Published : 28 Nov 2014 12:00 PM
Last Updated : 28 Nov 2014 12:00 PM
மீண்டும் பரபரப்பாகச் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது முத்தம். முத்தம் என்பது தனிப்பட்ட விஷயம் என்பதையும் தாண்டி, ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்தச் சமயத்தில் முத்தம் கொடுப்பது தவறானதா, கலாச்சாரத்திற்கு எதிரானதா என்பதையெல்லாம் தாண்டி வேறு சில கேள்விகளும் நமக்கு எழும்; முத்தம் எப்போது தோன்றியது, ஏன் முத்தம் கொடுக்கிறோம், முத்தத்தின் தேவை என்ன?
முத்தத்தின் வரலாறு
முத்தம் என்றைக்குத் தோன்றியது, முதல் முத்தம் யாருக்கு யாரால் கொடுக்கப்பட்டது, அல்லது எந்த இனக் குழுவுக்கு இந்தப் பழக்கம் இருந்தது என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. மனிதனின் மற்ற செயல்களைப் போல்தான், முத்தமும் இருந்திருக்கும் என்பதால் இதன் வரலாறு குறித்துச் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்திய வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்பு காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆதி மனிதனே முத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இன்றைக்கு அதிகம் பேசப்படும் இதழ் குவித்து ஸ்பரிசிக்கும் முறை பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். அதுபோல முத்தம், மனிதனுக்கு மட்டுமான செயல் இல்லை. மற்ற விலங்குகளும் பறவைகளும்கூட முத்தமிடுகின்றன.
காமத்தின் வெளிப்பாடா?
வெகுகாலம்வரை காமத்தின் வெளிப்பாடாகவே முத்தம் இருந்து வந்திருக்கும். மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கிய காலத்துக்குப் பிறகு முத்தம், அது தரப்படும் நபர்களைப் பொறுத்து மாறுபட்டது. மனிதர்களிடையே உடல் உறவு என்பது மற்ற உயிரினங்களைப் போல எல்லைகள் வகுக்கப்படாததாகத்தான் தொடக்கத்தில் இருந்திருக்கிறது. பிறகு குடும்ப அமைப்பு முறை உலகம் எங்கும் நடைமுறைக்கு வந்தது. ஒரு குறிப்பிட்ட உறவுகளுக்குள் மட்டுமே உடல் உறவு சாத்தியமானது.
இப்போது முத்தம் என்பது தரப்படும் உறவுகளைப் பொறுத்து அன்பை வெளிப்படுத்தும் வடிவமாகப் பார்க்கப்பட்டது. “தாயால், தன் குழந்தைகளுக்குத் தரப்படுவது பரிசுத்தமான அன்பின் வெளிப்பாடனது. தந்தை தருவது குழந்தைகளுக்கு மனவலிமையை அளிக்கிறது” என்கிறார் மனநல மருத்துவரான அருள் பிரகாஷ்.
முத்தம் ஏன்?
தாய், தன் குழந்தைகளை இதழ்களால் ஸ்பரிசிக்கும் செயலின் காரணமாக உருவான நினைவின் வெளிப்பாடுதான் முத்தத்தின் தொடக்கம் என மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அந்தச் சூழ்நிலைகளில் சட்டெனத் தோன்றும் உணர்ச்சி வெளிப்பாடுதான் முத்தம் என்ற கருத்தும் உண்டு. எப்படியாக இருந்தாலும் உளவியல்ரீதியாகப் பார்த்தால் முத்தம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம் என்கிறார் மனநல மருத்துவர் நாகராஜன்.
மேலும் “முத்தம் என்பது மனிதனின் ஆளுமையைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாகவும் இருக்கலாம். குழந்தைப் பருவத்திலிருந்தே முத்தம் என்ற உணர்வையே அனுபவித்துணராத மனிதனுக்கும் அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளின் முத்தத்துடன் வளரும் ஒரு மனிதனுக்கும் உளவியல் ரீதியாக வித்தியாசம் இருக்க சாத்தியம் உண்டு. முத்தம் மனிதனின் மனத்துக்கு ஒரு நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம்” என்கிறார் அவர்.
ஆக, முத்தம் ஒரு மனிதனுக்கு அவசியமான ஒன்று எனலாம். அதுபோல முத்தம் என்பது உணர்ச்சி நரம்புகள் அதிகமாகச் சந்திக்கும் புள்ளிகளில்தான் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் வார்த்தைகளைவிட வலுவான உணர்ச்சியை ஒரு முத்தம் வெளிப்படுத்திவிடுகிறது.
குற்றங்களைத் தூண்டுமா?
முத்தம், ஓர் இயல்பான உணர்ச்சி என்றாலும் கலாச்சாரத்திற்குக் கலாசாரம், நாட்டிற்கு நாடு இது வெவ்வேறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், பொது இடத்தில் காதலர்கள் முத்தமிடுவதால் அது பாலியல் குற்றங்களுக்குத் தூண்டுகோலாகுமா என்றால், இல்லை என மறுக்கிறார் நாகராஜன்.
“ஒரு பெண்ணின் ஆடை விலகுவதால் மட்டுமே ஒருவர் பாலியல் வன்முறை செய்யத் தூண்டப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சினைதான். அதற்கு அவர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பெண்கள் பொதுவெளிக்கே வரக் கூடாது எனச் சொல்ல முடியாது. முத்தமும் அப்படித்தான்” என்கிறார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT