Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM
இன்றைக்கு நம் நாட்டுப் பழம்போல நாம் பாவிக்கத் தொடங்கிவிட்ட கொய்யாப் பழம் தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்ய இந்தியா வந்தபோதுதான் அவர்களுடன் கொய்யாவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. கொய்யா மரங்கள் இங்குள்ள தட்பவெட்ப நிலையைத் தாங்கும் தன்மை உள்ளவை. அதனால் கொய்யா மரங்கள் இங்கு அதிகம். கிராமங்களில் பலருடைய வீடுகளில் கொய்யாப் பழ மரம் இருக்கும். கொய்யாப் பழத்தில் விட்டமீன் சி மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன.
மேலும் கொய்யாப் பழத்தின் சிறப்பு என்னவென்றால் இது கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது. கொய்யாப் பழத்தின் வகைகள் பல. இலந்தப் பழ அளவிலும் கொய்யாப் பழங்களும் இருக்கின்றன. இவற்றைச் சீனக் கொய்யா என்கிறார்கள். நாம் கொய்யாப் பழத்தின் உட்புற நிறத்தை வைத்து சீனிக் கொய்யா, சர்க்கரைக் கொய்யா எனப் பிரித்துச் சொல்கிறோம். சில பகுதிகளில் இதை வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என்றும் அழைப்பதுண்டு. கொய்யாவில் உள்ள சத்துகள் அடிப்படையில் இரண்டிலும் வித்தியாசம் இல்லை. கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து, கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. பழுத்த கொய்யாவைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள கொய்யாவில்தான் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. மலச் சிக்கலுக்கு கொய்யா அற்புதமான மருந்து ஆகும். கொய்யாப் பழத்தின் இலைகள் பல் வலியைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. கொய்யாக் காயும் வயிற்றுக் கடுப்பு போன்ற பல விதமான உடல் உபாதைகளைத் தீர்க்கக்கூடியது. கொய்யா இலைகளைத் தேயிலை போல வெந்நீரில் கலந்து பருகிவந்தால் வயிற்றுப் பிரச்சினைகள் தீரும். நீரிழிவு நோயும் கட்டுக்குள் வரும். - எஸ். ராமசாமி, விளாத்திகுளம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT