Published : 29 Jul 2016 12:53 PM
Last Updated : 29 Jul 2016 12:53 PM
“காதுக்கு இனிமையாக இருக்கும்போது இசை என்கிறோம். நாராசமாக மாறினால் சத்தம் என்கிறோம். மற்றபடி எல்லா இடங்களிலும் எப்போதுமே இசை இருக்கத்தான் செய்கிறது. முறையாகக் கத்துக்கிட்டாதான் இசை வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் இதுவரை யாரிடமும் இசை கத்துக்கல” என சீரியஸாகப் பேசுகிறார் குறும்பு நிறைந்தவராகத் தோற்றம் கொண்ட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.
கோயம்புத்தூரில் ஆதி பள்ளி நாட்களிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். அதே நேரத்தில் அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்களின் போராட்ட வடிவமான ராப் (ரிதம் அண்டு பொயட்ரி) இசையால், ஈர்க்கப்பட்டார். “சும்மா இருக்குற நேரத்துல வீட்டு கம்ப்யூட்டரில் மியூசிக் கம்போஸிங் சாஃப்ட்வேரை டவுன்லோடு பண்ணி நான் எழுதுன படல்களை ராப் ஸ்டைலில் பாடி எதாவது பீட்டில் பதிவுசெய்வேன்” என்கிறார் ஆதி. 2005-ல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதை முழுமையாகப் பயன்படுத்திய இளைஞர்களில் இவரும் ஒருவர். விளையாட்டாகப் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் யூடியூபில் பதிவுசெய்தார். அதே நேரத்தில் சமூக வலைத்தளமான ஆர்க்குட் மூலம் சென்னையில் இருக்கும் ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது. “ஜீவாவும் நானும் சமூகக் கருத்துகளை இசை மூலமாக எப்படி வெளிப்படுத்தலாம் என்று பேசுவோம். கொஞ்சம் கொஞ்சமாக சவுண்ட் இன்ஜினீயரிங் புத்தகங்களைப் படிப்பது, யூடியூப் டுடோரியல் மூலமாக கீபோர்ட் வாசிக்கக் கத்துக்குறது என்று கிட்டத்தட்ட 5 வருஷம் தீவிரமாக இசையில் இறங்கினோம். எங்களுடைய பாடல்களை யூடியூபில் அப் லோட் செய்யும்போதெல்லாம் 1000- 1500 வியூஸ் வர ஆரம்பிச்சது” என்கிறார் ஆதி.
அசட்டு தைரியமும் இசை ஆர்வமும்
நல்லா படிக்கிற பிள்ளையான ஆதி 2011-ல் பி.இ. முடித்தவுடன் இனிமே இசையில் முழு மூச்சாக இறங்கப்போவதாக முடிவெடுத்து வீட்டில் சண்டைபோட்டுச் சென்னை புறப்பட்டார் ஜீவா. தன் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஆதியோடு ஒரு வீடெடுத்து தங்கினார். “ஏதோ அசட்டு தைரியத்துல நானும் ஜீவாவும் எங்களுடைய சொந்த ராப் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளிலும், கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சிகளிலும் மேடை ஏற்றினோம்” என்கிறார் ஆதி. ஆனால் அதில் கிடைத்த சொற்பப் பணம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே போதவில்லை. ஒரு கட்டத்தில் டேட்டா எண்ட்ரி வேலை செய்வது, பொறியியல் பாடப் புத்தகங்களை விலைக்குப் போட்டுக் கைச் செலவுக்குப் பணம் எடுப்பது என்கிற ரீதியில் வாழ்க்கை போராட்டமானது. வேறுவழியின்றி ஊருக்கே போகும் நிலை வந்தது. சரி, இனி பொறுப்பாகப் படிக்கிறேன் என்று சொல்லி வீட்டில் சம்மதம் வாங்கி மீண்டும் சென்னைக்கு வந்து எம்.பி.ஏ. படித்தார் ஆதி. “ஒழுங்கா படிச்சா எங்கே சுத்துனாலும் கடைசில ஒரு வேலைக்குப் போயிடலாம்னு நம்பிக்கை வந்துச்சு. அதனால படிச்சுக்கிட்டே தனியிசைப் பாடல்களில் இசையமைத்தேன்” என்கிறார். 2012-ல் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பத்தை ஜீவாவும் ஆதியும் தயாரிக்க, திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. யூடியூபில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆல்பத்தைப் பின்தொடர ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்கிற பெயர் பிரபலமானது.
முதலில் திணறிப்போனேன்
ஒரு நாள் எதேச்சையாக ஒரு டீக்கடையில் அனிருத்தைச் சந்திக்க, ஹிப்ஹாப் ஆர்ட்டிஸ்ட் ஆக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் ஆதி. அந்தப் பாடலின் வெற்றி ஒரு புறம் நம்பிக்கை கொடுத்தது. மறுபக்கம் எப்போ வேலைக்குப் போகப்போற என்று வீட்டிலிருந்து அழுத்தம் தர ஃபேஸ்புக்கில் “I am planning to do movies” என ஸ்டேடஸ் போட்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
முதலில் ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பை மட்டுமே இயக்குநர் சுந்தர்.சி கொடுத்தார். பின்னர் ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசையமைப்பாளரானார் ஆதி. வெகுஜன ரசனைக்குரிய பாடல்களுக்காக அந்தப் படம் ஓரளவு பேசப்பட்டாலும் பின்னணி இசை மோசமாக இருந்ததாகக் கேலிசெய்யப்பட்டது. “அதுவரைக்கும் பாடல்களை மட்டுமே இசையமைத்த நான் தடாலடியாக ஒட்டுமொத்தப் படத்துக்கும் பின்னணி இசையமைக்கத் திணறிப்போனேன். ‘பீட்’ எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா படத்தோட ஒட்டலை என்று என்னைக் கேலி செஞ்சாங்க” எனச் சிரிக்கிறார் ஆதி. அடுத்து ‘இன்று நேற்று நாளை’ பட வாய்ப்பைச் சிறப்பாகவே பயன்படுத்திக்கொண்டார். சைன்ஸ் ஃபிக் ஷன் படத்துக்குத் தேவையான சுவாரஸ்யமான இசை அதில் அமைந்தது.
தனி ஒருவன் அல்ல
அதை அடுத்து, ‘தனி ஒருவன்’ ஹிப்ஹாப் ஆதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. எல்லாப் பாடல்களும் ஹிட். பின்னணி இசையில் மிரட்டினார். “முதல் படத்தில் சொதப்பினேன் ஆனால் மளமளவெனக் கத்துக்கிட்டேன். ‘தனி ஒருவன்’ படத்தோட பிஜிஎம்-காக நானும் ஜீவாவும் மெனக்கெட்டோம். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் எவ்வளவோ கருத்து வேறுபாடு வரும். அவன் எக்ஸ்பெரிமெண்ட்டல் மியூசிக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பான். நானோ ஊர்க்காரப் பையன், அதனால மாஸா யோசிப்பேன். மொத்தத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்குறதுதான் என்னுடைய இசைன்னு வெளியே வருது” என நண்பனைப் பற்றிப் பெருமை கொள்கிறார் ஆதி. ‘ஹிப்ஹாப் தமிழா ஜீவா’ எனப் பெயர் வைக்கலாமே என ஆதி சொன்னபோதும் அதை ஏற்க மறுத்திருக்கிறார் ஜீவா.
தொடர்ந்து தங்களுடைய இசையில் புதிய இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் ஆதியும் ஜீவாவும். அதற்கு முக்கியக் காரணம் கோயம்புத்தூரிலிருந்து வந்த தன்னைப் போலவே சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ இயல்பான இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்துவது தன்னுடைய குறிக்கோள் என்கிறார் ஆதி. அந்த வகையில் யூடியூபில் பிரபலமான கரிஷ்மா ரவிச்சந்தருக்கு ‘காதல் கிரிக்கெட்’ பாடல், லயோலா கல்லூரி பேண்டில் இசைக்கும் கவுஷிக் கிருஷ்ணனுக்கு ‘கண்ணாலே கண்ணாலே’ பாடல், ராஜஸ்தானி கிராமிய இசைக் கலைஞருக்கு ‘யாரென்ன சொன்னாலும்’ பாடல் எனத் தன்னுடைய பாடல்களைப் பாடப் பல்வேறு இசைக் கலைஞர்களை வெவ்வேறு இடங்களிலிருந்து தேடிக்கொண்டுவருகிறார்.
சமீபத்தில் பரபரப்பான அவருடைய ‘டக்கரு டக்கரு’ ஆல்பம் ஆதிக்குத் திரைப்பட இயக்குநர் அந்தஸ்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது. தற்போது சுந்தர் சி.யின் தயாரிப்பில் முழுக்கப் முழுக்கப் புது முகங்களை வைத்துக் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல், இயக்கம் எனத் துறுதுறுப்புடன் விறுவிறுப்புடன் மீசையை முறுக்கியபடி இசையமைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஹிப்ஹாப் தமிழர்களான ஆதியும் ஜீவாவவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT