Published : 16 Jun 2017 10:41 AM
Last Updated : 16 Jun 2017 10:41 AM
‘சென்னைட்ஸ்’ (Chennaites) என்ற ஃபேஸ்புக் பக்கம், சென்னைவாசிகளிடம் பிரபலமானது. இந்தப் பக்கம் தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததைச் சமீபத்தில் வித்தியாசமான முறையில் கொண்டாடியிருக்கிறது சென்னைட்ஸ் குழு. சென்னை நகருக்குப் புதிய வண்ணங்களைக் கொடுக்கும் நிஜமான பிரபலங்களுடன் இந்த விழாவைக் கொண்டாடியிருக்கிறது இந்தக் குழு. கொட்டிவாக்கம் ‘மோர் தாத்தா’, மெரினா குல்ஃபி நாகராஜ், ‘ஆட்டோ’ அண்ணாதுரை, மெரினா கடல் உணவகம் ‘சுந்தரி அக்கா கடை’யின் உரிமையாளர் சுந்தரி, போக்குவரத்து காவலர் குமார், மயிலாப்பூர் ‘ரோஸ்மில்க்’ மணி உள்ளிட்டவர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கிக் கவுரவித்திருக்கிறது சென்னைட்ஸ் குழு.
கடந்துவந்த பாதை
‘சென்னைட்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தைத் தற்போது எட்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். கடந்த 2015 - வெள்ளம், 2016- வர்தா புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போதும், பணமதிப்பு இழப்பு போன்ற இக்கட்டான தருணங்களின்போதும் இந்தப் பக்கத்தின் செயல்பாடுகள் சென்னைவாசிகளுக்குப் பெரிய அளவில் உதவி செய்திருக்கிறது. 2012-ம் ஆண்டு இந்தப் பக்கத்தைச் சென்னை நகரின் மீதிருக்கும் ஆர்வத்தால் தொடங்கியவர் லோகேஷ். ஜே என்ற இளைஞர். இந்தப் பக்கத்தில் பெரும்பாலும் மக்களுக்குப் பயன்படும் தகவல்களும் பொழுதுபோக்குத் தகவல்களும் பகிரப்படுகின்றன.
“இந்தப் பக்கத்தைத் தொடங்கியபோது எனக்குப் பெரிய நோக்கமெல்லாம் இல்லை. முதலில், சென்னைவாசிகளுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகவல்களை நாளிதழ்களிலிருந்து சேகரித்துத் தினமும் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தேன். இரண்டே வாரத்தில் ‘சென்னைட்ஸ்’ பக்கத்தை 3000 பேர் பின்தொடர ஆரம்பித்திருந்தனர். இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு, நண்பர்களுடன் இணைந்து அவசர ரத்த தானம் தேவைப்படுபவர்களின் தகவல்கள், மெட்ரோ - போக்குவரத்து மாற்றம் தொடர்பான தகவல்கள், செல்லப்பிராணிகள் தத்தெடுப்பு போன்ற பதிவுகளைப் பகிர ஆரம்பித்தோம்.
சென்னை வெள்ளத்தின்போது, ஆர்.ஜெ. பாலாஜியுடன் இணைந்து களத்திலிருந்து பல்வேறு தகவல்களைக் கொடுத்தோம். அந்தக் காலகட்டத்தில், எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் நான்கு லட்சத்திலிருந்து ஐந்தரை லட்சமாக அதிகரித்திருந்தார்கள். இது எங்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாகத் தீர்வுகளைச் சொல்ல ஆரம்பித்தோம்” என்கிறார் லோகேஷ்.
பசுமையை மீட்டெடுக்க முயற்சி
வர்தா புயலுக்குப் பிறகு, சென்னையின் பசுமையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளையும் ‘சென்னைட்ஸ்’ ஃபேஸ்புக் குழுவின் மூலம் முன்னெடுத்துவருகிறார் லோகேஷ். “இந்த முயற்சியில் எங்களுடன் இணைவதற்கு இதுவரை 800 தன்னார்வலர்கள் முன்வந்திருக்கிறார்கள். ‘Planterest’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பிரசாரத்தை ஜூலை முதல் வாரத்திலிருந்து தொடங்கவிருக்கிறோம். இதற்காகத் தன்னார்வலர்களை இரண்டு தரப்பாகப் பிரித்திருக்கிறோம். இதில் ஒரு தரப்பினர் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.
இன்னொரு தரப்பினர் தங்களுடைய வீட்டின் முன்னால் இடத்தைத் தேர்ந்தெடுத்து மரக்கன்றுகளை வளர்ப்பார்கள். மாநகராட்சியிடம் அனுமதி பெறுவது, பொது இடத்தில் மரம் நடுவதால் வரும் சிக்கல்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காகத் தன்னார்வலர்களின் வீட்டின் முன்னால் மரம் நடுவதற்கான திட்டத்தை வகுத்தோம். இதனால் எங்களுடைய குழுவினரால் நடப்படும் ஒவ்வொரு மரத்தைப் பற்றிய தகவல்களும் எங்களிடம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் இந்தப் பிரசாரத்துக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவிருக்கிறோம்” என்கிறார் லோகேஷ்.
‘மீம்’ மாரத்தான்
இனிவரும் காலத்தில் ‘மீம் இன்ஜினீயர்’களின் தேவை அதிகரிக்கும் என்று சொல்லும் லோகேஷ், “மீம் உருவாக்குபவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி ஒரு ‘மீம்’ மாரத்தானுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாரத்தானில் இரண்டு மணி நேரத்தில் இருபது ஆயிரம் மீம்ஸ் உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய அழைப்புக்கு மூன்று நாட்களில் 500 ‘மீம் இன்ஜினீயர்கள்’ விண்ணப்பித்திருக்கிறார்கள். சமூகப் பொறுப்புடன் மீம்ஸ் உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த மாரத்தானில் வலியுறுத்தவிருக்கிறோம்” என்கிறார்.
இவர் தற்போது ‘தி சைட் மீடியா’ என்ற ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’ நிறுவனத்தின் நிறுவனராகவும் தலைமை செயல்இயக்குநராகவும் செயல்பட்டுவருகிறார். இவருடைய நிறுவனம் ‘சென்னைட்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தைப் போல 130 பக்கங்களை நிர்வகித்துவருகிறது. ‘சர்காஸ்டிக் இந்தியன்’, ‘மீம் இன்ஜினீயர்’, ‘லாஜிக்கல் தமிழன்’ போன்ற பிரபலமான ஃபேஸ்புக் பக்கங்ளை இவருடைய நிறுவனம்தான் நிர்வகித்துவருகிறது. இந்தப் பக்கங்களை மூன்றரைக் கோடிப் பேர் பின்தொடர்ந்துவருகின்றனர்.
“டிஜிட்டல் மார்கெட்டிங்’கில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் ‘ஃபேஸ்புக்’கை மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதாது. ‘பின்ட்ரஸ்ட்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘லிங்க்டு இன்’ எனப் பல்வேறு டிஜிட்டல் தளங்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். எங்களுடைய நிறுவனத்தில் ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’கில் ஆர்வமிருக்கும் இளைஞர்களுக்குத் தொடர்ந்து ‘இன்டர்ன்ஷிப்’ வாய்ப்புகளைக் கொடுத்துவருகிறோம். இப்படி ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’ நிறுவனங்களில் முதற்கட்டப் பயிற்சி பெற்ற பிறகு இந்தத் துறைக்குள் நுழைவது நல்லது” என்று ஆலோசனை தருகிறார் லோகேஷ்.
மேலும் விவரங்களுக்கு: >www.facebook.com/Chennaites/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT