி. இமான். அதிலும் லக்ஷ்மியின் குரல்வளத்தின் ஆழமும் ஒவ்வொரு வரியின் முடிவில் அவர் லாவகமாகக் கொடுக்கும் அசைவுகளும் பாடலுக்கு மேலும் அழகுகூட்டுகின்றன.

இஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் தன் ‘கவர் சாங்கஸ்’-ஐ பகிர்ந்து பிரபலம் அடைந்த இவரை ஃபேஸ்புக்கில் பிடித்து வாட்ஸ் ஆப் கால்செய்து பேசினோம். நுனி நாக்கு ஆங்கிலத்தோடு தொடங்கிய உரையாடலைக் குறுக்கிட்டு “நீங்கள் தமிழ்தானே” எனக்கேட்டபோது, தெரியவந்தது இலங்கை தமிழரான இவர் பிறந்து வளர்ந்து தற்போது வசிப்பதும் கனடாவின் டொராண்டோ நகரில்.

கனடா குயிலுக்குக் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு எப்படி?

“மூன்று வயசுல கர்நாடகச் சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன். எட்டு வயசுல முதல் இசைப் போட்டியில் கலந்துக்கிட்டு ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடினேன். அதுல பரிசு கிடைக்கல. ஆனாலும் தமிழ் சினிமா இசை மேல ஆர்வம் வளர ஆரம்பிச்சுது. அதுக்கப்புறம் வெஸ்டர்ன் கிலாச்சிக்கல் மியூசிக்கும் கத்துக்கிட்டேன். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மியூசிக் வாய்ஸ் பெர்ஃபாமண்ஸ் டிகிரி படிச்சேன். அடுத்தடுத்து எனக்குப் பிடிச்ச சினிமா பாடல்களைப் பாடி இஸ்டிகிராமில் போஸ்ட் செய்தேன். 2016-ன் தொடக்கத்துல வெறும் 15 செக்கண்ட்ஸுக்கு ஒரு பாடலைப் பதிவுபண்ணி இசையமைப்பாளர் இமானுக்கு அனுப்புனேன். அப்போ எந்தப் பதிலும் வரலை” என்று தன் ‘மைக்ரோ’ ஃப்ளாஷ்பேக்கைச் சொன்னார் லக்ஷ்மி.

சகலகலா தாரகை

மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் லக்ஷ்மியின் குரல் பதிவை இன்ஸ்டாகிராமில் கேட்ட இமான் அவரை வேறு புதிய வகை பாடல் மாதிரிகளைத் தனக்கு அனுப்பும்படிச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சமூகவலைத்தளத்திலேயே குரல்தேர்வு பல கட்டங்களில் நடந்தது. அதன்பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதற்காக சென்னைக்கு லக்ஷ்மி வந்திருந்தபோது, இமானின் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குச் சென்றார்.

“ஸ்டூடியோவில் தாமரையும் இமானும் இருந்தாங்க. டியூன் ரொம்ப கேட்சியா இருந்ததால உடனே பிடிச்சுக்கிட்டேன். ஆனால் தமிழ் படிக்கத் தெரிந்தாலும் உச்சரிப்பில் தடுமாறினேன். தாமரை எனக்கு வரிக்கு வரி புரியவைத்தார். இமான் ரிலாக்ஸ்டா பாடச் சொல்லி ஊக்கப்படுத்தினார். ஒரே நாளில் முழுப் பாடலை ரசித்துப் பாடி முடிச்சேன்” என உற்சாகமாகப் பேசுகிறார்.

‘செந்தூரா’ பாடலைக் கேட்டு லக்ஷ்மிக்கு ஏகோபித்த பாராட்டுக்கள் வந்து குவிகின்றன. அதிலும், அதே படத்தில் ‘வாராய் வாராய்’ பாட்டு எழுதிய மதன் கார்கி, “இந்தப் படத்திலேயே எனக்குப் பிடித்தப் பாடல் செந்தூராதான்” எனப் பாராட்டியதைப் பெருமிதமாகச் சொல்கிறார்.

இவர் ஒரு பியானோ மற்றும் வீணைக் கலைஞரும்கூட. தொடர்ந்து கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய செவ்வியல் இசையையும் பயின்று வருகிறார். அதே நேரத்தில் இசையைக் கற்றுத் தரவும் செய்கிறார். பரதத்திலும் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

கனடாவில் வாழ்ந்தாலும் எப்போதுமே தமிழ் இசையோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறார். பிரிட்டனில் நடைபெற்ற ‘ஐ.பி.சி. இன்னிசைக் குரல்’, சிங்கப்பூரில் ‘சூப்பர் சேலஞ்ச்’, டொராண்டோவில் ‘கானக் குயில்’ போன்ற தமிழ் இசைக்கான சர்வதேசப் போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறார். விளம்பரப் படங்களில் ஜிங்கிள்ஸ், டொராண்டோவின் வானொலி நிகழ்ச்சிகளில் பாடுவது எனத் தன்னுடைய திறமை வெளியை விரித்துக் கொண்டே போகிறார் இந்த இசைப் பூ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x