Published : 26 May 2017 10:02 AM
Last Updated : 26 May 2017 10:02 AM
கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருக்கிறார். 18 வயதில் ஐபிஎல் அறிமுகத் தொடரில் விளையாடிக் கவனம் ஈர்த்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்களைப் பற்றித்தான் இப்போது பரபரப்பாகப் பேசுகிறார்கள்!
தினேஷ் கார்த்திக்
2004-ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை சில ஆண்டுகள் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். நேர்த்தியான ஷாட்கள் அடிப்பதில் வல்லவர், தேவைக்குத் தகுந்தாற்போல ஆட்டத் திறனை மாற்றிக்கொண்டு விளையாடுவதில் கில்லாடி. தோனி இந்திய அணிக்குள் வந்த பிறகு இவரது இடம் ஆட்டம் கண்டது. அவ்வப்போது இந்திய அணிக்குள் தலைகாட்டுவார். மீண்டும் காணாமல்போய்விடுவார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தாகாவில் ஒரு நாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு இப்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன் டிராபி அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
சாம்பியன் டிராபி போட்டியில் தோனி மட்டுமே விக்கெட் கீப்பராக இடம்பிடித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு வீரராகத் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு தினேஷ் கார்த்திக்குக்குக் கிடைத்திருக்கிறது. இளம் வீரர்களுக்கு வீரர்களுக்கு இணையாக இந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் 361 ரன்களைக் குவித்து குஜராத் லயன்ஸ் வீரர்கள் ரன் குவிப்புப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் உள்நாட்டுத் தொடர்களிலும் போதும்போதும் என்று சொல்லும் அளவுக்கு ரன் குவித்து அசத்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத் தொடரான ரஞ்சி டிராபியில் இந்த சீசனில் 54.15 என்ற சராசரியுடன் 704 ரன்களைக் குவித்தார் தினேஷ் கார்த்திக். இதில் ஒரு சதமும் 5 அரை சதங்களும் அடங்கும். விஜய் ஹசாரே டிராபி, தியோதர் டிராபி போட்டிகளில் மொத்தம் 854 ரன்களைக் குவித்துத் தேர்வாளர்களைத் தன் பக்கம் திருப்பினார். தோனி ஒரு நாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளையும், விருத்திமான் சகா டெஸ்ட் போட்டிகளையும் விளையாடிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக்குக்கான இடம் தள்ளாடிக்கொண்டிருந்தது. இருந்தாலும் தொடர்ச்சியான தன்னுடைய செயல்பாடுகள் மூலம் தற்போது தேசிய அணியில் இடம்பிடித்திருக்கிறார் இந்த சீனியர் வீரர்.
கடந்த 2007-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெல்ல, தினேஷ் கார்த்திக் முக்கியப் பங்காற்றினார். ஒரே நாளில் நான்கு விதமான காலநிலை நிலவும் இங்கிலாந்தில், ஏற்கெனவே அங்கே சாதித்த தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் என்று தேர்வுக் குழு நினைத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், விளையாடும் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
வாஷிங்டன் சுந்தர்
இந்த ஐபிஎல் தொடரில் இறுதியாட்டத்தில் குறைந்த வயதில் விளையாடிய வீரர், ஐபிஎல்லில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த குறைந்த வயதுடைய வீரர் எனப் பல சிறப்புகளோடு அறிமுகமாகியிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். அத்துடன் 18 வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிக் கவனம் ஈர்த்திருக்கிறார் சுந்தர். தோனி, ஸ்மித், பென்ஸ்டோக், ரஹானே போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த புனே அணியில், அவர்களைத் தாண்டி எல்லோரையும் ஈர்த்திருக்கிறார் இந்த இளம் சுழல் புயல்.
லீக் போட்டிகளில் சிக்கனமாகப் பந்துவீசி அணித் தலைவர் ஸ்மித்தைக் கவர்ந்த வாஷிங்டன் சுந்தர், அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நுணுக்கமான பந்துவீச்சால் எதிரணியைத் திணறடித்து எல்லோரையும் கவர்ந்த வீரரானார். மும்பை அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபாயகரமான வீரர்களான ரோஹித் சர்மா, ராயுடு, பொல்லார்ட் ஆகியோரை விரைவில் பெவிலியன் அனுப்பிப் போட்டியை புனே பக்கம் திரும்பக் காரணமானார் சுந்தர். இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விக்கெட் எதுவும் வீழ்த்தாதபோதும் 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கெனவே கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அவரைப் போலவே வாஷிங்டன் சுந்தரும் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது வாஷிங்டன் சாதிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT