Published : 17 Mar 2017 10:14 AM
Last Updated : 17 Mar 2017 10:14 AM

காதல் வழிச் சாலை 26: முக்கோணக் காதல் பாடம்

என்னுடைய காதல் உண்மையானது தானா? வெறும் உடல் கவர்ச்சியில் மயங்கிவிட்டேனா? அல்லது உளப்பூர்வமாகத்தான் நேசிக்கிறேனா? இப்படிச் சிலருக்கு சந்தேகம் எழலாம். காதலித்த போது இருந்த வேகமும் தாபமும் இப்போது இல்லையே… எங்கே போயிற்று அந்தக் காதல் சூறாவளி என்றும் சிலருக்குத் தோன்றலாம். இவற்றுக்குப் பதில் தெரிய வேண்டுமானால் நீங்கள் ஒரு முக்கோணத்துக்கு வர வேண்டும். முக்கோணக் காதலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல இது முக்கோணக் காதல் கோட்பாடு (Triangular Theory of Love).

காதல் எப்படிப் பரந்து விரிந்ததாகவும் விளக்குவதற்குக் கடினமானதாகவும் பன்முகம் கொண்டதாகவும் இருக்கிறதோ அதே போல அதை விளக்க முற்படும் கோட்பாடுகளும் ஏராளமானவை. ஆனால் ஓரளவுக்கு எல்லோரும் ஏற்றுக்கொண்ட, நடைமுறையில் பயனுள்ளதான ஒரு கோட்பாடே இந்த முக்கோணக் கோட்பாடு. உளவியலாளர் ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க் (Robert Sternberg) என்பவரின் எண்ண வெளியில் உதயமான இந்தக் கோட்பாடு உங்களின் சந்தேகங்களுக்கு ஓரளவு விளக்கம் சொல்லும்.

என்னருகே நீ இருந்தால்

அருகில் இருக்கும் முக்கோணத்தைப் பாருங்கள். அதன் மூன்று முனைகளிலும் மூன்று விஷயங்கள் இருக்கும். Intimacy என்னும் நெருக்கம், Passion என்னும் அதீத உணர்வு, Commitment என்னும் அர்ப்பணிப்பு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். காதல் என்று ஒன்று இருந்தால் இந்த மூன்றும் தனியாகவோ ஒன்றுடன் ஒன்று இணைந்தோ இருக்கும் என்பது உளவியலாளர் ராபர்ட்டின் கணிப்பு.

காதலர்களின் நெருக்கம் (intimacy) முக்கிய மானது. எந்தவொரு உறவுப்பிணைப்பும் உறுதியாக இருப்பதற்கு இந்த அந்நியோன்யம் அவசியம். ‘அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். உள்ளும் புறமும் ஆழமாக அவரை நான் அறிவேன். என்னருகில் அவர் இருந்தால் மகிழ்வாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்’ என்பது இதுதான். நெருக்கம் அதிகமாக ஆக உணர்வு நெருக்கத்தை அடுத்து உடல் நெருக்கமும் தானாக ஏற்பட்டுவிடும். அதிக நெருக்கம் அதிக காமத்தில் முடியும். அதிக காமம் அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கி விடும்.

அனைத்துக்கும் காதலே பொறுப்பு

அடுத்து அதீத உணர்வு எனப்படும் passion. காதலரின் மீது ஏற்படும் விளக்க முடியாத ஒரு கவர்ச்சி இது. அவரின் நினைவும் அண்மையும் பரவசம் தரும். நம் கண்ணுக்கு உலகிலேயே மிகக் கவர்ச்சியாகவும், காதலையும் காமத்தையும் ஒருசேரத் தூண்டுவதாகவும் இருக்கும் ஒரு உணர்வு நிலை இது.

மூன்றாவதாகப் அர்ப்பணிப்பு (commitment). நாம் என்றைக்கும் சேர்ந்திருப்போம். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். குடும்பம், குழந்தைகள் என எல்லா எதிர்கால நிகழ்வுகளுக்கும் நானே உத்தரவாதம். இனி நான் என்பது இல்லை. எல்லாமே நாம்தான் என்பதே காதலின் இன்னொரு முக்கோண முனை சொல்லும் சேதி. சுருங்கச் சொன்னால் காதல் முடிந்து கல்யாணம் செய்வது என்றும் நீண்ட கால ஒப்பந்தத்துக்காகத் தயாராவதும்தான் இது.

காதலிக்கிறோம் என்று சொல்லும் போது இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு விஷயங்கள் சேர்ந்து இருக்கும். இந்த உணர்வுக் கலவையின்படி பார்த்தால் ஏழு விதமான காதலின் நிலைகள் நமக்குத் தெரிய வரும்.

முதல் நிலை, முக்கோணத்தின் உச்சியைப் பாருங்கள். அங்கே ‘லைக்கிங்’ எனப்படும் விரும்புதல் இருக்கும். உங்களுக்குள் நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். அடிப்படையில் ஒரு நல்ல நட்பை நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவே இது. காதலின் மற்ற இரண்டு அம்சங்களான அதீத உணர்வும் நீண்ட கால ஒப்பந்தத்துக்கான அர்ப்பணிப்பும் இதில் இருக்காது.

இரண்டாவது நிலை, முக்கோணத் தின் இடப்புறத்தில் இருக்கும் அதீதக் கவர்ச்சி மட்டும் இருந்தால் அதுதான் ‘இன்ஃபாச்சுவேஷன்’ எனப்படும் ஈர்ப்பு. வெறும் உடல் கவர்ச்சியிலும் காமக் கிளர்ச்சியிலும் ஒருவரின் மீது காதல் கொள்வதுதான் இது. கண்டதும் காதல் என்பதும் இதுதான். உணர்வு ரீதியான பிணைப்பும் நெடும் வாழ்க்கைப் பயணத்துக்கான அர்ப்பணிப்பும் இல்லாததால் இந்த விடலைக் காதலுக்கு ஆயுள் குறைவு. ஆனாலும் பெரும்பாலான காதல்கள் இப்படித்தான் ஆரம்பிக்கும். அதைக் காப்பாற்றி மேலே கொண்டு செல்வது அவரவர் பொறுப்பு.

மூன்றாவது நிலை, முக்கோணத்தின் வலது முனையைப் பாருங்கள். அங்கே ‘கமிட்மெண்ட்’ என்கிற அர்ப்பணிப்பு மட்டும் இருக்கும். அந்தக் காதலுக்கு வெறுமைக் காதல் என்றே பெயர். ‘உன் மேலே எனக்கு எதுவும் தோணலை. உன்னைப் புரிஞ்சிக்கவும் விரும்பலை. ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம், காலம் முழுக்க உன்னைக் காப்பாத்தறேன்’ என்ற உறவுகளெல்லாம் இதில்தான் சேர்த்தி.

உடல் நெருக்கமும் இல்லை. உணர்வுப் பிணைப்பும் இல்லை. சரியாகச் சொன்னால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சிலவற்றின் ஆரம்பக் கட்டம் இப்படி இருக்கும். அதே போல வாழ்ந்து சலித்துப் போன தம்பதியினரிடமும் இந்த வெற்றுக் காதலைப் பார்க்கலாம். மேற்சொன்ன மூன்று வகைகளும் காதலுக்கான ஒரு அம்சத்தை மட்டுமே கொண்டிருப்பதால் நீண்ட காலம் நீடிப்பது கடினம். அடுத்து நீங்கள் பார்க்கும் காதலின் வகைகள் இரண்டு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

நான்காம் நிலை, காதல் முக்கோணத்தின் இடப்பக்க சுவரைப் பாருங்கள். நெருக்கமும் அதீத உணர்வும் சேர்ந்த ரொமாண்டிக் காதல் இது. சந்தேகமின்றி பதின்பருவத்திலும் இளம்வயதிலும் வருவது இதுதான். ஒரு புதிய உறவின் ஆரம்பத்தில் கிளுகிளுப்பும் கவர்ச்சியும் நெருக்கமும் ஒருசேர சிறகடித்துப் பறக்கும் காதல் காலம் இது. காதல் மோகம் இருக்குமே தவிர அது நீண்ட கால உறவாக நீடிக்கத் தேவையான அர்ப்பணிப்பு இருக்காது.

ஐந்தாம் நிலை, வலப்பக்கச் சுவரைப் பாருங்கள். நெருக்கமும் அர்ப்பணிப்பும் சேர்ந்து இருக்கும் இதை தோழமைக் காதல் (companionate love) என்கிறோம். நீண்ட காலம் ஒன்றாக இருக்கும் தம்பதியினரிடம் இதைக் காணலாம். காமமெனும் அதிதீவிர உணர்வு காலப்போக்கில் குறைந்த நிலையிலும் பரஸ்பர உணர்வு நெருக்கமும் ‘உனக்காக நான், எனக்காக நீ’ என்ற வாழ்க்கை ஒப்பந்தமும் தொய்வின்றித் தொடர் வதால் இது ஒரு ஆரோக்கியமான காதல்.

ஆறாம் நிலை, முக்கோணத்தின் அடிச்சுவர் விளக்குவதுதான் வெற்றுக் காதல் எனப்படும் fatuous love. ஒன்றாகச் சேர்ந்திருப்போம் என்ற அர்ப்பணிப்பு இருக்கும். உடல் ரீதியிலான உறவுப் பிணைப்பும் காம தேவனின் தயவில் குறைவின்றி இருக்கும். ஆனால் மன ரீதியான நெருக்கம் இருக்காது. காமம் முக்கியம். அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல கல்யாணம் முக்கியம் என்று மட்டும்தான் இவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் காதலின் முக்கிய அம்சமான மன நெருக்கம் இல்லாததால் இதுவும் சற்றுக் குறையுள்ள காதலே. இதைக் கற்பனைக் காதல் (fantasy love) என்றும் குறிப்பிடலாம்.

ஏழாம் நிலை, இறுதியாக முக்கோணத்தின் நடு மையத்துக்கு வாருங்கள். இதுவே நிறைவான காதல் (consummate love). காதலின் இன்றி யமையாத மூன்று அம்சங்களும் ஒருங்கே இணைந்திருக்கும் இந்தக் காதல் அரிதானது. அமைந்தவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே. உணர்வு நெருக்கத்தோடு கூடிய உடல் சேர்க்கையும் காலா காலத்துக்கு வாழ்க்கைப் பாதையில் ஒருங்கே பயணிப்பதற்கான அர்ப்பணிப் பும் இருவரிடமும் இருப்பதால் அவர்களின் காதல் வாழ்வில் எந்தக் குறையும் இருக்காது.

முழுமையாகக் காதலிக்கலாமா?

இப்படியொரு வாழ்க்கை, அது அமைந்தவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் மட்டுமே புரியும். பேசுவதற்கு நன்றாக இருந்தாலும் இவ்வளவு முழுமையான காதலைப் பார்ப்பது கடினம். எல்லா விதத்திலும் முழுமையான மனிதர்களை எங்காவது பார்க்க முடிகிறதா? அது சாத்தியமில்லாத போது அந்த மனிதர்களின் காதல் மட்டும் அவ்வளவு முழுமையானதாக இருக்க முடியுமா என்ன? இருந்தாலும் நானும் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் காதலின் முழுமையான கட்டமைப்பு தெரிய வேண்டியது அவசியம்.

சங்க இலக்கியம் தொடங்கி, திரைப்பாடல்கள் வரை போற்றிப் புகழப்படும் காதல் ஒரு அறிவியல்பூர்வமான உந்துசக்தி. மனித குலத்தின் இன்றியமையாத வேட்கைகளில் முக்கியமானது. வேதிப்பொருட்களின் தாண்டவத்தில் கொண்டு செல்லப்படும் காதலை கொஞ்சம் நின்று நிதானித்து கவனியுங்கள். உங்கள் காதல் எந்த இடத்தில் பொருந்தி வருகிறது என்று பாருங்கள். உங்கள் காதலரோடு சேர்ந்து இந்த முக்கோணத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எப்படிக் கொண்டு சென்றால் காதல் வாழ்க்கையும் அதைத் தொடர்ந்த மண வாழ்வும் இனிப்பாக இருக்கும் என்பதை அலசுங்கள். நான்கும் நான்கும் எட்டு என்பது எப்படிக் கணித உண்மையோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதும் ஒரு அறிவியல் உண்மை. இப்படிச் சொல்வது வகுப்பு எடுப்பதைப் போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்க இது போன்ற வகுப்புகளும் அவசியம்தானே!



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x