Published : 12 May 2017 08:36 AM
Last Updated : 12 May 2017 08:36 AM
இளைஞர்களின் கவனம் இப்போது விவசாயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எப்படி உதவலாம் என்று பலர் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் ஒருவரே செல்வமுரளி. கணினித் துறையில் பொறியாளராக இருக்கும் இவர் 2014-ம் ஆண்டில் ‘விவசாயம்’என்ற குறுஞ்செயலியை உருவாக்கினார். விவசாயம் சார்ந்த நவீனத் தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தச் செயலி.
பயிர்ப் பாதுகாப்பு, பயிர்களைப் பயிரிடும் முறை, இயற்கை உரங்கள், பாரம்பரிய நெல் வகைகள், அரசுத் திட்டங்கள், மானியங்கள், காய்கறி வகைகள், கால்நடை வளர்ப்பு, விவசாய செய்திகள் போன்ற தகவல்களை இந்தச் செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
விவசாயி செயலிக்காக இவர் 2015-ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதை ஏப்ரல் 26 அன்று பெற்றிருக்கிறார். தமிழ் மொழியைக் கணினி வழியில் உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கிராமத்தில் மென்பொருள் நிறுவனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மத்தூரைச் சேர்ந்த செல்வமுரளி, 2011-ம் ஆண்டிலிருந்து கணினித் தமிழ் துறையில் செயல்பட்டுவருகிறார். தற்போது ‘விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்’என்ற நிறுவனத்தை இவருடைய கிராமத்தில் நடத்திவருகிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பிரபல நாளிதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அங்கே வேலை பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்து முடித்திருக்கிறார்.
தற்போது முதுகலையில் மொழியியல் படித்துவருகிறார். “நான் நிறுவனத்தை ஆரம்பித்தது எங்க வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை.படித்த படிப்புக்கு மென்பொருள் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமே என்கிறார்கள். நிறுவனத்தைக் கிராமத்தில் நடத்துவதிலோ அவர்களுக்குச் சுத்தமாக உடன்பாடில்லை. இந்த நிலையில் நான் இந்தச் செயலியை உருவாக்குவதற்காக மீண்டும் விவசாயத் துறைக்கு வந்ததில் எனது குடும்பத்தினருக்கு என்மீது பயங்கர அதிருப்தி” என்று வருத்தம் தோய்ந்த புன்னகையுடன் சொல்கிறார் செல்வமுரளி.
அதிகமான பொருட்செலவு உள்ளிட்ட பலவிதமான சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார் இவர். இந்தச் செயலியை விற்றுவிடுவதற்குக்கூட முயன்றிருக்கிறார். ஆனாலும், உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தவருக்கு இந்த விருது ஊக்கமளித்திருக்கிறது.
கணினித் தமிழில் விவசாயம்
2011 -ல் சிபேடு (http://facebook.com/cpadindia) என்ற பெயரில் சொந்தமாகவே கையடக்கக்கணினியைச் சீனாவிலிருந்து வாங்கியிருக்கிறது இவர்களுடைய நிறுவனம். அதில் தமிழை பிரத்யேகமாக மாற்றித் தமிழகத்தில் சந்தைப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், எங்கெல்லாம் தொழில்நுட்பங்கள் பிரபலமாக இல்லையோ அங்கே இந்தக் கையடக்கக் கணினிகளைக் கொண்டு அந்தச் சந்தையில் நுழைய முயன்றிருக்கிறார்கள். அப்போது நடத்திய சிறிய ஆய்வில், விவசாயத் துறைக்கும், தொழில்நுட்பத்துக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த மென்பொருளை உருவாக்க எல்லாத் தொழில்நுட்ப வசதிகளும் இவருக்குக் கிடைத்த பின்பும், விவசாய குறுஞ்செயலிக்கான வாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற தயக்கம் இருந்திருக்கிறது.
தன்னுடைய நண்பர் பிரகாஷ் சுகுமாரன் உதவியுடன் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்தித்து இது குறித்து விவாதித்திருக்கிறார். விவசாயத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கு அவர் சில ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார், மேலும் விரைவில் இந்தப் பணியை ஆரம்பிக்கச் சொல்லி உற்சாகமளித்திருக்கிறார்.
“அவர் கொடுத்த ஊக்கத்தாலேயே நாங்கள் நம்பிக்கையுடன் இந்தக் குறுஞ்செயலியை உருவாக்கினோம். இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளுக்குத் தேவை நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இந்தச் செயலி மூலம் எங்களால் முடிந்த அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்குகிறோம்” என்கிறார் அவர்.
மற்றபடி, இந்தச் செயலியை உருவாக்க இவருடைய குழுவுக்குப் பெரிய களப்பணியின் தேவையெல்லாம் ஏற்படவில்லை. ஏனென்றால், இவர்களுடைய குழுவினர் அனைவரும் விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். அதனால், அவர்களே அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து விவரங்களை வாங்கி இந்தச் செயலிக்கான முதல் கட்டத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்கள். “ஒரு நாளைக்குப் பத்திலிருந்து இருபது அழைப்புகளாவது விவசாயிகளிடமிருந்து வந்துவிடுகிறது. அந்த அழைப்புகளின் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளையும் சந்தேகங்களையும் அறிந்துகொள்கிறோம். அது மட்டுமல்ல; விவசாயிகள் கொடுத்த கருத்துரையின்படி, ஒன்பது முறை விவசாயம் குறுஞ்செயலியை மாற்றியமைத்திருக்கிறோம். நாங்கள் நஞ்சில்லா விவசாயித்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் இயற்கை விவசாயத்தை உருவாக்கப் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்” என்கிறார் செல்வ முரளி.
கணினித் தமிழ் வளர்ச்சி
கணினித்தமிழ் வளர்ச்சியில் இவர்கள் தொடர்ந்து பலவிதமான பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். விவசாயிகளுக்கு உதவும் வகையில்,‘அக்ரிசக்தி’என்ற கூட்டுறவு விற்பனைச் சங்கத்தை உருவாக்கும் முயற்சியிலும் இருக்கிறார்கள்.
“இளைஞர்கள் எங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த முடியுமோ அங்கே எல்லாம் தமிழைப் பயன்படுத்த முன்வர வேண்டும். அப்படி இல்லாத இடங்களில் தமிழில் தரச் சொல்லிக் கேட்க வேண்டும். உதாரணமாக, ஏடிஎம்களில் தமிழ் மொழியையே பயன்படுத்த வேண்டும். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் தமிழுக்கான வர்த்தகச் சந்தையின் தேவை அதிகரிக்கும். இது தமிழ் சார்ந்த தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இப்படித் தமிழ் சார்ந்து இயங்க முன்வரும் இளைஞர்களை ஊக்குவிப்பது தமிழ் சமுதாயத்தில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை” என்று முகத்தில் ஒளிபரவச் சொல்கிறார் செல்வ முரளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT