Published : 12 May 2017 08:32 AM
Last Updated : 12 May 2017 08:32 AM

புதிய பாதையில் ஒரு பயணம்

வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் கடந்து நம்மை அடுத்த கட்டத்துக்கு எப்படிக் கொண்டுபோவது என்பது மிகவும் முக்கியம். அந்தக் கருத்தை மையப்படுத்தி ‘யாத்ரீகா’ என்ற பாடலை இளைஞர்கள் குழுவினர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் யூ-டியூப் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக இப்பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக இடங்களைத் தேர்வு செய்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தின் முதல்படியாக நிகிதா என்பவர் ‘யாத்ரீகா’ இந்தப் பாடலை இயக்கியுள்ளார். இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவரும் நிகிதா, இதற்காக ஓராண்டாகப் பணியாற்றியுள்ளார். வைஷாலி நடித்துள்ள இப்பாடல் பதிவுக்கு ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவு செய்ய அல்-ருஃபியான் இசையமைத்துள்ளார். ஆடை வடிவமைப்புப் பணிகளை சியாஸ்ரீ மேற்கொண்டுள்ளார். தமிழில் யுகபாரதி பாடலை எழுத, ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்., இதன் ராப் பகுதி லேடி கேஷாலால் பாடப்பட்டது.

இப்பாடலை இயக்கியுள்ள நிகிதாவிடம் பாடல் உருவாக்கம் குறித்துப் பேசியபோது, “முதலில் எனக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அல்-ருஃபியானுக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். மலைப்பாதைகளில் பைக் ஓட்டுவதற்கு நிறைய சிரமப்பட்டார். முழுப் படப்பிடிப்பையும் சிக்மகளூரில் சுமார் நான்கரை நாட்களில் நடத்தி முடித்துவிட்டோம். அதிகாலை 4 மணி தொடங்கி மாலை 6 மணிவரை தினமும் படப்பிடிப்பு நடத்தினோம். -11 டிகிரி குளரில் படக் குழுவினரோடு காட்சிப்படுத்தியதை மறக்கவே முடியாது” என்று தெரிவித்தார்.

இப்பாடலைக் காட்சிப்படுத்துவதற்கான இடத்தை மட்டும் சுமார் 4 மாதங்களுக்காகத் தேடிப் பிடித்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ராகவனிடம் பேசியபோது, “ இதற்கு நிறைய சிரமப்பட்டுள்ளோம். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்குப் பயணித்து இறுதியாக சிக்மகளூர் இடத்தைத் தேர்வு செய்தோம். சூரியன் உதிக்கும்போது இப்பாடல் தொடங்கி, சூரியன் மறையும்போது முடியும். ஆகையால் அதற்குத் தகுந்தாற் போன்ற இடங்களைத் தேர்வுசெய்தோம். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘யாத்ரீகா’ பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.