Published : 12 Aug 2016 01:10 PM
Last Updated : 12 Aug 2016 01:10 PM
எப்போதும் போல அன்றும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேசும்போது “சரி... ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா?” என யதார்த்தமாக கோவிந்த் மேனனும், சித்தார்த்மேனனும் கேட்டார்கள். “செஞ்சிருவோம் மச்சி… நம்ம பேண்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்?” நிமிர்ந்து பார்த்தால் அவர்கள் தலைக்கு மேலே கொச்சி நகரின் புகழ் பெற்ற தய்க்குடம் பாலம். ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற பெயரையே தங்களுடைய இசைக் குழுவுக்கு வைத்து மலையாளத் தொலைக்காட்சியான ‘கப்பா’ டிவியில் கலக்கலான ‘மோஜோ எனும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். சில தினங்களில் யூடியூபிலும் ஃபேஸ்புக்கிலும் நிகழ்ச்சி வைரலானது. கொச்சியில் இருக்கும் தய்க்குடம் பாய்ஸூக்கு கோழிக்கோடு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தது. அன்று முதல் உலகம் சுற்றும் இசை வாலிபர்களாக மாறிவிட்டார்கள் தய்க்குடம் பிரிட்ஜ் பாய்ஸ். வெறும் மூன்றே ஆண்டுகளில் பெங்களூரு, ஹைதராபாத், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் என எக்கச்சக்கமான இடங்களில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்திவிட்டார்கள். அதில் ஹைலைட் கடந்த பிப்ரவரி சென்னையில் நடந்த ‘இளையராஜா 1000!’
இசைஞானி முன்னிலையில் தங்கள் இசை மரியாதையைக் காட்டியவர்களுக்கு இளையராஜாவிடமிருந்து கிடைத்தது ‘லைக்ஸ்!’
கடந்த வாரம் சென்னையில் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், ‘ஹிந்துஸ்தான் பேட்டில் ஆஃப் பேண்ட்ஸ்' எனும் தனி இசைக் குழுக்களுக்கான இசைப் போட்டியை நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி வழங்க ‘தய்க்குடம் பிரிட்ஜ்' இசைக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
தமிழ் பாட்டுன்னா பைத்தியம்!
மலையாளக் கரையோரம் இருந்தாலும் இவர்கள் தமிழ் பாடும் குருவிகள்! அதற்கு முக்கியக் காரணமே தய்க்குடம் பிரிட்ஜ் பேண்டை ஆரம்பித்த பாடகரும் வயலின் கலைஞருமான கோவிந்த் சென்னையில் ஆடியோ இன்ஜினீயரிங் படித்தவர். படித்தவுடன் அங்கேயே பல வருடங்கள் வேலைபார்த்தவர். அவர் மட்டுமல்ல இந்த பேண்டில் தற்போது இருக்கும் 16 பேரில் கோவிந்த் உட்பட பாடகர் கிறிஸ்டின் ஜோஸ், பாடகர் விபின் லால், ரிதம் கிட்டார் கலைஞர் அஷோக், சவுண்ட் இன்ஜினீயர் ராஜன், சவுண்ட் இன்ஜினீயர் ஹேமந்த் ஆகிய ஆறு பேர் சென்னையில் படித்துவிட்டு தமிழ்- மலையாளத் திரைப்படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயரியங், கீபோர்டு புரோகிராமர் எனப் பணியாற்றியிருக்கிறார்கள். “எப்பவுமே தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கேரளாவில் கிரேஸ் அதிகம். என்னுடைய சின்ன வயசுல இருந்தே இளையராஜா, ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் ரிலீஸ் ஆனதும் உடனடியாக கேஸட் வாங்கிடுவேன். சொல்லப்போனால் இப்போது நாங்கள் சொந்தமாக இசையமைக்கும் மலையாளப் பாடல்களில்கூட இளையராஜாவின் தாக்கம் அதிகம்” என்கிறார் கோவிந்த்.
மெலடியில் மெட்லி
பார்க்க அதிரடி இளைஞர்களாகக் காட்சி அளித்தாலும் இவர்களுடைய அடிப்படை, மெலடிதான். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவின் மெலடிகளை வரிசையாகக் கோத்து ‘மெட்லி’யாக (Medley) வழங்கும் இவர்களுடைய பாணிக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. “’தென்றல் வந்து தீண்டும்போது’, ‘இளங்காற்று வீசுதே’ பாடல்களை நானும் விபின் லாலும் பாடியதைப் பார்த்து எங்களுக்கு ‘இளையாராஜா 1000’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தார்கள். சொல்லப்போனால் அதற்கு முன்பே நான் பாடிய விதத்தைப் பாராட்டி அதே பாடலை ‘எவடே சுப்பிரமணியம்’ தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பை இளையராஜா தந்தார்” எனப் பூரிக்கிறார் கிறிஸ்டின் ஜோஸ். ரொம்பவும் சாதாரணமான குரலில் எளிய தோரணையில் பேசுகிறாரே, இவரா பாடியது என நினைத்தால், இவர் பாடத் தொடங்கியதும் இவர் கானத்தால் அரங்கம் நிறைகிறது. தய்க்குடத்தின் தமிழ்க் குரல் ராஜா கிறிஸ்டின் ஜோஸ்தான்!
மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழி சினிமாப் பாடல்களைப் புதிய நறுமணம் கமழத் தருவது மட்டுமல்லாமல் ‘ஃபிஷ் ராக்’ (Fish Rock), ‘நாஸ்டால்ஜியா’ (Nostalgia), ‘நவரஸம்’ (Navarasam) என இந்திய இசையில் புதிய வண்ணங்களைக் கூட்டுகிறார்கள். 2015-ல் இவர்களுடைய இசையமைப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘ஹரம்’ பாடல்களும் ஹிட் அடித்தன.
இவர்களுடைய தனிப் பாடலான ‘ஃபிஷ் ராக்’-ல் வட்டார மலையாளத்தில் வகை வகையான மீன்களின் பெயர்களைக் கூவிப்பாட, பாடல் களைகட்டுகிறது. ஒரு கட்டத்தில் கிட்டாரில் ராக்கும் வியன் ஃபெர்ணான்டஸின் ராப்பும் சேரும்போது ஆடியன்ஸுக்குப் பித்துப் பிடிக்கிறது. இந்தக் குழுவின் கிரவுட் புல்லர் வியன் ஃபர்ணாண்ட்ஸ் எனலாம். ‘அந்நியன்’ பட ரெமோ ஸ்டைலில் நடை, உடை, பாவனை, பேச்சு, ராப் என ஒரு கலக்குக் கலக்குகிறார்.
இளையராஜாவுக்கு முன்னால்!
இந்த இளைஞர் பட்டாளத்தில் நாட்டுப்புற இசையை கம்பீரக் குரலில் பாடும் 58 வயதான பீதாம்பரன் மேனனும் ஒருவர்.
இவர்களில் ஒன்பது பேர் பாடகர்கள். ‘அதென்ன ஒரே குழுவில் இத்தனை பாடகர்கள்’ எனக் கேட்டால், “எங்களுடைய மியூசிக் பேண்ட்டின் தனி அடையாளமே ஒரே குழுவில் இந்துஸ்தானி கிளாசிக், ராக், சூஃபி, ஜாஸ், ராப், ரகே, ஃபோக் இப்படி பல பாணி பாடகர்கள்தான்” என்கிறார் லீட் கிட்டார் கலைஞர் மித்துன் ராஜூ.
‘இளையராஜா 1000’ மேடையில் மித்துனின் கைகள் விதவிதமான கிட்டாரில் விளையாடுவதைக் கண்டு அரங்கமே அதிர்ந்தது. பார்க்க ‘கூல் கை’யாக இருக்கும் இவர் மேடை ஏறினால் ராக் ஸ்டார். “இளையராஜாவுக்கு முன்னால் வாசிக்கும் வாய்ப்பு என்றதும் துள்ளிக் குதித்து மதியம் மூன்று மணிக்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு எல்லாரும் வந்துட்டோம். நிகழ்ச்சி தொடங்கியதும் எஸ்.பி.பி., சித்ரா, ஆஷா போன்ஸ்லே, மனோ, மூத்த இசைக் கலைஞர்கள் என இசை ஜாம்பவான்களின் ‘பெர்ஃபார்மன்ஸை’ பார்த்து வாயடைத்து நின்றோம். எங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருந்துக் காத்திருந்து இரவு 1:30 மணி ஆகிவிட்டது. இனியும் வாய்ப்பில்லை என சோர்ந்து திரும்பிச் செல்ல மனதை தேற்றிக்கொண்ட. அப்போது கடைசி வாய்ப்பை எங்களுக்குத் தந்தார்கள். மேடை ஏறி நின்றால், எங்களுக்கு முன்னால் இளையராஜா அமர்ந்திருந்தார். ஒரு நிமிடம் மூச்சடைத்தது. தலையும் காலும் புரியவில்லை. சில நொடிகள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இசைக்கத் தொடங்கினோம். அந்த நொடியில் எங்கள் கனவு நினைவாகியது” எனப் புன்னகைக்கிறார் மித்துன் ராஜூ. அந்த மேடையில் ‘புன்னகை மன்னன்’ தீம் மியூசிக்கை கோவிந்த் வயலினில் வாசிக்கத் தொடங்கிய நொடியில் அத்தனை பேரும் மெய் சிலிர்த்தனர். அதிலிருந்து அதிர்வே இல்லாமல் லகுவாக ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடலைப் பாடினார் கிறிஸ்டின் ஜோஸ், மித்துன் ராஜூவின் கிட்டார் பாடலுக்குப் புதிய முகம் தந்தது, ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ என விப்பின் லால் பாட, மெலடியாகப் போகிறதே என நினைப்பதற்குள் ‘நாயகன்’ பட அதிரடி தீம் இசையை டிம்மர் அனிஷோடு சேர்ந்து பிளந்துகட்டினார்கள். அதிலிருந்து படத்தின் உயிரை உலுக்கும் மெலடிக்குத் தவழ்ந்தது கோவிந்தின் வயலின், அதை அடுத்து ‘தளபதி’யின் ‘ராக்கமா கையத் தட்டு’ களமிறங்கியது. முத்தாய்ப்பாக நிலா மாதவ்வின் குரலில் ‘ஓம் சிவோஹம்’ அனைவரையும் இசையின் உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்றது.
“இளையராஜாவே எங்களிடம் வந்து பாராட்டிய போது மகிழ்ச்சியில் உறைந்துபோனோம்” என கோரஸாகச் சொல்கிறார்கள் தய்க்குடம் பிரிட்ஜ் ராஜாக்கள். ‘இளையராஜா 1000’ நிகழ்ச்சிக்குப் பிறகு தய்க்குடம் பிரிட்ஜ் குழு வேறு கட்டத்துக்குப் போய்விட்டது. இப்போது அத்தனை பேரும் புதிய படங்கள், புதிய மேடைகள் என ஜொலிக்கிறார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரனின் அடுத்த படமான, ‘ஒரு பக்க கதை’ மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் கோவிந்த் மேனன். கடந்த வாரம் வெளியான ‘நமது’ படத்தில் ‘முத்துமணி’ என்கிற பாடலைப் பாடியிருக்கிறார் கிறிஸ்டின் ஜோஸ். தற்போது புதிய முயற்சியாக பாரதியார் எழுதிய விடுதலைக்கான பாடல்களை ராக் இசையில் ஆர்ப்பரிக்கும் வடிவில் இசையமைத்திருக்கிறார்கள். இது உட்பட இவர்களுடைய ஸ்டைலில் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களை 20-ம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் விருந்து படைக்க தய்க்குடம் பாய்ஸ் ரெடி! நாமும் ரெடிதானே!
தய்க்குடம் பிரிட்ஜ் பேண்டின் இசை பெருமழையில் நனைய: >www.thaikkudambridge.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT