Published : 23 Nov 2013 03:54 PM
Last Updated : 23 Nov 2013 03:54 PM
லட்சம் லட்சமாகச் செலவு செய்து வீட்டைக் கட்டினால் மட்டும் போதுமா? முறையாகப் பராமரிக்க வேண்டாமா? முறையாகப் பராமரித்தால்தானே வீடு வீடாக இருக்கும். ஆனால், வீட்டைப் பராமரிப்பது என்பது பெரிய கலை. அத்தனை சுலபமும் இல்லை. வீட்டைப் பராமரிக்க சில யோசனைகளைப் பார்ப்போம்.
#வீட்டுக்குள் தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களை நீக்கினாலே, நிறைய இட வசதி கிடைக்கும். செலவு செய்யாமல் வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் இதைச் செய்தாலே போதும்.
#வீட்டில் இருக்கும் விளக்குகளை நவீன நிலை பொருத்திகளால் மாற்றலாம். இது வீட்டின் வெளிச்சம் மற்றும் அழகை உயர்த்தும்.
#சுவரில் விரிசல் அல்லது பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படியிருந்தால் சிமெண்ட் வைத்துப் பூசுவது நல்லது.
#சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டும். சுவர்களில் எண்ணெய் பிசின்கள் அரக்கு போல ஒட்டியிருக்கும். இதனால் சுவர்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அவற்றை முறையாக நீக்கிச் சமையலறை சுவர்கள் பாழாகாமல் பராமரிக்க வேண்டும்.
#தனி வீடாக இருந்து, தோட்டம் அமைக்க இடமும் இருந்தால், அதன் அழகை மென்மேலும் அதிகரிக்கலாம். வீட்டைச் சுற்றி உள்ள இடங்களை மண்வெட்டியால் கொத்தி, அழகிய பூந்தோட்டங்களை உருவாக்கவும்.
#சுவர்களுக்கு வண்ணம் பூசுவது போலக் கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசுவது அவற்றின் ஆயுளை மட்டுமல்ல அழகையும் அதிகரிக்கும்.
#அனைத்து அறைகளுக்கும் பிடித்த நிறத்தில் வர்ணம் பூச முயற்சிக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வர்ணம் பூசினால் நல்லது.
#தரை மற்றும் ஃபர்னிச்சர்களை அடிக்கடி நன்றாகத் துடைப்பது முக்கியம்.
#ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் அமைப்பது பார்ப்பதற்கு அழகைத் தரும். திரைச்சீலைகளை அவ்வப்போது துவைப்பதும் முக்கியம்.
#குளியலறையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களில் சோப்பு நுரையால் அழுக்குப் படியும். இதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT