Last Updated : 02 Sep, 2016 12:14 PM

 

Published : 02 Sep 2016 12:14 PM
Last Updated : 02 Sep 2016 12:14 PM

நீங்கள் ‘டிக்’ செய்தீர்களா?

தன் பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள ‘வாட்ஸ் ஆப்' முடிவு செய்திருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘வாட்ஸ் ஆப்' வஞ்சித்துவிட்டது என்பதில் தொட‌ங்கி, அந்தரங்க மீறலுக்கு இது வழி வகுக்கும் என்பது வரை பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ‘வாட்ஸ் ஆப்’ இப்படிச் செய்யலாமா என்று ஒரு தரப்பினரும், ‘வாட்ஸ் ஆப்’ இப்படிச் செய்யும் என்பது எதிர்பார்த்துதானே என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே தனியுரிமை ஆர்வலர்கள், ஃபேஸ்புக்குடனான ‘வாட்ஸ் ஆப்’பின் தகவல் பகிர்வு முடிவால், பயனாளிகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி கவலையோடு பேசி வருகின்றனர்.

அதிலும் ‘வாட்ஸ் ஆப்’ பயனாளிகளின் ஸ்மார்ட்போன்களில், புதிய விதிமுறைகளை ஏற்பதற்கான அறிவிப்பு பெட்டிச் செய்தியாகத் தோன்றத் தொட‌ங்கியிருக்கும் நிலையில், இதுபற்றிப் பலருக்கும் குழப்பம் ஏற்படுவது இயல்பானதுதான். எனவே முதலில் பிரச்சினையின் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, இந்த முடிவின் பின்னணி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றிப் பார்க்கலாம்.

என்ன பிரச்சினை?

ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெசேஜிங்' சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் ‘வாட்ஸ் ஆப்’, அகஸ்ட் 25-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் வலைப்பதிவில் வெளியான இந்த அறிவிப்பு புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை (பிரைவசி) பற்றிய விவரங்களைக் கொண்டிருந்தது.

‘வாட்ஸ் ஆப்’ இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாகத்தான் கடந்த 2014-ம் ஆண்டில் முன்னணி சமூக வலைதளமான‌ ஃபேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. அன்றுமுதல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தனி நிறுவனமாகவே செயல்பட்டுவருகிறது. இடையே ஃபேஸ்புக் தனது தரப்பில் மெசேஜிங் சேவையை அறிமுகம் செய்தாலும் ‘வாட்ஸ் ஆப்’ சேவை தனக்கான பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக்குடன் ஒப்பந்தம்

இந்நிலையில்தான் ‘வாட்ஸ் ஆப்’ புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதில், தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் அவர்கள் தங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் விதம் தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஃபேஸ்புக் தனது பயனாளிகளுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் மற்றும் நட்புக் கோரிக்கையை வழங்க இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வாட்ஸ் ஆப்’ வழங்கும் தகவல்கள் ஃபேஸ்புக்குடன் மேலும் பலவிதங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எதிர்ப்புக்கும் சர்ச்சைக்கும் இலக்காகியுள்ளது. ஃபேஸ்புக்குடன் ‘வாட்ஸ் ஆப்’ பயனாளிகளின் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்துகொள்வது, அந்தரங்க மீறலுக்கும், விளம்பரத் தாக்குதலுக்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. தனியுரிமை ஆர்வலர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

‘வாட்ஸ் ஆப்’, ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் எனும்போது அது தனது பயனாளிகள் தொடர்பான தகவல்களைத் தாய் நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்வதில் என்ன தவறு என்று கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதல் சிக்கல், ‘வாட்ஸ் ஆப்’ பயனாளிகளுக்கு அளித்த உறுதிமொழியை மீறி நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான். ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்டபோது, அதன் இணை நிறுவனர் ஜான் கவும் ‘பயனாளிகளின் தனியுரிமை காக்கப்படும்' என உறுதி அளித்திருந்தார்.

உறுதிமொழி மீறல்

தற்போது ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்திடம், ஃபேஸ்புக் இவ்வாறு தகவல்களைக் கேட்டிருப்பதன் மூலம், அது தான் அளித்திருந்த உறுதிமொழியை மீறியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘வாட்ஸ் ஆப்’ துரோகம் செய்துவிட்டதாகவும் பலர் ஆவேசம் கொள்கின்றனர். அதிலும், ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை பயனாளிகளின் விருப்பங்கள், இணைய உலாவல், அவர்கள் பிறந்த நாள், பணியாற்றும் இடம் என முழு ஜாதகமே தெரியும் என்ற நிலையில், ‘வாட்ஸ் ஆப்’பின் இந்த முடிவு கூடுதல் அதிர்ச்சியை அளிக்கவே செய்கிறது.

அது மட்டும் அல்லாமல் ‘வாட்ஸ் ஆப்’ தனது சேவை வழியே பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் அனைத்தும் ‘என்கிரிப்ட்' செய்யப்பட்டுப் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துப் பாராட்டைப் பெற்ற நிலையில் அதற்கு விரோதமாகவும் இந்தப் புதிய முடிவு அமைகிறது.

இரண்டாவது சிக்கல், ‘வாட்ஸ் ஆப்’ அளிக்கும் தகவல்களை விளம்பர வருவாய்ப் பசி கொண்ட ஃபேஸ்புக் எப்படிப் பயன்படுத்தும் என்ற கவலை தனியுரிமை ஆர்வலர்களுக்கு அதிகம் இருக்கிறது.

கவலையில் ஒரு ஆறுதல்

இந்தக் கவலையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இந்தப் பகிர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது ‘வாட்ஸ் ஆப்’ தொலைபேசி எண்ணை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லை என பயனாளிகள் தெரிவிக்கலாம். ‘வாட்ஸ் ஆப்’பில் தோன்றிக்கொண்டிருக்கும் பெட்டி அறிவிப்பு, அதன் புதிய விதிமுறைகளை ஏற்கக் கோருகிறது. அதை ஏற்பதற்கு முன், ‘மேலும் விரிவாகப் படிக்க விருப்பம்' எனும் வாய்ப்பை ‘கிளிக்' செய்தால், தொலைபேசி எண்ணைப் பகிர்ந்துகொள்ள விரும்புவது தொடர்பான சிறிய கட்டம் தோன்றும். அதில் உள்ள ‘டிக்' குறியை கிளிக் செய்து நீக்குவதன் மூலம் இதற்கு உடன்படாமல் இருக்கலாம்.

இதை அறியாமல் ஏற்கெனவே புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம். ‘செட்டிங்' பகுதிக்குச் சென்று இந்த வாய்ப்பை கிளிக் செய்து, தொலைபேசி எண் பகிர்வில் இருந்து வெளியேறலாம். ஆனால் ஒன்று, இதன் மூலம் தொலைபேசி எண் பகிர்விலிருந்துதான் விலக முடியுமே தவிர, பயனாளிகளின் மற்ற விவரங்களை ஃபேஸ்புக்குடன் ‘வாட்ஸ் ஆப்’ பகிர்ந்துகொள்வதைத் தடுக்க முடியாது. அதற்குப் பயனாளிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

உங்கள் விவரங்கள்

‘வாட்ஸ் ஆப்’ சேவையைக் கடைசியாகப் பயன்படுத்திய விவரம், மற்ற பயனாளிகளுடன் தொடர்புகொண்ட விதம், பயன்படுத்திய இணையதளங்கள், சேவை நிறுவப்பட்ட நாள், பயன்படுத்தும் காலம், பயன்படுத்தும் சாதனம், அதில் உள்ள இயங்குதளம், பிரவுசர் விவரம், மொபைல் சேவை உள்ளிட்ட விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. இவை ஃபேஸ்புக்குடன் மட்டும் அல்ல, ஃபேஸ்புக் குடும்பத்தில் உள்ள நிறுவனங்களுடனும் பகிரப்படும்.

மற்றபடி, பயனாளிகளின் செய்திகள் தொடர்ந்து ‘என்கிரிப்ஷன்' பாதுகாப்புடன் இருக்கும் என்றும் பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்றும் ‘வாட்ஸ் ஆப்’ தெரிவித்துள்ளது.

ஆனால், ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, ‘எங்கள் தனியுரிமை கொள்கையில் மாற்றம் இருக்காது' எனும் ‘வாட்ஸ் ஆப்’பின் உறுதி மொழி மீறப்பட்டுவிட்டது.

யாருக்கு லாபம்?

ஃபேஸ்புக் தனது சேவையை இலவசமாக வழங்கி, இணையவாசிகளை வளைத்துப்போட்டுள்ளது. ஆனால், பயனாளிகள் மூலம் அதற்கு விளம்பர வருவாய் கொட்டுகிறது. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தப் பதிவு செய்யும்போதே, அவர்களின் பெயர், இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்துக்கொள்ளும் ஃபேஸ்புக், அதன் பிறகு பயனாளிகள் பற்றிய கூடை கூடையாக விவரங்களைச் சேகரித்துக்கொள்கிறது.

ஒருவர் எந்தப் பக்கங்களை எல்லாம் ‘லைக்' செய்கிறார் என்பதில் தொட‌ங்கி அவர் எந்த இணையப் பக்கங்களைச் சென்று பார்க்கிறார், எந்த வகையான சார்பு கொண்டிருக்கிறார் என எண்ணற்ற விவரங்களை ஃபேஸ்புக் சேகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு பயனாளிகள் பற்றி 92 வகையான காரணிகளைத் திரட்டுவதாக அண்மையில் ஃபேஸ்புக்கே தகவல் வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக்கை நட்பு வலையாகப் பயன்படுத்தும் அப்பாவிப் பயனாளிகள், தங்களைப் பற்றி ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களின் அளவைத் தெரிந்துகொண்டால் திடுக்கிட்டுப் போய்விடுவார்கள்.

இந்தத் தகவல்களைத் திரட்டு வதற்கான உரிமையை ஃபேஸ்புக்கின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயனாளிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியுள்ளனர் என்பதால் இதில் சட்ட விரோதம் என எதுவுமில்லை. சரி எதற்காக இத்தனைத் தகவல்திரட்டு? விளம்பர வருவாய் ஈட்டுவதற்குத்தான்.

பொத்தாம் பொதுவான விளம்பரங்களால் இணைய உலகில் அதிக பலன் இல்லை எனத் தெரிந்துவிட்ட நிலையில், வாடிக்கையாளருக்கு ஏற்ற இலக்கு சார்ந்த விளம்பரங்கள்தான் ஏற்றதாகக் கருதப்படுகின்றன. இப்படிக் குறி பார்த்து நெத்தியடி விளம்பரங்களை வழங்க பயனாளிகள் தொடர்பான தகவல்கள் தேவைப்படுகின்றன. இதனால் தான் ஃபேஸ்புக், தனது பயனாளிகள் எதை எல்லாம் ‘லைக்' செய்கின்றனர், இணையத்தில் எங்கெல்லாம் செல்கின்றனர் என விடாமல் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இதன் மூலம் திரட்டும் தகவல்களைக் கொண்டு, தனிப்பட்ட பயனாளிகளைக் குறி வைத்து அவரது ‘டைம் லைன்' அருகே விளம்பரங்களை வெளியிடுகிறது. பெரும்பாலான நேரங்களில் பயனாளிகள் தங்களை அறியாமல் கிளிக் செய்யத் தூண்டும் அளவுக்கு அவர்கள் ஆர்வம் சார்ந்தவையாகவே இந்த விளம்பரங்கள் அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு மின்வணிகத் தளத்தில் நவீன ஆடை வாங்கிய பயனாளியின் டைம்லைனில் ஃபேஷன் நிறுவன விளம்பரம் தோன்றும். இத்தகைய விளம்பரங்கள் மூலம்தான் ஃபேஸ்புக் வருவாயை குவித்துக் கொண்டிருக்கிறது.

விளம்பர வலை

இந்த விளம்பர வலையை மேலும் ஆழமாக விரிப்பதுதான், ஃபேஸ்புக்குடன் ‘வாட்ஸ் ஆப்’ தகவல் பகிர்வின் நோக்கமாக அமைகிறது. ‘வாட்ஸ் ஆப்’பே கூறியுள்ளது போல, இது ஃபேஸ்புக் மேலும் சிறந்த முறையில் இலக்கு விளம்பரத்தை வழங்கவும், பொருத்தமான நட்புக் கோரிக்கையைப் பரிந்துரை செய்யவும் உதவும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஃபேஸ்புக்கிடம் பயனாளிகள் தொடர்பான தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும், அவர்களில் பலரது தொலைபேசி எண்கள் கிடையாது. இருக்கும் எண்களும் பயன்படுத்தப்படும் எண்தானா என்பது தெரியாது.

பயனாளிகள் ஃபேஸ்புக்கிடம் தங்கள் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கும் வசதி உள்ளது. ‘வாட்ஸ் ஆப்’, தகவல் பகிர்வின் மூலம் அந்தப் பயனாளி ஃபேஸ்புக் பயனாளியாகவும் இருந்தால், இரண்டையும் தொடர்புபடுத்தி ஃபேஸ்புக் அவரது தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளும். இது ஃபேஸ்புக்கிற்கு மிகவும் அவசியம். ஏன் தெரியுமா?

ஏனெனில், வர்த்தக நிறுவனங்களிட மிருந்து ஃபேஸ்புக் அவர்களின் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கேற்ற விளம்பரங்களை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் வர்த்தக நிறுவனங்கள் பொத்தாம் பொதுவாக இந்த எண்களைத் திரட்டியிருப்பதால், அந்த எண்களை ஃபேஸ்புக் பயனாளிகளுடன் தொடர்புபடுத்த முடியாமல் இருக்கிறது. இந்த இடைவெளியை ‘வாட்ஸ் ஆப்’ தகவலால் நிரப்ப முடியும் என்பதால்தான் ஃபேஸ்புக் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

சரி, இது பயனாளிகளை எப்படிப் பாதிக்கும்? பல விதங்களில் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். முதலில், குறிப்பிட்ட பயனாளி ஃபேஸ்புக் வசம் தனது தொலைபேசி எண்ணைச் சமர்ப்பிக்க விரும்பாத நிலையில், அவருடன் ‘வாட்ஸ் ஆப்’பில் தொடர்பில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண் கிடைக்கும் பட்சத்தில் அதன் மூலமே இவரது தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

மாற்று என்ன?

பொருத்தமான விளம்பரங்கள் பயனாளிகளுக்கும் ஏற்றது என்று கூறப்பட்டாலும், இதில் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாகப் பயனாளிகளுக்குத் தங்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவது மற்றும் தாங்கள் குறி வைக்கப்படுவது தொடர்பாக அறியாமல் இருக்கும்போது, இத்தகைய இலக்கு விளம்பரங்கள் கேள்வியை எழுப்புகின்றன.

மேலும் இணையவாசிகளின் அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக இது அமையலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விளம்பர உத்தி எந்த அளவுக்குச் செல்லக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள, கடந்த 2015ம் ஆண்டு ஃபேஸ்புக் விளம்பரம் தொடர்பான சர்ச்சையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டேனியல் கேப் எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவருக்குச் சவப்பெட்டிச் சேவை தொடர்பான விளம்பரத்தை அவரது ‘டைம்லைன்' ஃபேஸ்புக் பக்கத்தில் தோன்றச்செய்தது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் உண்டாக்கியது.

ஆனால், இந்த விளம்பர உத்தி ஃபேஸ்புக்கால் மட்டும் பின்பற்றப்படவில்லை. தேடியந்திரமான கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பயனாளிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அதற்கேற்ற பொருத்தமான விளம்பரங்களை அளித்துவரும் உத்தியை வெற்றிகரமாகப் பின்பற்றிவருகின்றன. குறிப்பாக 2004-ம் ஆண்டில் ‘ஜிமெயில்' சேவையில் இமெயிலின் உள்ளடக்கம் தொடர்பான விளம்பரங்கள் தோன்றும் ஏற்பாடு தனியுரிமை சர்ச்சையில் சிக்கியது. இமெயில் உள்ளடக்கம், மனிதர்களால் படிக்கப்படவில்லை, கம்ப்யூட்டர்களால் ஸ்கேன் செய்யப்படுவதாக கூகுள் பதில் அளித்தது. இணைய உலகில் இது போன்ற சர்ச்சைகள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், ‘வாட்ஸ் ஆப்’ பகிர்வுப் பிரச்சனை வெடித்திருக்கிறது.

இதில் பயனாளிகள் செய்யக்கூடியது என்னவெனில், ‘வாட்ஸ் ஆப்’ தவிர்த்து, நம்மிடையே இருக்கும் இதர‌ மாற்று மெசேஜிங் சேவை பற்றித் தெரிந்து கொள்வதுதான். ஹைக், டெலிகிராம், சிக்னல், வீசாட், லைன் உள்ளிட்ட பல சேவைகள் இருக்கின்றன. ஒரு சில ‘வாட்ஸ் ஆப்’ பயனாளிகள் வேறு மெசேஜிங் சேவைக்கு மாற இருப்பதாக ட்விட்டர் மூலம் அறிவித்துத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இணைய யுகத்தில் தங்கள் தனியுரிமை பலவிதங்களில் ஊடுருவப்படுவது தொடர்பாக மக்கள் ஓரளவு விழிப்புணர்வைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x