Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM
பன்னிரெண்டு தகவல்கள் ‘பர்ஸ்’ஸனல் ஃபைனான்ஸ்’ விஷயத்தில் அடிப்படையானவை. அவற்றை ‘அ’ தொடங்கி ‘ஔ’ வரையில் அடுக்கும் புதிய ஆத்திசூடி இது. இந்த வாரம் ‘ஐ’முதல் ‘ஔ’ வரை.
ஐடியா பண்ணு!
இது லாபம் சம்பாதிக்க மிக மிகத் தேவையான விஷயம். ஏனென்றால் எதிலே அதிக லாபம் கிடைக்கும்? எதைத் தவிர்க்க வேண்டும்? என்று ஐடியாவைத் தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் தங்கம் விலை கிடுகிடுவென்று உயரும். அப்போது கையில் இருக்கும் தங்கத்தை விற்றுக் காசாக்கலாமா என்று ஐடியா பண்ண வேண்டும். சில இடங்களில் ரியல் எஸ்டேட் விலை குறைவாக இருக்கும். வாங்கிப் போட்டால் விலை ஏறும் வாய்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து வாங்க வேண்டும். இதற்கு ஐடியா வேண்டும்.
இது ஒருபக்கம் என்றால் மொத்தமாக முதலீடுசெய்ய முடியாது என்ற சூழல் வரும்போது ஆர்.டி எனப்படும் மாதாமாதம் சேமிக்கும் முதலீட்டு முறையைக் கடைபிடிக்க வேண்டும். சீட்டு சேர்ந்து அதன் மூலம் பணத்தைத் திரட்டலாம் என்பதற்கு ஐடியா தேவை. யோசிக்க யோசிக்கப் பல ஐடியாக்கள் உதயமாகும். அது முதலீட்டுக்கு முக்கியம்!
ஒழுங்குமுறை தேவை!
இந்த இடத்தில் ஒழுங்குமுறை எனச் சொல்ல வரும் விஷயம் போர்ட்ஃபோலியோ! சமையலறையில் பாத்திரங்களைத் தேவைக்கு எடுக்கும் வகையில் அடுக்கி வைத்திருப்பதைப் போல உங்கள் முதலீட்டையும் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். இதில் ஒழுங்கு என்பது எந்த வகை முதலீட்டில், எவ்வளவு தொகை போடுகிறோம் என்பதைச் சொல்கிறது. இது ஒழுங்காக இருந்தால்தான் வெற்றிகரமான முதலீட்டாளராக லாபம் சம்பாதிக்க முடியும்.
உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், வங்கி சேமிப்பு, ரியல் எஸ்டேட், கமாடிட்டி என்று எல்லா வகை முதலீடும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒருவேளை பங்குகள் சரிந்து உங்களைச் சோதனைக்குள்ளாக்கினால் வங்கிச் சேமிப்பு உங்களைக் காப்பாற்றும். வங்கிச் சேமிப்பில் மிகக் குறைந்த வருமானம் கிடைக்கிறதே என்று யோசிக்கும்போது தங்கம் விலையேறித் தங்கமான பணத்தைக் கொட்டும். அதனால் உங்கள் முதலீட்டில் ஒழுங்குமுறை இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஓடும் பிள்ளையை நம்பாதே!
இந்த ஓடும் பிள்ளைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? வசதியானவர்கள் வீட்டில் இப்படிப்பட்ட ஓடும் பிள்ளைகள் இருப்பார்கள். அதாவது சொன்ன வேலையைச் செய்வதற்கான ஆட்கள். முதலீட்டில் ஓடும் பிள்ளைகள் யார்? பங்கு முதலீட்டின்போது வருவார்கள், “சார்... ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க... மத்ததை நாங்க பார்த்துக்கறோம்” என்பார்கள். “வங்கிச் சேமிப்பில் மாசாமாசம் நான் வந்து பணத்தை கலெக்ட் பண்ணிட்டுப் போய் கட்டுறேன்” என்பார்கள். இப்படி பங்குச் சந்தையில் நமக்காக வர்த்தகம் செய்ய வருபவர்கள். ரியல் எஸ்டேட்டில் நம் நிலத்தை விற்க, பாதுகாக்க பவர் கொண்டாட வருபவர்கள். வங்கிச் சேமிப்புக்கு உதவுவதாக வரும் ஏஜெண்ட்கள் எல்லாருமேதான் இந்த ஓடும் பிள்ளைகள்.
அவர்கள் சொன்னபடி செய்யாமல் போனால் நமக்கு நஷ்டம் வரும். பங்குச் சந்தையில் நமக்குத் தெரியாத பங்குகளை வாங்கி விற்று புரோக்கர் கமிஷனை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். ரியல் எஸ்டேட்டில் பவர் கொடுத்தவர் பணத்தை அள்ளிக் கொண்டு போய்விடுவார்.
ஓடும் பிள்ளை ஒருநாள் ஓடிப் போகும்போது நாம் அலறியபடி நிற்போம். அதனால், முதலீட்டில் யாரையும் நம்பாதீர்கள்.
ஒளரப்பிரகம் ஆகாதே!
ஔரப்பிரகம் என்றால் ஆட்டுமந்தை என்று பொருள். நம் முதலீட்டாளர்களிம் மனநிலை பெரும்பாலும் ஆட்டுமந்தையாகத்தான் இருக்கிறது. எல்லோரும் ஒரே பக்கம் சாய்வதுதான் நமக்கு வாடிக்கையாக இருக்கிறது! அந்த மனநிலை மாறினாலே நாம் வெற்றிகரமான முதலீட்டாளராக ஆகிவிடலாம்.
முதலீட்டுப் பிதாமகன் என்று சொல்லப்படும் வாரன் பஃபெட் சொல்லும் வார்த்தைகள் இவை. எதிர் திசையில் பயணிக்க வேண்டும். அதாவது எல்லோரும் சந்தை சரிகிறது என்று வெளியே ஓடிவரும்போது நீங்கள் உள்ளே நுழைய வேண்டும். தரமான பங்குகள் தாராளமான விலையில் வாங்க்க் கிடைக்கும். சந்தை உச்சத்தைத் தொடும்போது எல்லாருக்கும் அதன்மீது ஈர்ப்பு ஏற்படும். திடுதிடுவென்று உள்ளே ஓடிவருவார்கள். அப்போது உங்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியே வாருங்கள். எளிதாகச் சொன்னாலும் இதற்கு மனதிடம் வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளுங்க்ள்.
பங்குச் சந்தை முதலீட்டுக்கு இது மிகவும் பொருந்தும். மற்ற முதலீடுகளைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஓர் இட்த்தைத் தேடிச் சாடும்போது நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம். ஏனென்றால் எல்லோரும் ஒரு திசையில் ஓடும்போது நெருக்கடி ஏற்படும்.
ஆக மந்தையில் ஓர் ஆடாக இருக்காமல் மாத்தி யோசிங்க!
முற்றும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT