Last Updated : 09 Sep, 2016 12:11 PM

 

Published : 09 Sep 2016 12:11 PM
Last Updated : 09 Sep 2016 12:11 PM

யோவ்... யோவ்... ஜியோ

ஸ்மார்ட் போன் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஸ்மார்ட்' மக்களின் இன்றைய அதிமுக்கியத் தேவை, ‘எங்கும் வேண்டும் நெட்!'

சாப்பாடு, தண்ணீர் இல்லாமல்கூட இந்த மனிதர்கள் வாழ்ந்துவிடுவார்கள் போல. ஆனால் நிமிடத்துக்கு ஒருமுறை சோஷியல் மீடியாவில் உலாவ முடியவில்லையென்றால், ‘என் உலகம்... என் நெட்... என் உரிமை' என்று போர்க்கொடி தூக்கிவிடுகிறார்கள்.

வீட்டுப் பக்கத்திலேயே ஈ.பி. இருந்தாலும் ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுவது, ஆட்டோ புக் செய்வது முதலான அத்தியாவசியத் தேவைகளுக்கும் சரி, ‘செல்ஃபி'யை ஷேர் செய்வது, லைக் செய்வது உள்ளிட்ட அதி அத்தியாவசியத் தேவைகளுக்கும் சரி... நெட் பேக் அல்லது வைஃபை கட்டாயம்!

இப்படி ஒரு ‘டிமாண்ட்' இருக்கும் நிலையில், ஏற்கெனவே உள்ள சர்வீஸ் புரொவைடர்கள் பல்வேறு ‘நெட் ப்ளான்'களை அள்ளி வீசிக்கொண்டிருக்க, ‘தோ வந்துட்டம்பா...' என்று தடாலடியாக இறங்கியிருக்கிறது ‘ஜியோ!'. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி.

‘குறைந்த விலையில் நெட் பேக், ஃப்ரீ வாய்ஸ் கால்ஸ் என கண்களை விரிய வைக்கும் ஆஃபர்களுடன் வெளியான ஜியோ சிம் கார்டுகளை வாங்கப் போனால் ஆப்பு வைக்கிறார்கள்' என்கிறார்கள் நம் பட்டீஸ்.

"சிம் கார்டு வாங்க ஆதார் கார்டு வேணும்னு சொன்னாங்க. சரின்னு கார்டை எடுத்துக்கிட்டு கிடைக்குப் போனா, ரிலீஸ் பண்ண‌ தேதியில கடைகள்ல விற்பனைக்கு வந்த சிம் கார்டுகளை இலவசமா தரலை. 5 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு போன் இருக்கு அதை வாங்கினா மட்டும்தான் சிம் கார்டு கிடைக்கும்னு சொல்றாங்க" என்று புலம்புகிறார் தினேஷ் குமார்.

அப்படியே வாங்கினாலும், ஜியோ சிம் கார்டுகள் குறிப்பிட்ட சில போன்களில் மட்டுமே செயல்படுகின்றன. 4G சப்போர்ட் செய்யக்கூடிய பெரும்பாலான போன்களிலேயே ஜியோ சிம் கார்டுகள் செயல்படுகின்றன.

"இ ஆதார் கார்டு மூலமாக்கூட இந்த சிம் கார்டை வாங்கலாம்னு சொன்னாங்க. ஆனா, பல கடைகள்ல இ கார்டை ஏத்துக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. இது பரவாயில்லை. இன்னும் சில கடைகள்ல ஃப்ரீ சிம் கார்டுனு சொல்லிட்டு ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்க்கு வித்திட்டிருக்காங்க” என்றார் நித்தீஷ்.

என்னமோ போங்க ஜி! ‘ஜியோ' வந்தாலும் வந்தது, இப்போது மற்ற‌ நிறுவனங்கள் எல்லாம் பதறிக்கிட்டு விலையைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நெட்டிசன்களின் காட்டில் மழைதான் போங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x