Published : 24 Mar 2017 10:36 AM
Last Updated : 24 Mar 2017 10:36 AM
மல்லிகைக் குவியலுக்கு நடுவே இருக்கிற ரோஜாவைப் போலத் தனித்துத் தெரிகின்றன முனீஸ்வரன் வரையும் ஓவியங்கள். உண்மையா, ஓவியமா என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தவும் அவை தவறுவதில்லை. மதுரையைச் சேர்ந்த முனீஸ்வரனுக்குச் சிறு வயது முதலே ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கிரேயான் ஓவியங்கள் வரைந்தவர், ஆறாம் வகுப்புக்குச் சென்றபோது ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் அளவுக்கு முன்னேறினார்.
முனீஸ்வரனின் ஓவிய ஆர்வத்தைப் பார்த்த நண்பர்கள், அவரை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து முறைப்படி ஓவியம் கற்கும்படி ஆலோசனை சொன்னார்கள். தற்போது கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவரும் முனீஸ்வரன், பகுதி நேரமாக மலேசிய ஓவிய நிறுவனம் ஒன்றிற்கு ஓவியங்கள் வரையும் பணியைச் செய்துவருகிறார்.
முனீஸ்வரனின் அப்பா சக்திவேல், தச்சுவேலை செய்கிறார். அம்மா மங்கலேஸ்வரி இல்லத்தரசி. மற்றவர்களைப் போலத் தங்கள் மகன் கலை, அறிவியல் பாடப் பிரிவில் சேராமல் ஓவியம் வரைகிறாரே என்று இவர்கள் இருவருக்கும் வருத்தம்.
“ஓவியக் கலையும் மற்ற படிப்புகளைப் போல சிறந்ததுன்னு நான் அவங்களுக்குப் புரியவைக்கிற நாள் தொலைவில் இல்லை” என்று நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் முனீஸ்வரன். முதலாமாண்டு படித்தபோது தேசிய அளவில் கேம்லின் நிறுவனம் நடத்திய போட்டியில் இவரது ஓவியம் சிறந்த ஓவியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
“பிரஷ் இல்லாமல் விரலால் வரைந்த பசுவின் ஓவியம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம். ரியலிஸ்டிக் ஓவியங்களை மக்கள் எப்போதும் ரசிப்பார்கள். அதனால் சிலைகளை வரைவது எனக்குப் பிடிக்கும். ஓவியங்களில் உடைகளுக்கு முக்கியத்துவம் தருவது என் பாணி. காரணம் நம் வாழ்வின், பண்பாட்டின் ஒரு அங்கமாக விளங்குபவை ஆடைகள்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்று சொல்வதைவிட, பச்சைப் பட்டுடுத்தி இறங்கினார் என்று சொல்லும்போது அந்த நிகழ்வுவோடு ஒரு நெருக்கம் ஏற்படுகிறதுதானே? அப்படியான ஒரு பிணைப்பை ஓவியத்துக்கும் ரசிகனுக்கும் இடையே ஏற்படுத்துவதுதான் என் நோக்கம்” என்று சொல்லும் முனீஸ்வரன், ரவிவர்மாவின் ஓவியங்கள் தன்னைப் பெரிதும் கவர்ந்தவை என்கிறார்.
“ரியலிஸ்டிக் ஓவியங்களில் சிவபாலன், ராஜ்குமார் ஸ்தபதி, இளையராஜா போன்றோர் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பழம்பெரும் ஓவியர் சில்பியின் ஓவியங்களில் தெய்வ உருவங்களின் ஆடைகள் தனித் தன்மையோடு இருக்கும். இவர்களின் தாக்கத்தால்தான் நானும் ஆடைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன்” என்று சொல்கிறார் முனீஸ்வரன். தன் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து ஓவியக் கண்காட்சியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.
பெரும்பாலும் பச்சை, சிவப்பு என்று அடர்நிறங்களையே தன் ஓவியங்களில் இவர் பயன்படுத்துகிறார். தவிர சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகிற நிறங்களைப் பயன் படுத்துவதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓவிய பாணியில் டிரை பேஸ்டல், அக்ரிலிக், ஆயில் ஆன் கேன்வாஸ் போன்றவை இவருக்குப் பிடிக்கும். சமூக வலைத்தளங்கள் மூலமும் தனது ஓவியங்களை விற்பனை செய்துவருகிறார் முனீஸ்வரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT