Published : 03 Jun 2016 12:38 PM
Last Updated : 03 Jun 2016 12:38 PM
அந்தப் பத்மினி காரைப் பார்த்து எல்லோரும் நெகிழ்ந்தோம், ஆடினோம், பாடினோம், சிரித்தோம், அழுதோம். இத்தனையும் சாத்தியமானது திரைக்கதையால் மட்டுமல்ல பின்னணி இசையாலும்தான்.
மாக முதலில் எடுக்கப்பட்டுப் பின்னர் திரைப்படமான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அடுத்த சில தினங்களில் வெளிவரவிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ‘அடியே அழகே’ பாடல் வரிகளிலும் பாடகர் குரலிலும் கிராமிய இசை மணமூட்டி இசைக்கருவிகளைப் பயன்படுத்திய விதம் மேற்கத்தியப் பாணியை மீட்டி மீண்டும் நம்மைத் தாலாட்டியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
மதுரையில் தேவாலயம் ஒன்றில் இரவில் அப்பா வேலை செய்யும்போது சிறுவன் ஜஸ்டீன் பிரபாகரன் தேவாலயத்தில் இருக்கும் இசைக் கருவிகளை ஆவலாக இசைத்துப் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து மற்றவர்கள் வாசிப்பதைக் கவனித்துச் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கீபோர்டு, கித்தார் என வெவ்வேறு இசைக் கருவிகளைத் தானாகப் பயின்றார்.
இசைக்கு ஒலி அவசியம்
இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை என வீட்டில் தெரிவித்தபோது குடும்பச் சூழல் அதற்கு இடம்தரவில்லை. ஆகவே மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் சேர்ந்தார்.
ஆனால் மனசு முழுக்க இசைதான். கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ‘லிவ்விங் ஃபாஸில்ஸ்’ இசை பேண்டை ஆரம்பித்தார். பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் 2004-ல் சொந்தப் பாடல்களை பேண்டுடன் இசைத்தபோது பாராட்டும் பரிசும் கிடைத்தன.
“கல்லூரி இறுதியாண்டில் என்னுடன் பேண்டில் வாசித்த நண்பர்களெல்லாம் மேற்படிப்புக்கும் வேலைக்கும் போக, நான் மட்டும் இசையை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் ஜஸ்டின்.
வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியடைய அண்ணன் மட்டும் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஜஸ்டீனை ஊக்குவித்தார். படிப்பு முடியும் தறுவாயில் ‘சிவப்பதிகாரம்’ ஷூட்டிங் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தைச் சந்தித்து சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் ஜஸ்டின்.
அன்று அவர் வழிகாட்டியது ஜஸ்டின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. “இன்று இசையமைக்கத் தெரிந்தால் மட்டும் போதாது தொழில்நுட்பரீதியாக ஒலியைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதை முறையாகக் கற்றுக்கொள் எனச் சொன்னார் கோபிநாத்” என்கிறார் ஜஸ்டின்.
இளையராஜாவைத் தேடி
அடுத்து சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சவுண்ட் இன்ஜினியரிங் சேர்ந்தார். “சென்னை வந்ததும் கீபோர்ட் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது எனக்கு சவுண்ட் இன்ஜினீயரிங் பாடம் எடுத்த பேராசிரியர் சதாநந்தனிடம், ‘நான் சவுண்ட் கற்றுக்கொள்ள வந்தது இன்ஜினீயராக அல்ல, இசையமைப்பாளராக.
ஆனால் என்னிடம் கீபோர்டு இல்லை சார்’ என்றேன். உடனே அவருடைய சொந்த கீபோர்டைத் தந்தார். மூன்று வருடங்கள் நான் மட்டுமே அதை மீட்டினேன். அதன் பின் என்னுடைய முதல் திரைப் படத்தின்போதுதான் சொந்தமாக கீபோர்டை வாங்கினேன்” என்கிறார் ஜஸ்டீன்.
நண்பர்கள் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைப்பது எனத் தொடங்கி இயக்குநர் அருண்குமாரின் குறும்படங்களுக்கு இசையமைத்து ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரு சீஸன்களின் சிறந்த குறும்பட இசையமைப்பாளராக அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எப்படியாவது இளையராஜாவிடம் வேலை பார்க்க வேண்டும் என முயன்றார். அப்போதுதான் ஹாரிஸ் ஜெயராஜிடம் துணை சவுண்ட் இன்ஜினீயராகச் சேர்ந்து ‘கோ’ படம் தொடங்கி 12 படங்களில் வேலை பார்த்தார்.
இசையின் நுணுக்கங்களையும் தொழில்முறையில் செயல்படுவதையும் தெரிந்துகொள்ள ஹாரிஸ் ஜெயராஜுடன் வேலை பார்த்த அனுபவம் பெரிதும் உதவியது என்கிறார். அடுத்துக் குறும்படமாக வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு அருண் குமாரோடு சேர்த்து ஜஸ்டினுக்கும் கிடைத்தது.
நீங்கள் இசையமைத்ததா?
பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் ஒரு குறும்படத்துக்கு இசையமைப்பது வேறு. அதிலும், “ஜடப் பொருளான காருக்கு இசை மூலமாக உயிரூட்ட வேண்டும் என்பது சவாலாக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே துணை சவுண்ட் இன்ஜினீயராக இருந்ததால் இசைக் கலைஞர்களும், பாடகர்களும் என்னுடைய முதல் படமே சிறப்பாக வெளிவர ஆர்வத்தோடும் நட்போடும் வேலை பார்த்தார்கள்” என்கிறார்.
ஆரம்ப நாட்களிலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி என நெகிழ்கிறார். சொல்லப்போனால் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் வெளிவருவதற்கு முன்பே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைத் தந்தது விஜய் சேதுபதிதான்.
கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் விருது வாங்கியதால் ‘குஞ்சி ராமாணம்’ என்கிற மலையாளப் பட வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தடுத்து இரு தமிழ்ப் படங்களில் இசையமைத்தாலும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதால் அவை வெளிவரவில்லை. ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ‘அடியே அழகே’ பாடல் யூ டியூப் முதல் வாட்ஸ் அப் ஷாரிங்வரை ஹிட்டாகி யிருக்கிறது. ‘ராஜா மந்திரி’, ‘உள்குத்து’ என அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT