Published : 01 Jul 2016 12:51 PM
Last Updated : 01 Jul 2016 12:51 PM
"டிசம்பர் வெள்ள பாதிப்பின் போது கிட்டதட்ட 15 நாள் வீட்டுக்கே போகாமல் பணியாற்றிய போது என் மனைவி என்னை எதுவுமே கேட்கவில்லை. அதுமட்டுமன்றி, என்னை ஏன் அழைத்து போகவில்லை என கேட்டார். முதல் நன்றி அவருக்கு தான் சொல்லணும்" என்று தொடங்கினார் 'INDIAN OF THE YEAR' விருது வென்றவர்களின் ஒருவரான பாலாஜி. ரேடியோ தொகுப்பாளர், சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி 'சென்னை மைக்ரோ' மூலமாக பல இளைஞர்களை ஒன்று திரட்டியவர் பாலாஜி.
'INDIAN OF THE YEAR' விருது வென்ற போது என்ன உணர்ந்தீர்கள்?
நான் வாங்கினேன் என்பதை விட சென்னை மக்களின் சார்பாக வாங்கினேன் என்று தான் சொல்ல வேண்டும். 2015ம் ஆண்டு பணியாற்றினால் விருது கிடைக்கும் என நினைத்து யாருமே பணியாற்றவில்லை. தொற்று நோய் வந்தால், காய்ச்சல் வந்தால் என்ன பண்ணுவது என நினைக்காமல் களத்தில் இறங்கி பணியாற்றியதால் இந்தியளவில் மட்டுமல்ல உலகளவில் திரும்பி பார்த்தார்கள்.
இதை நான் எனக்கு கிடைத்த விருது என்று நினைக்காமல், ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன். என் வாழ்க்கையில் நான் என்ன சாதித்தாலும், இந்த விருதைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல விஷயம் பண்ணியிருக்கோம் என தோன்றும்.
டிசம்பர் வெள்ளத்தின் போது எப்படி அதிகமான இளைஞர்களை ஒன்றிணைக்க முடிந்தது?
சென்னை வெள்ளத்தில் தான் நான் வெளியே வந்து வேலை செய்தேன் என்றால் கண்டிப்பாக இல்லை. என்னால் முடிந்த சிறு சிறு வேலைகள் பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். சென்னை வெள்ளத்தில் எனது வேலை கவனிக்கப்பட்டது அவ்வளவு தான். முதல் நாள் களத்தில் இறங்கிய போது அடுத்த நாள் போகுமா என்று கூட நாங்கள் நினைக்கவில்லை.
அந்த நேரத்தில் வீட்டில் சும்மா உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆகையால் என் நண்பர்களுடன் காரை எடுத்துக் கொண்டு இரவு ரோட்டில் மாட்டியிருப்பவர்களை வீட்டில் விடலாம் என்று ஆரம்பித்தோம். அடுத்த நாள் காலை நண்பன் வீட்டு வாசலில் 300 பேர் இருந்தார்கள். 5 மணி நேரத்தில் 1000 பேர் ஆனார்கள். 4 சென்டர்கள் உருவாக்கி, சமூக வலைத்தளம் மூலமாக எடுத்துப் போனோம். இது ஒரு இயக்கமாக மாறும் என நான் நினைக்கவில்லை.
யாராவது ஒருவர் முன்னெடுத்து அழைத்துப் போக தேவைப்பட்டார்கள். மழை, பூகம்பம் வந்தால் காசு கொடுத்துவிட்டு நம் வேலைமுடிந்துவிட்டது என நினைத்துக் கொள்வோம். முதல் முறையாக நான் முன்னாடி போகும் போது என் பின்னால் இவ்வளவு பேர் வருவார்கள் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த எண்ணம் கூட கிடையாது. எனக்கே பெரிய ஆச்சர்யம், இப்போது வரைக்கும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போது வரைக்கும் அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது உள்ள இளைஞர்களிடம் உதவும் தாக்கம் அதிகமாகி விட்டது என நினைக்கிறீர்களா?
முந்தைய தலைமுறையை விட இந்த தலைமுறையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் ரொம்ப நல்லவர்கள். 2 ரூபாய் உதவி செய்துவிட்டால் முந்தைய தலைமுறையினர் தான் இதெல்லாம் பண்ணுவது நான் என்று பேசுவார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்தால் கூட, இதில் என்ன இருக்கிறது என போய் கொண்டே இருப்பான். ஒரே விஷயம் என்னவென்றால் அவர்களை யாராவது வழிநடத்த வேண்டும். அவர்களை யாராவது ஊக்கமளிக்க வேண்டும் அவ்வளவுதான். உண்மையில் சமுதாயத்திற்கு நிறைய நல்லது பண்ணுவார்கள்.
நுங்கம்பாக்கம் கொலையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்னவென்றால் 3 மணி நேரத்திற்கு யாருமே போய் உதவி செய்யவில்லை. டிசம்பரில் இப்படி இருந்தோமே இப்படி ஆயிட்டோமே என பலரும் கோபப்பட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் மொத்த கூட்டத்தில் யாராவது ஒருத்தன் முன்னாடி போயிருந்தால் அவனுக்குப் பின்னால் 20 பேர் போயிருப்பார்கள். முன்னாடி போவதற்கு தான் ஒருவர் தேவை.
முன்னால் போவதற்கு யாருமே இல்லை என்பது தான் சென்னையில் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தது. யாரை நம்புவது, யாரை தலைவராக ஏற்றுக் கொள்வது என தயங்கினார்கள். நானே அவ்வளவு வீடியோ, பேச்சு என நிறைய பண்ணியும் ரொம்ப கம்மியாக தான் வாக்களித்தார்கள். உண்மையில் என்னவென்றால் யாருமே அவர்களை ஈர்க்கவில்லை. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களை ஈர்த்துவிட்டால் அவர்கள் அவ்வளவு நல்லது பண்ணுவார்கள்.
தேர்தல் சமயத்தில் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பரவலாக பேசினார்களே. அந்த சமயத்தில் என நினைத்தீர்கள்?
அரசியலுக்கு வருவது என்றால் வெறும் தேர்தலில் நிற்பது மட்டும் கிடையாது. நான் ஏற்கனவே அரசியல் தான் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தெருவில் மரம் வெட்டினார்கள் என்றால் நான் போய் ஏன் வெட்டுகிறீர்கள், வெட்டக் கூடாது என தடுக்கிறேன்.
அரசியலில் நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன்பு வந்து ஒரு கட்சியில் இணைந்து சீட் கிடைத்தது என்றால் எம்.எல்.ஏவாக நிற்பார்கள். கிடைக்கவில்லை என்றால் பிரச்சாரம் பண்ணிவிட்டு அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இது உண்மையில் அரசியல் கிடையாது. இதையே எல்லாரும் என்னை பண்ணச் சொன்னார்கள் என்றால் எனக்கு அதில் விருப்பம் கிடையாது.
நான் என் நண்பர்களுடன் 'சென்னை மைக்ரோ'வில் பண்ணிவரும் விஷயங்கள் அனைத்துமே அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய விஷயங்கள் தான். ஒரு கட்சி தலைவர் இன்னொரு கட்சி தலைவரை திட்டுவதுதான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் மட்டும் அரசியலில் நின்று ஜெயித்தால் என்ன மாறப் போகிறது?. நமது ஊரில் 'முதல்வன்' மற்றும் 'ஆயுத எழுத்து' படத்தில் வருவது போல நடந்துவிடாதா என்பதுதான் பலரின் ஆசை. 200 இளைஞர்கள் தேர்தலில் நின்று ஜெயித்து சட்டப்பேரவை சென்றால் நாம் நினைத்ததைக் கொண்டுவர முடியும். ஒரே ஒரு ஆள் மட்டும் நின்று ஜெயித்து சட்டப்பேரவைக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை.
இளைஞர்களை வழிநடத்த ஆள் தேவை என்கிறீர்கள். அதை ஏன் நீங்கள் அரசியலில் பண்ணக் கூடாது?
கண்டிப்பாக பண்ணலாம். ஆனால், நான் தற்போது செய்து வரும் வேலையே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆர்.ஜே, சினிமா, சென்னை மைக்ரோ பணிகள் என நிறைய இருக்கிறது. இதிலேயே எனக்கு இருக்கும் நண்பர்களோடு சந்தோஷமாக செய்து வருகிறேன். இளைஞர்களை இப்போதும் திரட்டிக் கொண்டுத் தான் இருக்கிறேன். அது தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக அல்ல. நிறைய என்.ஜி.ஒக்களில் பணியாற்ற தான் ஆளில்லை என்பார்கள். ஆனால் என்னோடு இணைந்து பணியாற்ற நிறைய இளைஞர்கள் முன்வருகிறார்கள். எனக்கு அதில் ரொம்ப சந்தோஷம்.
'சென்னை மைக்ரோ'வின் எதிர்கால திட்டம் என்ன?
'சென்னை மைக்ரோ'வில் இதை மட்டும் தான் பண்ணுவோம் என எந்தவொரு திட்டமும் இல்லை. உதவி பண்ணுவதற்கு வரைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. அதை நாங்கள் நம்பவும் இல்லை. 'சென்னை மைக்ரோ' என்பது வெறும் ஆர்.ஜே.பாலாஜி, சித்தார்த், சின்மயி உள்ளிட்ட சிலர் ஆரம்பித்த ஒரு இயக்கம் என்று இருப்பது சரி கிடையாது.
ஒரு உதாரணத்திற்கு சூளைமேட்டில் உள்ள தெருவில் 'சென்னை மைக்ரோ' பசங்க 7 பேர் இருந்திருந்தால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் கொலை நடந்த அடுத்த 15வது நிமிடத்தில் இருந்திருப்பார்கள். அந்த பெண்ணை உடனே எடுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். என்னுடைய மிகப்பெரிய் ஆசை என்னவென்றால் 'சென்னை மைக்ரோ' கோட்டூர்புரம், 'சென்னை மைக்ரோ' ராயப்பேட்டை என ஒவ்வொரு ஏரியாவுக்கும் கொண்டு வர வேண்டும். சினிமாவில் நாயகன் இருக்கும் ஏரியாவில் உள்ள பிரச்சினைகளை அவர் தட்டிக் கேட்பார். அப்படித் தான் 'சென்னை மைக்ரோ' ஒவ்வொரு ஏரியாவில் ஆரம்பித்து அங்குள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்.
பிரச்சினை என்றால் அடிதடி, வெட்டுக் குத்து அல்ல. ஆதார் கார்டு வாங்குவதில் பிரச்சினை, சாக்கடை அடைத்து விட்டது என்றால் அவர்கள் தலையிட்டு யாருக்கு போன் பண்ண வேண்டும் என பார்த்து, பண்ணி, அதை சரி செய்துக் கொடுப்பார்கள். இது தான் எனது கனவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT