Published : 10 Mar 2017 11:37 AM
Last Updated : 10 Mar 2017 11:37 AM

விசில் இசைக் கலைஞன்!

இளைஞர்கள் விசில் அடித்தாலே, கோபமாகப் பார்க்கும் இச்சமூகத்தில் விசிலில் சாதனை படைக்க வேண்டும் என்று களமிறங்கியுள்ளார் நிசார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலுள்ள வீடியோக்களைக் காணும் போது, உதடுகள் அசைக்காமல் எப்படி இவரால் விசில் இசைக்க முடிகிறது என்ற ஆச்சர்யம் கண்டிப்பாகத் தோன்றும்.

பெங்களூருவில் இருந்தாலும், விடுமுறை நாட்களில் சென்னைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் சென்னைக்கு வந்தவரிடம் “எப்படி சார் இப்படி?” என்று பேசியதிலிருந்து...

“தொண்டைமான் நல்லூர்தான் எனக்குச் சொந்த ஊர். பள்ளிக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் எனக்கு ரொம்ப‌ ஆர்வம். அதை மெருகேற்ற வேண்டும் என்று நிறைய பாடல்கள் கேட்டுப் பாட ஆரம்பித்தேன். கல்லூரியில் நடைபெற்ற போட்டியில், முதல் பரிசு வாங்கினேன்.

இப்படிப் பல முயற்சிகள் செய்துகொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சி பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் பாட ஆரம்பித்தேன். ஸ்ருதி, தாளம் போன்ற விஷயங்கள் பற்றி அங்குதான் நிறைய தெரிந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சியில் என்னால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை. என்றாலும், அங்கு கிடைத்த நண்பர்கள் மூலமாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

அதற்குப் பிறகு மீண்டும் அதே போட்டியில் பங்கெடுத்தேன். அதில் சில கட்டங்கள் கடந்தாலும், கர்நாடக சங்கீதச் சுற்று வரும் போது, என்னால் வெற்றி பெற முடியவில்லை. அதற்குப் பிறகு நாம் ஏன் வாய்ப்புகளைத் தேடிப் போக வேண்டும் என யோசித்தேன். நாமே தனியாக ஒரு ‘பேண்ட்' ஆரம்பிக்கலாம் எனத் திட்டமிட்டேன். நண்பர்கள் சிலரின் உதவியால் அதையும் தொடங்கினேன்.

அந்த ‘பேண்ட்' மூலமாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஒன்றை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடினேன். அந்தத் தொலைக்காட்சியின் 11வது தொடக்க நாளன்று அந்தப் பாடலை மட்டும் 14 முறை ஒளிபரப்பினார்கள்.

இதுபோன்ற விஷயங்கள்தான் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.

எனக்குக் கல்லூரிக் காலத்திலிருந்தே விசில் மீது தனி ஆர்வம் உண்டு. அனைவருமே வாயைக் குவித்து அதன் மூலமாக விசில் சத்தத்தைக் கொண்டு வருவார்கள்.

ஆனால், நான் உதடுகள் அசையாமல் பல்லுக்கு இடையே உள்ள இடைவெளியில் காற்றைச் செலுத்தி விசில் சத்தத்தைக் கொண்டு வந்தேன். இதற்கு ‘டீத் விசிலிங்’ என்று பெயர். இதில் என்னவெல்லாம் புதிதாகச் செய்யலாம் என்று நிறைய வீடியோக்கள் பார்த்து, புத்தகங்கள் படித்துத் தெரிந்துகொண்டேன்.

சமீபத்தில் சுவேதா சுரேஷ் என்பவர் சென்னையில் தொடச்சியாக 18 மணி நேரம் விசில் சத்தத்தை எழுப்பி கின்னஸ் சாதனை செய்தார். அவருடைய நட்பின் அடிப்படையில் நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்தேன். நிறைய விசிலிங் வீடியோக்கள் செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன். அப்படியே வைரலானது” என்கிறார்.

வீட்டில் திட்டிவில்லையா?

“என்னடா பொறுக்கித்தனமா விசில் அடிச்சிட்டிருக்க என்று கூறாமல், ‘பரவாயில்லையே... நல்லா பண்றீயே’ என்றார்கள். என் அப்பாவிடம் எப்படி இருக்கு எனக் கேட்டபோது, ‘சத்தம் எங்கிருந்து வருதுன்னு தெரியலை. ஆனா வித்தியாசமா இருக்குடா’ என்று பாராட்டினார். இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் முதல் பாராட்டு வீட்டிலிருந்துதான் கிடைக்கும்” என்றார்.

அடுத்து என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?

“ஆடல், பாடல் மாதிரி ‘விசிலிங்’ கலையையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். புல்லாங்குழல் இசை மாதிரியே விசில் இசையையும் நிகழ்த்த முடியும் என்பது என் நம்பிக்கை.

விசிலில் சாதனை புரிய வேண்டும் என்று தினமும் மூச்சுப் பயிற்சி செய்கிறேன். ‘அயன்’, ‘கபாலி’, ‘இருமுகன்’ போன்ற படங்களில் விசில் இசை, பாடலுக்கு இடையே வரும். அது மிகவும் பிரபலம். அதில் என்னுடைய விசில் இசையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை.

கின்னஸ் சாதனை முறைகள் என்ன என்பது தெரியாது. கின்னஸ் சாதனை செய்தவர்களிடமிருந்து சில தகவல்களைத் திரட்டிவருகிறேன். என்னால் தொடர்ந்து 15 மணி நேரம் விசில் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

தமிழ் மொழியை எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒரு பாடலில் கொண்டு வந்தாரோ, அதே போன்று திருக்குறளை ஒரு பாடலாக உருவாக்க வேண்டும் என்று ஆசை. அதை மக்கள் ரசிக்கும்படி இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன். அதற்கான வரிகளையும் அமைத்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

விசில் போடு மாமே!

இவரின் விசில் வீடியோக்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: >https://www.facebook.com/niz05me

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x