Last Updated : 17 Oct, 2014 02:55 PM

 

Published : 17 Oct 2014 02:55 PM
Last Updated : 17 Oct 2014 02:55 PM

இது யூத் தீபாவளி

தீபாவளி என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். குட்டீஸ்களுக்குப் புதுத் துணி, பட்டாசு, இனிப்புகள் மீது ஈர்ப்பு என்றால், பெரியவர்களுக்கோ தீபாவளியின் பண்பாடு, கலாசாரத்தைப் போற்றுவதில் ஆர்வம். உறவுகளுடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பதே அவர்களுடைய தீபாவளி. இவர்களுக்கு அடுத்து நம் இளைஞர், இளைஞிகள் இருக்கிறார்களே, அவர்களுடைய எதிர்பார்ப்பு இந்த இரண்டிலுமே அடங்காது. அவர்களுடைய தீபாவளி உலகமே வேறு. இளைஞர்கள், இளைஞிகளின் தீபாவளி எதிர்பார்ப்பு என்ன?

பஜார் பார்ட்டி

ஆஷிஷ் தான், கோவை

“ என்னதான் வருஷத்துல பலமுறை துணி எடுத்தாலும், தீபாவளிக்குத் துணி எடுக்குற அனுபவமே தனிதான். சின்ன வயசுல அப்பா, அம்மா எடுத்துத் தர துணியைப் போட்டுக்குவோம். அப்போ வேற வழியில்லையே. இப்போ பாருங்க, ‘புதுத் துணி எடுத்துக்க, எவ்வளவு பணம் வேணும்னு’ சொல்லி 2 ஆயிரம் ரூபாயைக் கையில் திணிச்சுருவாங்க. அப்புறமென்ன, துணி எடுக்கிறது ஒருத்தருக்குதான். ஆனால், ஐந்து, ஆறு ஃப்ரண்ட்ஸ்கள கூட்டிக்கிட்டுக் கடையில் அலப்பறை பண்ணிக்கிட்டு

துணி எடுக்குறதே ஜாலிதான். எனக்குப் பிடிச்ச துணியைவிட ப்ரண்டுக்கு புடிச்ச துணியை எடுக்குறது இந்த வயசுலதானே பாஸு நடக்கும். இப்படி ஒவ்வொரு ஃப்ரெண்டுக்கும் ஒவ்வொரு முறை என 15 நாட்களுக்குள்ள 5 முறையாவது ஷாப்பிங் போய்ட்டு என்ஜாய் பண்றது தீபாவளிக்கு மட்டுமே முடியும். அதுக்காகவே தீபாவளியை நான் லைக் போடுறேன்”

பர்சேஸ் பார்ட்டி

அழகம்மை பழனியப்பன், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை

“தீபாவளி ஷாப்பிங் போய் பர்சேஸ் பண்றதுன்னா ரொம்பப் பிடிக்கும். புதுத் துணி எடுக்குறதைத் தாண்டி, அதுக்கு மேட்சா என்னென்ன புது ஆக்சசரீஸ் கடைகள்ல வந்திருக்குன்னு ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி வாங்குறதுன்னா ரொம்ப இஷ்டம். இந்த பர்சேஸ் செய்ய அம்மா கூட வரமாட்டாங்க. அதனால, ப்ரெண்ட்ஸ்கூடப் போய் வாங்கிட்டு, ஹோட்டல்ல சாப்பிட்டு வர்றது இனிப்பான அனுபவம். அப்புறம், பட்டாசு வாங்க காசு கொடுத்தா, அதை அப்படியே சேமிச்சு வைச்சுக்குவேன், அந்தக் காசுல தீபாவளி முடிஞ்சி புத்தகம் வாங்கிப் படிக்கிறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்”.

ஹோம்லி பார்ட்டி

யமுனா அன்பழகன், கற்பகம் பல்கலைக்கழகம் கோவை

“குட்டிப் பொண்ணா இருக்குறப்ப, பட்டாசு வெடிச்சுக்கிட்டு ஜாலியா இருப்பேன். இப்போ அப்படி இருக்க முடியுமா?

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னால இருந்தே அம்மாவுக்குத் தலைக்கு மேலே வேலை இருக்கும். ஒரே ஆளா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. இப்போ சில வருஷமாதான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அப்படியே பலகாரம் எப்படிச் செய்யுறதுன்னு கத்துக்கிட்டேன். குறிப்பாக தீபாவளிக்கு

இரண்டு நாளுக்கு முன்னாடி அம்மாகூட வேலை செஞ்சு பாருங்க, நிறைய விஷயங்களக் கத்துக்கலாம். அதனால், இப்போல்லாம் தீபாவளி வேலையை மிஸ் பண்றதே இல்லப்பா”.

அலப்பறை பார்ட்டி

பிரசாத் ராஜன், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

“வருஷமெல்லாம் இட்லி குருமாவை அம்மா செஞ்சு கொடுத்தாலும் தீபாவளி அன்னைக்கு மணக்க மணக்க இட்லி குருமா செஞ்சி வடை, பலகாரங்களோட சாப்பிடுற சுகம் இருக்கே, அது எப்போவுமே கிடைக்காது. அதுவும் தீபாவளி அன்னைக்கு டி.வி. ரிமோட் என் கண்ட்ரோல்தான் இருக்கும். ஒவ்வொரு சேனலா மாத்தி புரோகிராம் பார்த்துட்டு, புதுசா வந்த படத்தையும் டி.வி.யில ஓசியா பார்த்துட்டு அந்த நாளை என்ஜாய் பண்ணுவேன். புது டிரஸ் போட்டுக்கிட்டு ப்ரெண்ட்ஸோட ஒவ்வொரு தெருவா போய் ஃபிலிம் காட்டிட்டு வர அனுபவத்தைத் தீபாவளிக்கு மட்டுமே அனுபவிக்க முடியும் பாஸு. முடிஞ்சா அன்னைக்கே நைட் ஷோ டிக்கெட் வாங்கிட்டுப் புதுப்படமும் பார்த்துடுவேன். இல்லைன்னா அடுத்த நாளே ப்ரெண்ட்ஸ்களோட ஏதாவது ஒரு படம் பார்த்தாதான் தீபாவளி முடிஞ்ச மாதிரி இருக்கும்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x