Published : 22 Jul 2016 11:48 AM
Last Updated : 22 Jul 2016 11:48 AM
கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நம் சின்ன வயதுக் கனவுகளின் கதாநாயகர்கள். அதிலும் சோட்டா பீம், டாம் அண்ட் ஜெர்ரி மாதிரியான கேரக்டர்கள் பலரின் ஃபேவரைட். அதுபோல ‘போக்கிமான்' என்கிற கார்ட்டூன் நிகழ்ச்சியும் ட்வீன், டீன் என வயது வித்தியாசமில்லாமல் விரும்பிப் பார்க்கிற ஒன்றாக இருந்து வந்தது.
இந்நிலையில்தான், ‘அது போன மாசம். இது இந்த மாசம்!' என்கிற ரீதியில், அந்த கார்ட்டூன் நிகழ்ச்சி ‘பாஸ்ட்' ஆகி, ஸ்மார்ட்போனில் விளையாடும் ஒரு ‘கேம்' என மாறி, இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப 'ஃபாஸ்ட் ஃபார்வார்ட்' ஆகி இருக்கிறது.
இந்த மாத ஆரம்பத்தில்தான் நியான்டிக் எனும் மென்பொருள் நிறுவனம் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியது. ரிசல்ட்..? இந்த விளையாட்டுச் செயலி செய்திருக்கும் சாதனையை முறியடிக்கக் குறைந்தபட்சம் இன்னும் பல மாதங்களாவது ஆகும் போல. சாலையில் செல்லும் எந்த ஒரு இளைஞரையும் நிறுத்தி, அவரின் ஸ்மார்ட்போனை சோதனையிட்டால், இந்தச் செயலியை அவர் ‘டவுன்லோட்' செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்த கேம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளில் மட்டும்தான் விளையாட முடியும். கேண்டி க்ரஸ் சாகா, க்லாஷ் ஆப் க்லான்ஸ், மினி மில்லிடா, டெம்பிள் ரன் போன்ற 'கேமிங் ஆப்'களுக்கு அடுத்து இந்த ‘போக்கே மான் கோ' கேம்தான் இன்றைய ட்ரெண்டிங்.
சரி இதை எப்படி விளையாடுவது? இந்த விளையாட்டில் நாம் நமக்குப் பிடித்த மாதிரி போக்கிமான் அவதாரத்தை உருவாக்கலாம். நமக்குப் பிடித்த உடை, தோல் நிறம், கண் நிறம் என நாம் உருவாக்கும் கதாநாயகனுக்குப் பல விதங்களில் மேக்கப் போடலாம். அதன் பிறகே இந்த கேம் ஸ்டார்ட் ஆகும்.
அதன் பிறகு உங்கள் போனில் ஜி.பி.எஸ், கூகுள் வரைபடம் மற்றும் கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்தி போக்கிமான் வேட்டைக்குத் தயாராக வேண்டும். இதர ‘கேமிங் ஆப்'களுக்கும் இந்த விளையாட்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற விளையாட்டை வீடு, கல்லூரி, அலுவலகம் என நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடலாம். ஆனால் இந்த விளையாட்டுக்கு, உங்கள் வீடு, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றை விட்டு வெளியே வர வேண்டும்.
ஆகவே போக்கிமான் தேடலைத் தொடங்கியவுடன், கையில் போனுடன் வீதிக்கு வர வேண்டும். அப்போது நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே சில குறிப்பிட்ட இடங்களில் போக்கிமான்கள் தோன்றும். அங்கு சென்றால்தான் அவற்றைப் பிடிக்க முடியும். அதற்கு ஜி.பி.எஸ்., மற்றும் கூகுள் வரைபடங்கள் உதவும்.
உதாரணத்துக்கு, நீங்கள் ராயப்பேட்டையில் இருக்கும்போது இந்த விளையாட்டை விளையாடினால், அங்கே இருக்கும் மணிக்கூண்டு தோன்றும். அப்போது நாம் அந்த இடத்தில் ஒரு போக்கேமானை நிறுத்திச் சண்டையிட்டு அந்த இடத்தைச் சொந்தமாக்கலாம். இப்படி நாம் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல, அங்குள்ள போக்கிமான்களை வென்று அந்த இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம். இந்த விளையாட்டில் நிறைய ‘லெவல்'கள் உள்ளன. அதனால் இந்த விளையாட்டுக்கு முடிவே கிடையாது.
இந்த விளையாட்டை விளையாடும் கல்லூரி மாணவி ஷெர்லியிடம் கேட்டபோது “இந்த கேம் விளையாடுறப்போ, நிறைய இடங்களுக்கு நாம் நடந்தே போவோம். அதனால, இதை விளையாடுறதே ‘எக்ஸ்சர்சைஸ்' பண்ற மாதிரி இருக்கு. என்ன, இதை விளையாடும்போது அடிக்கடி சர்வர் எரர் வருது. மொபைல் ‘ஹேங்' ஆகுது” என்றார்.
இன்னொரு மாணவரான பிரகாஷ் கூறும்போது, “இந்த கேம் விளையாட 4ஜி தேவைப்படுது. 2ஜி பயன்படுத்தினா சுத்தமா வேலை செய்யாது. ‘மெம்மரி' கம்மியா இருக்குற மொபைல்ல இந்த கேம் ‘ஆப்' செட்டே ஆகாது. ஜி.பி.எஸ். மூலமா ‘ட்ராக்' பண்றதால பேட்டரி சீக்கிரமா போயிடுது. பொழுதுபோக்குக்காக எப்பவாவது இதை விளையாடலாம். ஆனா ‘அடிக்ட்' மட்டும் ஆகிவிடக் கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT