Last Updated : 07 Oct, 2013 05:32 PM

 

Published : 07 Oct 2013 05:32 PM
Last Updated : 07 Oct 2013 05:32 PM

ஆடை தேர்ந்தெடுக்கும் கலை

அழகான தோற்றத்துக்கு எதையெல்லாம் அவசியம் கடைபிடிக்க வேண்டுமோ, அதேபோல சில விஷயங்களை அவசியம் கடைபிடிக்காமல் இருக்க வேண்டும். இது பிளஸ் சைஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது. சரி... பிளஸ் சைஸ் பெண்கள் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

உடம்புடன் ஒட்டிக்கொள்கிற மாதிரியான மெட்டீரியலில் ஆடை அணிவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். காரணம் அவை உடம்பின் ஒவ்வொரு வளைவிலும் ஒட்டிக்கொண்டு, உடம்பு ஷேப்லெஸ்ஸாக இருப்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். அந்த மாதிரி மெட்டீரியல்தான் வேண்டும் என்றால், அதை வாங்குவதற்கு முன் டிரையல் செய்து பாருங்கள். ஓரளவுக்கு பொருந்தியிருந்தால் மட்டுமே வாங்குங்கள்.

கொஞ்சம் பெரிய சைஸில் உடையணிவதில் தவறில்லை. அதற்காக தொளதொளவென சாக்குப்பை மாதிரி உடையணிவது தவறான டிரெஸ்ஸிங். உங்கள் சைஸுக்கு டிரெஸ் அணிந்தாலே போதும். சரியான சைஸில் அணிகிறேன் என்று சொல்லிக்கொண்டு மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக உடையணிவதும் தவறு. உடைகளின் சைஸ் ஒவ்வொரு கடைக்கும், பிராண்டுக்கும் வேறுபடும் என்பதால், வெறுமனே சைஸை மட்டும் சொல்லி வாங்கக் கூடாது. பொறுமையாகத் தேர்வுசெய்ய வேண்டும். போட்டுப் பார்த்து வாங்குவது உத்தமம்.

கண்களைக் கூசச் செய்கிற பளிச் நிறங்களில் ஆடைகளைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், அந்த நிறங்கள் உங்கள் தோற்றத்தை இன்னும் பெரிதாக்கிக் காட்டும். வெளிர் நிறங்களில் ஆடை அணிந்தால், உங்கள் பருமன் குறைந்து உயரம் அதிகமாகத் தெரியும்.

முழுக்க கோடுகள் வைத்த அல்லது ஆங்காங்கே கோடுகள் கொண்ட ஆடைகளை அணியும்போது, அந்தக் கோடுகள் குறுக்குவாக்கில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உடம்பின் குறுக்காக ஓடும் அந்த டிசைன், உங்களது இயல்பான தோற்றத்தைக்கூட அதிகப்படுத்திக் காட்டும். இதே டிசைன் நீளவாக்கில் இருந்தால், நீங்கள் ஸ்லிம்மாகத் தெரிவதுடன், கொஞ்சம் உயரமாகத் தெரியவும் வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் ஜீன்ஸ் பிரியையாக இருந்தால், எந்த மாடலில் அணிகிறீர்கள் என்பதும் முக்கியம். முழங்காலுக்குக் கீழே கட் வருகிற ஜீன்ஸைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாடலில் கால்கள் குட்டையாகவும் குண்டாகவும் இருப்பதுபோல தெரியும். ஜீன்ஸ் உடைகளில் அனைத்து மாடலும் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும், பிளஸ் சைஸ் பெண்கள் விஷயத்தில் மட்டும் சில மாடல்கள் விதிவிலக்கு. காரணம், ஜீன்ஸ் உடைகள் பெரும்பாலும் உடலின் சதைப் பகுதிகளைக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. எந்த மாடலை அணிவதாக இருந்தாலும், அது வசதியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜீன்ஸுக்கு மேட்சிங்காக ஹால்டர் டைப் டாப்ஸ் அணிவது வசதியாக இருக்கும். ஆனால் அது உங்கள் தோற்றத்தை மேலும் பெரிதாக்கிக் காட்டும். இந்த டைப் டாப்ஸ்கள், வயிறு, இடுப்புப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதையைத் தனித்துக் காட்டிவிடும்.

உடைக்குப் பொருத்தம் இல்லாத நகைகளை அணிவதும் தவறு. எளிய நகைகள், உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். கால்களில் பெரிய கொலுசு அணிவதையும் பெரிய வளையங்களைக் கம்மலாக அணிவதையும் நிச்சயம் தவிர்த்தால், எத்தனை பெரிய கூட்டத்திலும் நீங்கள்தான் ஸ்மார்ட் லுக்கிங் உமனாக இருப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x