Published : 19 May 2017 10:52 AM
Last Updated : 19 May 2017 10:52 AM
கிரிக்கெட் இளைஞர்களின் விருப்பமான விளையாட்டு. கிரிக்கெட் என்றதும் விராட் கோலி, மகேந்திரசிங் தோனி போன்ற பெயர்கள்தாம் நம் நினைவுக்கு வருகின்றன. இவர்கள் மட்டுமல்ல; கிரிக்கெட்டில் பெண்களும் இருக்கிறார்கள். சாதனைகள் புரிகிறார்கள். அவர்களில் ஒருவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜூலன் கோஸ்வாமி. சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் சோயப் அக்தரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைப்பார்கள். ஜூலனை ‘சாக்தகா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஜூலன் சமீபத்தில் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இவரது சாதனைப் பட்டியல் நீண்டது.
கால்பந்து விளையாட்டின் கோட்டையான மேற்கு வங்கத்தில் பிறந்த ஜூலனுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈர்ப்பு வந்தது விசேஷமானதுதான். அதற்குக் காரணம் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான கொல்கத்தா ஈடன் காடனில் 1997-ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான். ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்ட அந்தப் போட்டியைக் கண்டபோது இனித் தன் எதிர்காலம் கிரிக்கெட் என்பதை ஜூலன் முடிவுசெய்துள்ளார். தனக்குக் கிடைத்ததை அரிய வாய்ப்பு என்றே ஜுலன் பரவசப்பட்டார். அந்தப் போட்டியை இன்னும் அருகில் சென்று பார்ப்பதற்காக, அங்குள்ள தன்னார்வச் செயற்பாட்டாளர்களிடம் கேட்டுப் பந்து பொறுக்கும் வேலையைப் பெற்றார்.
ஜூலனின் சொந்த ஊர் சாக்தகா. கொல்கத்தாவிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊர். முறையான கிரிக்கெட் பயிற்சிக்கான வாய்ப்பு அவரது சொந்த ஊரில் இல்லை. அப்படியான பயிற்சிக்கு கொல்கத்தா வர வேண்டியிருந்தது. தினமும் 80 கிலோ மீட்டர் சென்று திரும்பினால் அவரது பள்ளிக் கல்வி பாதிக்கப்படும் என அவரது பெற்றோர் கவலைப்பட்டனர். ஆனால், ‘நம் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையைச் செய்ய வேண்டுமென்றால், நம் முன்னே இருக்கும் நாட்களில் கடுமையாக உழைக்க வேண்டும். தேவையெனில் ஒருநாளில் ஐந்தாறு மணி நேரம் பயணிக்க வேண்டும்’ எனத் தனக்குள்ளே உறுதிபூண்ட ஜூலன் கொல்கத்தாவில் ஸ்வபன் சதுவிடம் பயிற்சியில் சேர்ந்தார்.
ஜூலன், துடுப்பாட்டக்காரராகவும் (Batswomen) வேகப் பந்துவீச்சாளராகவும் பயிற்சியில் தன்னை அடையாளப்படுத்தினார். அடுத்ததாக வங்க கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2002-ம் ஆண்டு தனது 19-ம் வயதில் சென்னையில் நடந்த இந்திய-இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த ஆட்டத்திலேயே தன் சாதனைகளுக்கான தொடக்கப் புள்ளியை விதைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2005 உலக மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தார் ஜூலன். 2008-லிருந்து 2001 வரை இந்திய மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். ஆல் ரவுண்டராக அறியப்பட்டாலும் ஒரு பந்து வீச்சாளராகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார். 153 ஒருநாள் விளையாட்டுப் போட்டியில் விளையாடி 181 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். சராசரியாக 20 ஓட்டங்களையே கொடுத்துள்ளார். இருமுறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியில் மூன்றுமுறை ஐந்து விக்கெட்டுகளையும் ஒரு முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
2007-ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கான விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். கிரிக்கெட்டில் இவர் செய்த அருஞ்சாதனைகளைக் கணக்கில்கொண்டு இவருக்கு இந்திய அரசு விளையாட்டுக்கான உயர்ந்த விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதை 2010-ல் அளித்தது. பத்மஸ்ரீ விருதையும் 2012-ம் ஆண்டு பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT