Last Updated : 09 Jun, 2017 09:06 AM

 

Published : 09 Jun 2017 09:06 AM
Last Updated : 09 Jun 2017 09:06 AM

‘பிரேக் அப்’பில் இருந்து வெளியே வருவது எப்படி?

காதலில் விழுவது எப்படி ஓர் இயல்பான விஷயமாக இருக்கிறதோ, காதல் பிரிவு என்பதும் அப்படியொரு இயல்பான விஷயமாகவே இருக்க வேண்டும். இன்றைய தலைமுறை இந்தக் காதல் பிரிவை, அதாவது ‘பிரேக் அப்’பைக் கையாளுவதற்குப் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறது. காதலிப்பது எப்படி ஓர் இனிமையான அனுபவமாக இருக்கிறதோ, அதேமாதிரி சில நேரங்களில் ‘விட்டு விடுதலையாகி’ விலகி நிற்பதும் இனிமையானதுதான். காதலில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடலாம் என்ற முடிவை எடுத்தபிறகு, அந்தப் பிரிவுத் துயரை ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அப்படி அந்தப் பிரிவின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டபின், அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது. ‘பிரேக் அப்’பைக் கையாள்வதற்கான சில ஆலோசனைகள்...

பின்தொடர்வதை நிறுத்துங்கள்

‘பிரேக் அப்’ என்ற முடிவுசெய்துவிட்ட பின், உங்களுடைய முன்னாள் காதலர்/காதலியைச் சமூக ஊடகங்களில் பின்தொடர்வதை நிறுத்திவிடுங்கள். அப்படிச் செய்யாமல், அவர்களுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பின்தொடர்வது உங்களுடைய பிரிவுத் துயரை மேலும் அதிகரிக்கும். என்னதான் நட்புரீதியான புரிதலுடன் நீங்கள் பிரிந்திருந்தாலும் உங்களுடைய பழைய காதல் வாழ்க்கை நினைவுகள் சமூக ஊடகங்களில் உங்களைத் துரத்திக்கொண்டேயிருக்கும். அதனால், ‘பிரேக் அப்’புக்குப் பிறகான சில மாதங்களுக்குச் சமூக ஊடகங்களில் முன்னாள் காதலர்/காதலியை ‘பிளாக்’ செய்துவிடுவது நல்லது. ஏனென்றால், அவர்கள் உங்களைவிட சீக்கிரமாகக் ‘காதல் பிரிவைக்’ கடந்துவிட்டார்கள் என்று தெரிந்தால், அதுவும் உங்களுடைய வலியை மேலும் அதிகரிக்கும்.

சமூக ஊடகங்களில் புலம்ப வேண்டாம்

‘பிரேக் அப்’ ஆன பிறகு, நீங்கள் எவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்பதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், உங்களுடைய சோகத்தைச் சமூக ஊடகங்களில் புலம்புவதால் எந்தப் பயனும் இருக்காது. இப்படிப்பட்ட செயல்கள் நட்புவட்டத்தில் உங்களுடைய தனிப்பட்ட ஆளுமையைக் குறைக்கவே செய்யும்.

அவசரம் வேண்டாம்

உங்களுடைய முன்னாள் காதலர்/காதலியைச் சீக்கிரமாக மறப்பதற்காக அவசர அவசரமாக இன்னொரு புதிய உறவைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ‘பிரேக் அப்’பில் இருந்து முழுமையாக வெளியே வருவதற்குமுன், புதிய காதல் வாழ்க்கையை ஆரம்பிக்க அவசரப்பட்டால் அந்த உறவு வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு குறைவு. பிரிவின் வலியிலிருந்து வெளியே வருவதற்கு உங்களுக்கும் போதிய அவகாசம் கொடுங்கள். ‘பிரேக் அப்’ஆகிக் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் புதிய உறவைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். உங்களுடைய முன்னாள் காதலர்/காதலி புதிய ‘ரிலேஷன்ஷிப்’க்குத் தயாராகிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக நீங்கள் அவசரமாகப் புதிய உறவில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

பழைய நினைவுகளை அசைபோட வேண்டாம்

உங்கள் முன்னாள் காதலர்/காதலியுடன் காதலிக்கும்போது சென்ற இடங்களுக்குச் செல்வதைக் கொஞ்ச காலத்துக்குத் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட ‘கஃபே’க்கள், உணவகங்கள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களுக்குச் சென்று பழைய நினைவுகளை அசைபோடுவதைத் தவிர்க்கலாம். இப்படிச் செய்வது உங்களுடைய வலியை ஆரம்பத்தில் குறைப்பதுபோல் தோன்றினாலும், பிறகு அந்த நினைவுகளே கூடுதல் வலியை உருவாக்கும். இதனால் பிரிவுத் துயரத்தில் இருந்து நீங்கள் வெளியே வருவது தாமதமாகலாம். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் புதிய இடங்களில் சந்திக்கலாம். ‘பிரேக் அப்’ வலிகளில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்த பிறகு, எங்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம்.

நண்பர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம்

‘பிரேக் அப்’பில் இருந்து வெளியே வருவதற்கு உங்களுடைய நண்பர்கள் என்னதான் நியாயமான ஆலோசனைகள் சொன்னாலும் அது உங்களுக்குப் பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன், அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் புலம்பினாலும் ஒருகட்டத்தில் உங்களை நண்பர்கள் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் ‘பிரேக் அப்’பில் இருந்து வெளியே வருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி செய்வதுதான் நல்லது. உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பது என உங்களை ‘பிஸி’யாக வைத்திருப்பது இந்த நேரத்தில் உதவும்.

பொருட்களை வைத்திருக்க வேண்டாம்

காதலிக்கும்போது அவர்கள் உங்களுக்கு அளித்த பொருட்களையோ, அந்த நேரத்தில் நீங்கள் பேசிக்கொண்ட வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உரையாடல்களையோ சேகரித்து வைத்திருப்பது ‘பிரேக் அப்’க்குப் பிறகு நல்லதல்ல. அந்தப் பொருட்களும் உரையாடல்களும் உங்களுடைய பிரிவு துயரத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் அவற்றைத் தூக்கியெறிவதும் அழித்துவிடுவதும்தான் சிறந்தது. உடற்பயிற்சி, யோகா வகுப்புகளுக்குச் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, உங்களை நீங்களே நேசிப்பது போன்ற விஷயங்கள் ‘பிரேக் அப்’பில் இருந்து சீக்கிரமாக வெளியே வருவதற்கு உதவிசெய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x