Published : 23 Nov 2013 03:47 PM
Last Updated : 23 Nov 2013 03:47 PM
வீடு என்பது என்ன? சுவர்களும், அறைகளும் மட்டுமல்ல, வண்ணங்களும் சேர்ந்ததுதான் வீடு. பார்த்துப் பார்த்து கட்டுகிற வீட்டை, பார்க்கிறவர்கள் எல்லாம் பாராட்ட வேண்டுமா? நிம்மதிக்காகக் கட்டுகிற வீடு உண்மையிலேயே நிம்மதி தர வேண்டுமா? வண்ணங்களில் உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள். அது வீட்டை அழகாக்கும். மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும்.
அந்தக் காலத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்கள் மட்டுமே வீடு முழுக்க நிறைந்திருக்கும். ஒரு சிலர் பச்சை நிறத்துக்கு ஆதரவு தந்திருப்பார்கள். ஆனால் இன்று வண்ணங்கள் கணக்கில்லாமல் கிடைக்கின்றன. அவை பல்வேறு தரங்களிலும் விலைகளிலும் இருப்பது கூடுதல் சிறப்பு.
வரவேற்கும் பளிச் நிறங்கள்
பொதுவாக வரவேற்பறைக்கு சூரிய வெளிச்சத்துடன் ஒத்துப் போகும் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். வண்ணங்களைச் சுவர்களுக்கு மட்டும்தான் பூசப்போகிறோம் என்றாலும், அவை சுற்றுப்புறத்துடன் ஒத்துப்போவதும் முக்கியம்.
மெரூன், லாவண்டர், பீச் போன்ற எத்தனையோ புதுப்புது நிறங்கள் இருந்தாலும் கிரீம், இளம் மஞ்சள் போன்ற வெளிர் நிறங்களைத்தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதுபோன்ற சமயத்தில் மூன்று சுவர்களுக்கு வெளிர்நிறத்தைப் பூசிவிட்டு ஒரு பக்கச் சுவருக்கு மட்டும் அடர்த்தியான நிறத்தைக் கொடுக்கலாம். அது வீட்டைப் பெரிதாகக் காட்டுவதுடன் வண்ணமயமாகவும் காட்டும். கறுப்பு-வெள்ளை, நீலம்-இளஞ்சிவப்பு போன்ற எதிரெதிர் நிறங்களைக் கொடுத்தால் வித்தியாசமாக இருக்கும்.
சமையலறைக்கு அடர்த்தியான நிறங்கள்தான் நல்ல தேர்வு. சமையலறை, குளியலறை போன்ற தண்ணீர் புழங்கும் அறைகளில் தண்ணீரில் கரையாத தரமான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
கண்களை உறுத்தாத மிதமான வண்ணங்கள் படுக்கையறைக்கு உகந்தவை. இளநீலம், இளம் பச்சை, இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி தருபவை. சோர்வுறச் செய்யும் நிறங்களே படுக்கையறைக்குப் போதுமானவை. அவைதான் தூக்கத்தை விரைவில் வரவழைத்துவிடும்.
குழந்தைகளின் நிறங்கள்
குழந்தைகளின் அறைக்கு வண்ணங்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் தேவை. பொதுவாக ஆண் குழந்தைகளின் அறைக்கு நீல நிறமும், பெண் குழந்தைகளாக இருந்தால் இளஞ்சிவப்பு நிறமும்தான் பயன்படுத்துவார்கள். தற்போது பர்ப்பிள், மெரூன் போன்ற நிறங்களையும் குழந்தைகள் விரும்புகிறார்கள். அவர்களின் அறைச் சுவர்களை அவர்களுக்குப் பிடித்த மாதிரி அலங்கரிக்கலாம். பட்டாம்பூச்சி, மலர்கள் போன்ற ஓவியங்களை வரையலாம். அவர்களுக்குப் பிடித்த, அவர்களின் கனவுகளைச் சொல்லும் படங்களையும் வரையலாம்.
வண்ண ஆலோசகர்கள்
வீட்டின் கட்டமைப்புக்குக் கைகொடுக்கக் கட்டுமான நிபுணர்கள் இருப்பதுபோல, வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்ட பெயிண்ட்டிங் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். நம் வீட்டின் அமைப்பைச் சொல்லிவிட்டால் போதும். அதை எழில் கொஞ்சும் வண்ணக் களஞ்சியமாக மாற்ற இவர்கள் நமக்கு உதவி புரிவார்கள்.
இதுகுறித்துச் சொல்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கார்த்திக் சீனிவாசன்:
‘‘பொதுவா பெயிண்ட்டிங்கில் டொமஸ்டிக், இண்டஸ்டிரியல்னு ரெண்டு வகை இருக்கு. வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெயிண்ட் அடிப்பது டொமஸ்டிக் வகை. நாங்கள் அதைத்தான் செய்து வருகிறோம். உங்கள் வீட்டோட அமைப்பை முதலில் எங்களிடம் சொன்னால், எங்கள் நிறுவன இன்ஜினியர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து, சுவர்களின் அமைப்பு, தரம் இவற்றைப் பார்ப்பார்கள். பிறகு அதற்கு ஏற்ப எந்தெந்த வண்ணங்கள் பூசலாம் என்று பரிந்துரைப்பார்கள். உங்கள் பட்ஜெட்டைச் சொல்லிவிட்டால் அதற்கேற்றவாறுதான் அவர்களின் பரிந்துரை இருக்கும்.”
உங்கள் எண்ணத்தைச் சொல்லும் வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள், வீடும் வாழ்க்கையும் வண்ணமயமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment