Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM
உணவை எப்படி உற்பத்தி செய்வது என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துவிட்ட பின், உணவைப் பதப்படுத்துதல் என்ற கண்டறிதல் நாகரிக வளர்ச்சியின் எளிய முன்னேற்றம் மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், போர்களால் சூழப்பட்டிருந்த 18ஆம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்குக் காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது.
இன்றைக்கும்கூட குளிர்பதனம் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு உணவுப்பொருள்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றல் என்பது இயற்கை, மனிதப் பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ உதவுகிறது. ஏனென்றால், அந்த நேரத்தில் மின்சார விநியோகமும் இருக்காது, புதிய உணவுப்பொருள்களும் கிடைக்காது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப் பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.
பதப்படுத்தினால் பரிசு
அப்போது ஃபிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு 12,000 பிராங்க் பரிசாக அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுநர், பீர் தயாரிப் பவர் என பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருந்த அவர், ஒரு பார்சி.
உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றை கார்க்கால் அடைத்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும்கூட சாப்பிடக்கூடியதாக அவை இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவத் தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.
உணவு கெடுவதன் காரணம்
ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்குப் பிறகே லூயி பாஸ்சர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவைக் கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார்.
உணவைப் பதப்படுத்துவது என்பது பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுப்பதுதான். அத்துடன் கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதால் சிக்குப் பிடித்துப் போவதைத் தடுப்பதும் ஆகும். உணவுப் பதப்படுத்தும் நுட்பம் மூலம் சுவையான பல புதிய உணவுப் பொருள்களும் கண்டறியப்பட்டுள்ளன. தயிர், சீஸ் போன்றவை எடுத்துக்காட்டு.
1810இல் ஆங்கிலேயரான பீட்டர் தூரந்த் மேம்படுத்தப்பட்ட உணவுக் கலத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். பாட்டில் உணவுக் கலனின் மூடியாக இருந்த கார்க்குக்கு பதிலாக, பற்றவைக்கப்பட்ட உறுதியான உலோக மூடியை அவர் கண்டறிந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது நாட்டைச் சேர்ந்த பிரியன் டான்கின், ஜான் ஹால் ஆகிய இருவரும் பாட்டில்களுக்குப் பதிலாக உலோகக் கலன்களில் உணவை அடைத்து விற்கும் தொழிற்சாலையைத் தொடங்கினர்.
அந்தக் காலத்தில் இருந்து தொழிற்சாலைரீதியில் பதப்படுத்துவது மட்டும்தான் உணவை பதப்படுத்துவதாக பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், ஈரப்பதத்தைக் குறைத்தல், பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகளை நீக்குதல், நுண்ணுயிரிகள் புதிதாக வளர்வதைத் தடுத்தல், நோய்க்கிருமி கலக்காமல் இருக்க காற்றுப்புகாத கலனில் அடைத்தல் போன்றவைதான் உணவு பதப்படுத்துதலின் அடிப்படைகள்.
அப்படிப் பார்த்தால், நம் நாட்டில் காலங்காலமாக உணவு பதப்படுத்துதல் நடந்து வந்திருக்கிறது. காயை வற்றலாக்குவதும் மீனை கருவாடாக ஆக்குவதும் சிறந்த பதப்படுத்தும் முறைகளே.
அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறைகள் (வற்றல், ஊறுகாய்) செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆற்றலை வீணடித்து சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், இயற்கை சக்தியையே (சூரியசக்தி) பதப்படுத்துவதற்கு செலவழித்தன. ஆனால், இந்திய உணவு பதப்படுத்தும் முறைகளை முழுமையாக அங்கீகரித்து நமது அரசே ஏற்றுக் கொள்வதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT