Last Updated : 12 May, 2017 08:35 AM

 

Published : 12 May 2017 08:35 AM
Last Updated : 12 May 2017 08:35 AM

சியர் லீடர்(கேர்ள்)களின் உற்சாகக் கதை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்கும்போதெல்லாம் ‘சியர் கேர்ள்’களின் உற்சாகத் துள்ளல் நடனம் மைதானத்தை அதிரவைக்கத் தவறுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடையாளமாகவே ‘சியர் கேர்ள்’களும் மாறிவிட்டார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல, பல விளையாட்டுகளிலும் ‘சியர் லீடர்கள்’ என்றழைக்கப்படும் இளம் மங்கைகள் வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகமூட்டுவது வழக்கமானதாக மாறிவிட்டது. விளையாட்டில் ‘சியர் கேர்ள்’கள் எப்படி நுழைந்தார்கள்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்தான் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் கேர்ள்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பொதுவாக ‘சியர் லீடர்கள்’ என்றே மற்ற விளையாட்டுகளில் அழைக்கிறார்கள். ‘சியர் லீடர்கள்’ என்பது தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாடும் அணிகளை உற்சாகமூட்டும் ஒரு செயல். உற்சாகமூட்டுவது என்பது நடனமாடுவது மட்டுமல்ல, ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். வித்தையாகவும்கூட இருக்கலாம்.

‘சியர் லீடர்கள்’ முதன் முதலில் அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில்தான் அறிமுகமானார்கள். அதுவும் 1869 முதல் 1880 வரையிலான காலகட்டத்தில் அறிமுகமானார்கள். மூன்று இளைஞர்கள் பாட்டுப் பாடியும், உற்சாகமான வார்த்தைகளைக் கூறியும் தங்கள் அணிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். அது விளையாடும் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரவசத்தைத் தரவே, அது தொடர ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் ‘சியர் லீடர்கள்’ பெண்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தொடக்கத்தில் ஆண்கள்தான் சியர் லீடர்களாக இருந்தார்கள்.

அமெரிக்காவில் தொடங்கிய சியர்ஸ் லீடர்கள் கலாச்சாரம் பிறகு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவின. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சியர்ஸ் லீடர்களாக இருக்க பெண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். 1923-ம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆண்களோடு சேர்ந்து உற்சாகப்படுத்தும் பணியைப் பெண்களும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்த வந்த ஆண் சியர் லீடர்கள், விளையாட்டு வீரர்களாக மாறுவதில் கவனம் செலுத்த, பெண்களின் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அமெரிக்காவில் 1970-களுக்குப் பிறகு பெண்களே அதிகளவில் சியர் லீடர்களாக வரத் தொடங்கினார்கள்.

அமெரிக்காவில் முதன் முறையாக 1973-ம் ஆண்டில் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்டப் போட்டித் தொடர்களுக்கு பெண் சியர் லீடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அது படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் பரவியது. 2005-ம் ஆண்டு நிலவரப்படி விளையாட்டுகளில் உள்ள சியர் லீடர்களில் 97 சதவீதம் பேர் பெண்களே. இவர்களில் பெரும்பாலானோர் மாடல் அழகிகள். அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் சியர் லீடர்கள் இல்லாமல் தொடங்குவதில்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது.

2007-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சியர் லீடர்கள் முதன் முதலாகத் தலைகாட்டினார்கள். அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அவர்கள் அங்கமாகி, அதன் அடையாளமாகிப் போனார்கள். ‘சியர் (லீடர்ஸ்) கேர்ள்’ இல்லாத இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இன்று பலரும் விரும்புவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருபது ஓவர் கிரிக்கெட்டுக்குள் ஊடுருவி விட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x