Published : 10 Feb 2017 11:09 AM
Last Updated : 10 Feb 2017 11:09 AM
‘யாருப்பா நீங்க?’, ‘வா ராசா வா!’, ‘இவ்வளவு நாளா எங்கேப்பா இருந்தீங்க?’ என்றெல்லாம் சமூக ஊடகங்களைப் புலம்ப வைத்துவிட்டது ‘வந்தேறி மாடு’ ஃபேஸ்புக் பக்கம். ‘நாட்டு சாதி மாடுகளை அடியோடு அழிக்க வந்த வந்தேறி மாடு’ என்ற பிரகடனத்துடன் உள்ளூருக்குள்ளேயே ஏரோப்ளேனில் இறக்குமதியாகியிருக்கிறது இந்த மாடு.
‘வந்தேறி மாட்’டின் ஃபேஸ்புக் பக்கத்தின் சுவர்ப் படமாக, ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ காமெடியின் ஸ்கிரீன்ஷாட் வைக்கப்பட்டிருக்கிறது, ஒரு முக்கியமான மாற்றத்துடன். பார்த்திபனுக்கும் வடிவேலுக்கும் நடுவே உள்ள பலகையில் மீன் விற்கும் வாசகத்துக்குப் பதிலாக ‘இங்கு அனைத்து ஜாதிகளும் வைத்து செய்யப்படும்’ என்று எழுதப்பட்டிருக் கிறது. அதைப் போலவே செய்கிறார்கள்.
அதிநவீன யுகம் என்று கருதப்படும் ஃபேஸ்புக் யுகத்தில் சமீப காலத்தில் பல புரட்சிகள், போராட்டங்களில் ஃபேஸ்புக் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்னதான் நாம் அதிநவீனமானாலும் இன்னும் நமக்கு ஒரு விஷயத்தை உதறித் தள்ள முடியவில்லை. அதுதான் சாதி! மிதமான சாதி உணர்வாளர்களும் சரி, தீவிர சாதி வெறியர்களும் சரி, சாதி உணர்வை வலுப்படுத்தவும் சாதி சார்ந்து தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளவுமே ஃபேஸ்புக் என்ற அதிநவீன ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
சாதி போன்ற ஒரு பிற்போக்கான விஷயம் எப்படி ஒரு நவீன தொழில்நுட்பத்தைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறது என்பதைப் பாருங்கள்! இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் சாதியை நம்மால் அழிக்க முடியாதோ என்ற பயம் ஏற்படுகிறது. ஃபேஸ்புக்கை இதுபோன்ற தீமைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு உரிய காலத்தில் கொடுக்கப்படும் பதிலடியாக வந்து சேர்ந்திருக்கிறது ‘வந்தேறி மாடு’. அதாவது அசிங்கத்தை அசிங்கத்தின் குகையிலே சந்திக்கிறது ‘வந்தேறி மாடு’.
ஒவ்வொரு சாதியாகப் போட்டுத்தள்ளிக் கொண்டே வருகிறார்கள். மீம்கள் ஒவ்வொன்றும் முற்போக்காளர்களை குபீரென்று சிரிக்கவும் சாதி வெறியர்களுக்குக் குப்பென்று வியர்க்கவும் வைக்கின்றன. ‘எங்க சாதிய மட்டும் கழுவிக் கழுவி ஊத்துறியே மாடு, அந்த சாதிய ஏன் விட்டுவைக்கிற?’ என்று யாரும் கேட்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவர்கள் மொழியிலேயே முறைவாசல் ‘வைத்துச் செய்கிறார்கள்’.
ஒவ்வொரு சாதியாகப் போட்டுத்தள்ளிக் கொண்டே வருகிறார்கள். மீம்கள் ஒவ்வொன்றும் முற்போக்காளர்களை குபீரென்று சிரிக்கவும் சாதி வெறியர்களுக்குக் குப்பென்று வியர்க்கவும் வைக்கின்றன. ‘எங்க சாதிய மட்டும் கழுவிக் கழுவி ஊத்துறியே மாடு, அந்த சாதிய ஏன் விட்டுவைக்கிற?’ என்று யாரும் கேட்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவர்கள் மொழியிலேயே முறைவாசல் ‘வைத்துச் செய்கிறார்கள்’.
‘மாஸ்டர், எனக்கு சாதிவெறியெல்லாம் இல்லை மாஸ்டர். ஆனா, என் சாதியை வலிக்காம திட்டுங்க மாஸ்டர்’ என்று ஒரு மீமில் ஒருவர் கேட்பதுபோல் வாசகங்கள் இடம்பெற்றி ருக்கின்றன. தன்னை முற்போக்கானவராகக் கருதிக்கொண்டு ஆனால் கூடவே சாதி உணர்வோடு இருக்கும் பலரும் இதுபோன்ற மீம்களுக்கு இலக்காகிறார்கள். சாதியைப் பற்றித் திட்டினால் ஏன் ஒருவருக்கு வலிக்க வேண்டும்? என்ற கேள்வியை இந்த மீம்கள் நம்மிடம் எழுப்புகின்றன. சாதி என்பது புரையோடிப் போன புண். அதற்கு மருந்து தடவியெல்லாம் குணப்படுத்த முடியாது. புண்ணை அடியோடு அறுவை சிகிச்சை செய்துதான் தூக்கியெறிய வேண்டும். ஆகவே, இந்த மீம்ஸ்களால் ஒருவர் புண்படுகிறார் என்றால் அவர் சாதி வெறியராகத்தான் இருக்க வேண்டும் என்று ‘வந்தேறி மாடு’ வெளியிடும் பல மீம்கள் வலியுறுத்துகின்றன.
சாதிகளைப் பற்றிய மீம்கள் பலவற்றில் மீசை, அரிவாள் போன்ற சாதியக் குறியீடுகளெல்லாம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. ஆண்டை பரம்பரை, மன்னர் பரம்பரையினர் என்பது போன்ற பெருமிதங்களையும் வந்தேறி மாடு விட்டுவைப்பதில்லை. ‘ஒடுக்கப்பட்ட சாதிகளை மட்டும் ஏன் விட்டுவைக்கிறீர்கள்”’ என்று கேட்டால் ‘அவர்கள் வாழ்க்கையை நீங்கள் விட்டுவைக்கவில்லை அதனால்தான்’ என்று அசத்தலாகப் பதில்சொல்கிறார்கள். மிகவும் அவசியமான பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸோடு இவர்கள் செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சாதிகள் மட்டுமல்ல; மதங்களும் மதவாதிகளும் அறிவியலுக்கு எதிராக இருப்பவர்களும் ‘வந்தேறி மாட்’டின் கொம்புக்கிடையில் மாட்டிக்கொண்டு அந்தரசந்தரப்படுகிறார்கள். இந்த வகையில் மோடி மிகவும் ‘பயன்’படுகிறார். சமீபத்தில் தடுப்பூசிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்களையும் விட்டுவைக்கவில்லை, ‘தடுப்பூசி போடாமல் இருந்தால் நல்லது. யாருக்கு? வைரஸுக்கு’ என்று சொல்லி அலங்கமலங்க அடிக்கிறார்கள். தங்கள் கிளையை ட்விட்டரிலும் நீட்டியிருக்கிறார்கள். நீ நல்ல வருவ, மாடு!
‘வந்தேறி மாடு’ எந்த மாடு பெத்த புள்ளையோ, எந்த ஊரு மாடோ, எந்த சாதி மாடோ என்றெல்லாம் தெரியாமல் இவரா, அவரா, இல்லை அவரின் அவரா என்று பலரும் விழிபிதுங்கிக் கொண்டி ருக்கிறார்கள். அப்படி எதுவும் தெரியாமல் இருக்கும்வரைதான் இதில் சுவாரசியம் இருக்கும். அடித்துக்கூடக் கேட்பார்கள், பேரைச் சொல்லாதே, வந்தேறி மாடே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT