Last Updated : 24 Jun, 2016 02:05 PM

 

Published : 24 Jun 2016 02:05 PM
Last Updated : 24 Jun 2016 02:05 PM

செம ஜாலியா ஒரு பைக் ரைடு

இளமைக்கும் பயணத்துக்கும் எப்போதும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. இளம் வயதில் மனசுக்குப் பிடித்த இரு சக்கர வாகனத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் பயணத்தை நினைத்த மாத்திரத்தில் மனசு றெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிடும்.

புதுப்புது இடங்களைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் பெரும்பாலானோருக்கு இளமை துள்ளி விளையாடும் பருவத்தில் ஏற்படுவது இயல்பு. எல்லோருக்கும் அந்த எண்ணம் ஈடேறாது. சிலர் ஆசைப்படுவார்கள். பின்னர் ஆசையை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள். இன்னும் சிலர் அப்படியல்ல. தங்களது ஆசையை எப்படியும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்புடன் செயல்படுவார்கள்.

அவர்கள்தான் எதையாவது சாதித்துக்கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்தான் ரோஹித் சுப்பிரமணியன். சவாரியும் பயணமும் சுதந்திரத்தின் அடையாளங்கள், அவற்றிலிருந்து என்னை எதுவும் பிரித்துவிட முடியாது என்று கூறும் ரோஹித்துக்கு வயது 22. அவர் 150 நாள்களில் தன்னுடைய ராயல் என்பீல்டு பைக்கில் சுமார் 32,000 கி.மீ. தூரம் பயணித்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அவரது பைக்கின் சக்கரங்கள் கடந்து வந்திருக்கின்றன.

கனவுக்கு உதவுங்கள்

சென்னையைச் சேர்ந்த ரோஹித்துக்கு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பருவத்தின் படியில் அவர் காலடியெடுத்து வைத்தபோது துளிர்த்திருக்கிறது. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? உலகைச் சுற்றிப் பார்க்கப் பணம் வேண்டுமே, அது இருந்தால்தானே ஆசையை நிறைவேற்ற முடியும். இதற்காக அவர் ‘ஃபண்ட் மை ட்ரீம்’ என்ற க்ரவுட் ஃபண்டிங் ப்ளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார்.

அதன் மூலம் சுமார் 5 லட்சம் ரூபாயைப் புரட்டியும்விட்டார். பிறகென்ன, இனி ஒரு கணம்கூடத் தாமதிக்க முடியாது என்னும் எண்ணத்தில் சென்னையிலிருந்து 2016 ஜனவரி 15 அன்று தனது பயணத்தைத் தொடக்கி யிருக்கிறார். இறுதி இலக்காக ஹைதராபாத்தைத் தொட்டுவிட்டுச் சென்னைக்கு மீண்டும் ஜூன் 14 அன்று திரும்பியிருக்கிறார்.

பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுகளை வளர்த்துக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்று மட்டும் நினைத்திருக்கிறார். அதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தால் போதும் என்ற தெளிவுடன் பயணத்தின்போது பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தமிழகத்தில் ஐஸ் கிரீம் விற்றிருக்கிறார்.

கர்நாடகத்தில் சுடச்சுட டீ, காபி விற்றிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் விவசாயம் செய்திருக்கிறார். பஞ்சாப்பில் ஒரு மெக்கானிக்காக நாட்களைக் கழித்திருக்கிறார். மணிப்பூரில் மீன் வியாபாரம் செய்திருக்கிறார். கோவாவில் ஒரு பாரில் சப்ளையராகக்கூட இருந்திருக்கிறார். வாழ்க்கை தரும் வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதில் அலாதி இன்பம் அடைந்திருக்கிறார்.

செல்லும் இடங்களில் ரோஹித் ஹோட்டல்களில் தங்குவதில்லை. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியே கிடைக்கும் நண்பர்கள் அடைக்கலமாகத் தரும் இடங்களிலேயே தங்கிவருகிறார். ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன் என்று எங்கு வேண்டுமானாலும் தங்கிக்கொள்கிறார்.

அமெரிக்கரின் தாக்கம்

ஓர் அமெரிக்கர் தான் எந்த வேலையை எல்லாம் செய்ய வேண்டும், எந்த நாடுகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தனது 20-வது வயதில் வைத்திருந்திருக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி எண்ணியே காலத்தைக் கடத்திவிட்டார். ஆனால் அவரது பயணம் வெறும் திட்டமிடலோடு நிலைத்துவிட்டது. செயலாக மாறவில்லை. இதைப் படித்த ரோஹித்துக்கு ஓர் உந்துதல் கிடைத்துவிட்டது. அந்த அமெரிக்கர் போல் ஆசைப்பட்டார். ஆனால் முடங்கிப் போய்விடாமல் செயலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அதனால் தான் ரோஹித்தால் ஒரு வெற்றி கரமான பயணத்தை இனிதே நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

செல்லும் வழியெங்கும் புதுப் புது மனிதர்கள் புதிது புதிதான கதைகளைக் கேட்கும்போது மீண்டும் மீண்டும் பயணத்தின்மீது கட்டுக்கடங்காத ஆர்வம் பொங்கி வழிந்தபடியே இருந்திருக்கிறது. ஒரே மாதிரியான டெம்பிளேட் வாழ்க்கை வாழத் தன்னால் முடியாது என்றும் அந்த டெம்பிளேட் வாழ்க்கையை மீறி ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறும் ரோஹித் தொடர்ந்து பயணத்துக்கான வேட்கை கொண்டவராகவே உள்ளார்.

இன்னும் 42 நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தாகத்துடன் இருக்கும் ரோஹித் விரைவில் தனது பயணத்தைத் தொடங்கக் காத்திருக்கிறார்.

ஒரே மாதிரியான டெம்பிளேட் வாழ்க்கை வாழத் தன்னால் முடியாது என்றும் அந்த டெம்பிளேட் வாழ்க்கையை மீறி ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x