Published : 14 Apr 2017 12:34 PM
Last Updated : 14 Apr 2017 12:34 PM

மேலே மேலே!

வாழ்க்கையில் ஏற்படும் சில மாற்றங்கள் கொடுக்கும் அழுத்தத்தைப் பலரால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த அழுத்தத்தைத் தன்னுடைய பலமாக மாற்றிக்காட்டியுள்ளார் அந்தோனி மிஸ்திக்கா.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவரும் இடங்களில் ஒன்று பளு தூக்கும் பயிற்சி மையம். இங்குதான் மிஸ்திக்கா தன்னுடைய பலத்தை ஒவ்வொரு பயிற்சியின் போதும் சோதித்துப் பார்த்து மெருகேற்றிவருகிறார். சுமார் ஐம்பது கிலோ கொண்ட எடையை மிக லாவகமாகத் தூக்கி எறிந்துவிடுகிறார் அவர்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்தே பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்று வருகிறார் மிஸ்திக்கா. தன்னுடைய சொந்த ஊரான நாகர்கோவிலில் தொடங்கிய மிஸ்திக்காவின் பயணம் தற்போது தலைநகர் சென்னையை எட்டியுள்ளது. தற்போது சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை உடற்கல்வியியல் படித்துவரும் அவர், நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு விடுதியில் தங்கிப் படித்து, பயிற்சி பெற்று வருகிறார்.

“ ஏழாவது படிக்கும்போது கூடைப்பந்து விளையாட்டுதான் விளையாடிவந்தேன். அப்புறம் என்னுடைய பள்ளி விளையாட்டு ஆசிரியர் பளு தூக்கும் பயிற்சி கொடுத்தார். அதில் நான் மாவட்ட அளவில் சிறப்பாகச் செய்து பரிசு பெற்றேன். அதனால் எனக்குப் பதக்கங்களுடன் பரிசுத் தொகையும் கிடைத்தது” என்று வெயிட் ப்ளேட்களைத் தூசி தட்டியவாறு பேசினார் மிஸ்திக்கா. மிஸ்திக்காவின் அப்பா சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அம்மா வீட்டு வேலை செய்யும் பணியாளராகவும் உள்ளனர். வறுமைக்காகப் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மிஸ்திக்காவுக்கு தற்போது அதுவே ஒரு அடையாளமாக மாறியுள்ளது.

“என்னுடைய அம்மாதான் என்னைப் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிப்பார். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். நான் என்னுடைய பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தேன். என் அம்மாவின் கஷ்டங்களைப் பார்த்துத்தான் இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு என் அம்மாவின் கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்கிறார்.

மாநில அளவில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் மிஸ்திக்கா தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். மாநில அளவில் நடைபெற்ற ஜூனியர் பளு தூக்கும் பிரிவில் முதல் இடத்தையும், சமீபத்தில் நடைபெற்ற தமிழக அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். போட்டிகளின்போது தன்னுடைய போட்டியாளருக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தருகிறார் மிஸ்திக்கா.

சாதாரணப் பொருளாதார நிலையில் இருந்துவரும் விளையாட்டு வீரர்களுக்குத் தங்களை மேலும் வலிமையாக்கிக் கொள்ள விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுகிறது. இதே நிலைமைதான் மிஸ்திக்காவுக்கும். அவருடைய சக தோழிகளுக்கும் பளு தூக்கும்போது அதனை இறுகப் பிடித்து நிறுத்திக் கொள்ளப் பளு தூக்கும் வீரர்கள் பயன்படுத்தும் ஷூக்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற குறைகளால் துவண்டுபோகாமல் தன்னுடைய மனவலிமையால் எடைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறார் மிஸ்திக்கா. உங்கள் நம்பிக்கைக்குப் பதக்கங்கள் ‘வெயிட்’டிங்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x