Published : 06 Nov 2013 01:15 PM
Last Updated : 06 Nov 2013 01:15 PM

பார்வை இல்லாதவங்களுக்கு படிகளா இருக்கணும்

உறையூர் காவல் நிலையம் ஏரியாவில் படுபிஸியான டூ வீலர் மெக்கானிக் கண்ணப்பன். நகரின் பல பகுதிகளில் இருந்தும் இவரைத் தேடி வருகிறார்கள் வாடிக்கையாளர்கள். பைக் சத்தத்தை வைத்தே அதில் என்ன ரிப்பேர் என கண்டுபிடித்து சரி செய்து தருவது இவரது சிறப்பியல்பு. இத்தனைக்கும் இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி.

“ஈடுபாடும் தன்னம்பிக்கையும் இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை’’ என்கிறார் கண்ணப்பன். நான்கு வயதில் வந்து தாக்கிய மூளைக்காய்ச்சல், அவரது பார்வையைப் பறித்துக்கொண்டு போனது யாருமே எதிர்பார்க்காத சோகம். ஆனால், அந்தக் குறையை வெளிக்காட்டாமல் எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் துறுதுறுவென வேலை செய்கிறார். அவரிடம் பேசியபோது…

எனக்கு மீண்டும் பார்வை வர வாய்ப்பே இல்லைன்னு டாக்டர்கள் சொன்னதைக் கேட்டு அப்பாவும் அம்மாவும் அழுது புரண்டது இன்னமும் நெஞ்சில் நிழலாடுது. அன்னைக்கி அவங்க கதறிய கதறலும் சிந்திய கண்ணீரும்தான் இன்னைக்கி என்னைய இந்தளவுக்கு உயர்த்தி இருக்கு.

பார்வையில்லாம போனாலும் புள்ளைய நல்லா படிக்கவெச்சு முன்னுக்கு கொண்டுவரணும்னு அப்பாவும் அம்மாவும் நினைச்சாங்க. அதனால, பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டாங்க. ஆனா அங்க, டாய்லெட் சுத்தம் பண்ற வேலையும் கூட்டிப் பெருக்குற வேலையும் குடுத்ததால ஒரே வாரத்துல ஓடி வந்துட்டேன். அதோட படிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு. 15 வயசு இருக்கும்போது, செயற்கை வைரம் பட்டை தீட்டக் கத்துக்கிட்டேன். ஆனா, என்னோட நேரமோ என்னவோ.. அந்தத் தொழிலும் சீக்கிரமே நலிஞ்சு போச்சு.

வேலை இல்லாம உக்காந்து சாப்பிடுறது உறுத்தலா இருந்துச்சு. அதனால, நண்பனோட சைக்கிள் கடையில பஞ்சர் ஒட்டுற வேலையைப் பார்த்தேன். அதுல போதிய வருமானம் கிடைக்கல. எட்டு வருஷத்துக்கு முந்தி, டூ வீலர் மெக்கானிக் வேலையை கத்துக்கிட்டேன். என்னோட நண்பர் ஒருத்தர்தான் பொறுமையா எனக்கு தொழிலை சொல்லிக் குடுத்தாரு. அவர் மூலமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு நாலு வருஷத்துக்கு முந்தி, இந்த ‘மெக்கானிக் ஷாப்’பை ஆரம்பிச்சேன். எந்தக் கம்பெனியோட டூ வீலரா இருந்தாலும் அது ஓடுற சவுண்டை வைச்சே என்ன கோளாறுன்னு கண்டுபிடிச்சு சரி பண்ணிடுவேன்.

எல்லோரையும் போல நாமும் உழைத்துச் சம்பாதித்து, சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாத்தணும். அதைப்பார்த்து பெத்தவங்க சந்தோஷப்படணும் என்பதுதான் சின்ன வயசுல நான் எடுத்துக்கிட்ட சபதம். இப்போ நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், இதைப் பார்த்துச் சந்தோஷப்படுறதுக்கு அம்மா உயிருடன் இல்லை. மெக்கானிக் டிரெயினிங்ல இருக்கும்போதே அவங்க இறந்துட்டாங்க.

இந்தத் தொழில்ல வர்ற வருமானத்தை வைச்சு ஏதோ கஷ்டப்படாம கஞ்சி குடிக்கிறோம். சம்பாதிச்சு சொந்தமா ஒரு வீடு வாங்கணும். அடுத்ததா இன்னொரு ஆசை இருக்கு. இந்த மெக்கானிக் ஷாப்பை இன்னும் பெருசா விரிவுபடுத்தணும். அதுல என்னை மாதிரி பார்வையில்லாதவங்க ஐம்பது பேருக்கு தொழில் பயிற்சி குடுத்து, அவங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தணும். பார்வையற்றவங்களுக்கு படிகளா இருந்து உயரத்துல ஏத்திவிடணும். இதற்காகவே கல்யாண ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டேன்…’’ என்று சிரித்தபடி சொன்னார் கண்ணப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x