Published : 31 Mar 2017 10:46 AM
Last Updated : 31 Mar 2017 10:46 AM
வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு, தான் போதையில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வடிவேலுவின் காமெடி ஒன்று உண்டு. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், மயில்சாமி உள்ளிட்ட உண்மையான ‘குடிமகன்’கள் வடிவேலுவைப் பொதுமாத்து மாத்த, வடிவேலு மயங்கிவிடுவார். உடனே அவரைக் கொலைசெய்துவிட்டதாக எண்ணி, அந்த பாரில் இருந்தவர்கள் எல்லாம் பதறியடித்து ஓடுவார்கள். பிறகு, மயக்கம் தெளிந்த வடிவேலுவும் ‘கொலை, கொலை’ என்று எழுந்து ஓடுவார்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது திரைக்கதைக்குச் சுவையூட்டும் நகைச்சுவைக் காட்சி மட்டுமே. ஆனால் அதில் உள்ளார்ந்த ஒரு விஷயம் உண்டு. மதுபானக் கடைகளில் யாராவது இப்படி அசம்பா விதம் செய்தால், நம் நாட்டினரின் இயல்பு, ஒன்று வேடிக்கை பார்ப்பது. அல்லது விலகிச் செல்வது. அமெரிக்காவில் இப்படி நடந்தால், பவுண்சர்களைத் தவிர்த்து, யாரேனும் ஒரு சாமானியனாவது தட்டிக் கேட்பார். பிரச்சினை கைமீறிப் போனால் தடுக்கப் பார்ப்பார்.
அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்தது. பிரச்சினை செய்தது அமெரிக்கர். பிரச்சினையைச் சந்தித்தது இந்தியர்கள். அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து காப்பாற்றியதும் 24 வயதான ஒரு அமெரிக்கர்தான்.
கன்சாஸ் மாகாணத்தில் ஒலாத் எனும் இடத்தில் உள்ளது ஆஸ்டின்ஸ் பார் அண்ட் க்ரில் எனும் மதுபான விடுதி. அங்கு பிப்ரவரி 22-ம் தேதி சீனிவாஸ் குச்சிபோட்லா, அலோக் மதசனி என்ற இரண்டு இந்திய நண்பர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டன் என்பவரால் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாயினர்.
அதில் சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அலோக் மதசனி காயங்களுடன் தப்பினார். அப்போது அந்த இடத்தில் இருந்தவர்தான் அயான் க்ரில்லாட். அந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க முயற்சித்த அயானுக்கு, கையில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றுமாகத் தனது தோட்டாக்களைப் பரிசளித்தார் ஆடம்.
அயானின் அந்த வீரத்தைப் பாராட்டி, கடந்த வாரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை ‘அமெரிக்காவின் உண்மையான கதாநாயகன்’ என்று புகழாரம் சூட்டி அவருக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 65 லட்சம்) ரொக்கப் பரிசாக, நிதி திரட்டினர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா இதனை அயானுக்கு வழங்கினார்.
அந்தப் பரிசை ஏற்றுக்கொண்ட அயான், “அந்தச் சம்பவத்தை நான் தடுக்க முடியாமல் போயிருந்தால், என்னுடைய மிச்ச வாழ்நாளை என்னால் நிம்மதியாகக் கழிக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தச் சம்பவத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்ட செய்தி இதுதான்: என்னால் முடிந்த அளவு அன்பையும் அமைதியையும் சக மனிதர்களுக்கு வழங்க முற்படுவேன்” என்று கூறியுள்ளார்.
அயானின் செயலால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்: கதாநாயகர்களை வேறு எங்கும் தேட வேண்டாம். நமக்குள்ளே, நம்மிடையேதான் இருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT