Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

மெளனத்தின் வலிமை

ஒரு ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். நேரத்தைச் செலவழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் அவர். இந்த வேலையை இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என ஒரு கணக்கும் வைத்திருப்பார். அதனால் எப்போதும் கைக்கடிகாரம் அணிந்திருப்பார்.

ஒருநாள் அதை அணிந்தபடி தன் வயலுக்கு வந்து வேலையாட்களை மேற்பார்வை செய்வதில் மும்மரமாக இருந்தார். அப்போது திடீரெனக் கையில் ஏதோ குறைவது போலப் பட்டது. பார்த்தால் கையில் இருந்த கடிகாரத்தைக் காணவில்லை. எங்கே கழட்டி வைத்தோம் என அவருக்கு நினைவில்லை. கொஞ்ச நாளாகக் கடிகாரம் தொய்வாக இருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் எங்காவது நழுவி விழுந்திருக்குமா எனச் சந்தேகித்தார்.

பெரியவருக்குக் கைக்கடிகாரம் இல்லாமல் வேலையே ஓடவில்லை. அவருக்கு அது மூச்சுக் காற்று மாதிரி. வேலை ஆட்களைக் கூப்பிட்டுத் தேடச் சொன்னார். அவர்களும் வயல் வெளி, பெரியவர் வந்த வரப்பு, வீடு வரையும் தேடினார்கள். கடிகாரம் கிடைக்கவில்லை. வேலை ஆட்கள் சோர்ந்துவிட்டார்கள். மதியமும் வந்துவிட்டது. வேலை ஆட்கள் உணவு அருந்தச் சென்றுவிட்டார்கள்.

எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு ஒரே ஒருவன் மட்டும் வயலுக்கு அருகில் கண்ணை மூடி தியானம் செய்தான். பெரியவர் அவனை விநோதமாகப் பார்த்தார்

தியானத்தில் இருந்தவர் ஐந்து நிமிடங்களில் கைக் கடிகாரத்துடன் வந்தார். பெரியவர் ஆச்சரியமும் சந்தோஷமும் மேலிட அதை வாங்கிக்கொண்டு, “அவர்கள் அத்தனை பேர் சேர்ந்து தேடும்போது கிடைக்காத கடிகாரம் எப்படி உனக்குக் கிடைத்தது?” எனக் கேட்டார். அதற்கு அவன், எல்லோரும் சேர்ந்து தேடும்போது ஒரே கூச்சல் குழப்பமுமாக இருந்தது. மேலும் யாருக்கும் சிரத்தையும் இருந்திருக்காது. அவர்கள் சென்ற பிறகு சத்தம் இல்லை. கண்ணை மூடித் தியானித்தபோது அந்தக் கைக் கடிகாரத்தின் சத்தத்தைக்கூட உணர முடிந்தது. அந்த வைக்கோல் போருக்குள்தான் இருந்தது என்றான்.

- தவமணி கோவிந்தராஜ், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x