Published : 26 May 2017 09:54 AM
Last Updated : 26 May 2017 09:54 AM
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன், மீண்டும் மரத்தின் மீதேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். அது வேதாளம் என்பதை உணர்ந்துகொண்ட விக்ரமன், மீண்டும் அதைக் கீழே கொண்டுவந்து, முதுகில் சுமந்து சென்றான். அப்போது, அந்த வேதாளம் சட்டென்று பேச ஆரம்பித்தது. “மன்னா, 1945 முதல் தமிழில் காமிக்ஸ் வந்துகொண்டிருக்கிறது. 1984 வரையில் அந்தத் துறையில் மொழிபெயர்ப்புகள் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், தவறான வழி காட்டப்பட, பாரம்பரியமிக்க ஒரு நிறுவனமும் அந்தப் பாதையில் ஒருமுறை நடந்த கதை தெரியுமா?” என ஆரம்பித்தது.
வேதாளம்: “மன்னா, ராணி காமிக்ஸ்தான் 1984 முதலே உரிமம் பெற்று, காமிக்ஸ் கதைகளைத் தமிழில் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தது. ஆனால், சிவகாசி நிறுவனமோ காப்பிரைட் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விளையாடிக்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், நாமும் அதைப் போல ஒரு கதையை வெளியிட்டால் என்ன என்று ராணி காமிக்ஸ் நிறுவனம் யோசித்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓ டானல், ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் தொடருக்கும் கதை எழுதியவர். அவர் உருவாக்கிய மற்றொரு பிரபல காமிக்ஸ் தொடர்தான் மாடஸ்டி ப்ளேஸ். இந்தக் கதாபாத்திரத்தின் பெயரைச் சரியாக ப்ளேஸ் என்று எழுதியவர் வாண்டுமாமா.
தமிழில், மாடஸ்டி கதைக்கான உரிமையை முறையாகப் பெற்ற ராணி காமிக்ஸ் நிறுவனம் ஜனவரி 1990 முதல் தொடர்ந்து அவரது கதைகளை வெளியிட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில், சிவகாசி நிறுவனத்தால் மாடஸ்டியின் கதைகளை வெளியிட இயலவில்லை.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, சிவகாசி நிறுவனமும் மாடஸ்டி கதைகளை வெளியிட ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் ராணி காமிக்ஸ் நிறுவனம் நம்ம ஊர் ஓவியர்களை வைத்து, ஒரு காமிக்ஸ் கதையைத் தயாரித்து வெளியிட்டது. இவர்கள் வெளியிட்ட கதையை காமிக்ஸ் ரசிகர்கள் பலர் கிண்டலடித்தார்கள்.
ஆனால், தமிழ் காமிக்ஸ் உலகில் இதுபோன்ற காப்பிரைட் குற்றங்களை அறிமுகப்படுத்திய சிவகாசி நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? உடனே அந்த நிறுவனத்தின் காமிக்ஸில் இதைப் பற்றி அரைப் பக்கத்துக்கு அறம், நீதி, நியாயம் என்றெல்லாம் எழுதியது. தனக்கு வந்தால், ரத்தம்; அதுவே, மற்றவர்களுக்கு என்றால், தக்காளி சட்னி என்ற ரீதியில், காப்பிரைட் உரிமம் பற்றியெல்லாம் சிவகாசி நிறுவனம் பேசியிருந்ததுதான் அபத்தத்தின் உச்சம்.
மாடஸ்டி ப்ளேஸ் – பிரிட்டிஷ் காமிக்ஸ் நாயகி. காப்புரிமை பெற்ற இந்த ஆங்கில காமிக்ஸ் கதைகளை இப்போது டைட்டன் காமிக்ஸ் நிறுவனம் மறுபிரசுரம் செய்துவருகிறது
இதில் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? மாடஸ்டி ப்ளேஸ் என்ற பெயரை ப்ளைசி என்று தவறாக உச்சரிப்பது ஒருபுறம். இந்த இரு நிறுவன மொழிபெயர்ப்புகளுமே கதையை அவரவர் விருப்பத்துக்கு மாற்றி, அரைகுறைப் புரிதலோடுதான் வெளியிட்டன என்பது காலக்கொடுமை, மன்னா.
ராணி காமிக்ஸில் மாடஸ்டியின் நண்பனான வில்லி கார்வினை, காதலன் என்று மாற்றியிருந்தது அநியாயம் என்றால், சிவகாசி காமிக்ஸில் குற்ற உலகைச் சேர்ந்தவளான மாடஸ்டியை இங்கிலாந்து உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியது மொழிபெயர்ப்பு மற்றும் கதை புரிதல் இல்லாமையின் உச்சகட்ட வீழ்ச்சி.
மன்னா, பாரம்பரியமிக்க ராணி காமிக்ஸ் நிறுவனம் செய்தது எவ்வகையில் நியாயம்? மற்றவர்கள் காப்பிரைட் மோசடிகள் செய்கிறார்கள் என்றால், நாமும் அதைப் போலவே செய்தால் என்ன என்ற அவர்களது யோசித்தது தவறுதானே? அவர்களும் குற்றமிழைத்தவர்கள்தானே? இதற்குப் பதில் சொல்லவில்லையென்றால், உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் விக்ரமா” என்று முடித்தது வேதாளம்.
“ஆமாம், இல்லை” என்று சுருக்கமாகப் பதில் கூற வேண்டிய அந்த இடத்தில், சமீபகாலமாகத் தன்னை விடாப்பிடியாகப் பிடித்துத் துரத்தும் தூய பிம்பமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையில் இருந்த விக்ரமன், “மாமூலான நாயகர்களின் இடத்தில் சாதனை செய்த ஹீரோக்கள் இடம்பிடிக்கும் பட்சத்தில், அந்நாளைய விற்பனைச் சறுக்கல்கள் சரிந்து விடுமென்ற பைத்தியக்கார சிந்தனைகள் எழுந்த நாட்களை என்ன செய்தாலும் மாற்றிட முடியாது என்பது புரிந்தபோது, புத்தியைப் பறிகொடுத்துவிட்ட தருணங்களை என்ன சொல்லியும் நியாயப்படுத்திட இயலாது என்பது புரிந்தது” என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவதைக் கண்ட வேதாளம் வெறுப்படைந்து மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT