Published : 20 Jan 2017 11:41 AM
Last Updated : 20 Jan 2017 11:41 AM
1983. எனது உறவினர்களுடன் ஒரு நாள் அரியலூர் சக்தி தியேட்டரில், ‘கோழி கூவுது’ படம் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அனைவரும் ஏதேதோ பேசிக்கொண்டு வர, நான் திடீரென்று, “விஜி (கோழிகூவுது திரைப்படத்தின் கதாநாயகி) சிரிக்கிறப்ப அழகா இருக்காங்க…” என்றேன் வெள்ளந்தியாக. உடனே பாஸ் அண்ணன், “டேய்… சுரேந்திரன் பெரிய பையன் ஆயிட்டான்டா…” என்று கூற, அனைவரும் சத்தமாகச் சிரித்தனர். அப்போது எனக்கு 12 வயதுதான் என்பதை என் கன்னங்கள் சிவக்க, மிகுந்த கூச்சத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலர்ப் படக் கதாநாயகிகளோடு இது நின்றுவிடும் என்று நினைத்தேன். அப்புறம் பழைய படங்களுக்குச் செல்லும்போது சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி என்று கறுப்பு வெள்ளை கதாநாயகிகளும் அழகாகத் தெரிய ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வாறு என் சமகாலத்துக்கு முந்தைய நடிகைகளும் அழகாகக் காட்சியளித்தபோது, எனக்குப் பயமாகிவிட்டது. ‘எனக்கு மட்டும்தான் இந்த நோயா?’ என்று சக நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்கு வியாதி என்னை விடக்கடுமையாக முற்றியிருந்தது. அவர்களுக்குப் பள்ளி வாசலில் இலந்தப்பழம் விற்கும் பெண்ணிலிருந்து, கதாநாயகிகளின் அம்மா நடிகை வரை அத்தனை பேரும் அட்டகாசமாகத் தெரிந்தார்கள்.
அப்படியென்றால் 12, 13 வயதிலேயே ஒரு ஆண், வாலிபனாகிவிடுகிறானா? இல்லை. அப்படியிருந்தால் நான் பப்ளிக்காக நடிகை விஜி அழகாக இருப்பதாகச் சொல்லியிருக்க மாட்டேன். அங்கு இன்னும் வாலிபத்தின் கள்ளத்தனங்கள் நுழையவில்லை. அது பால்யத்துக்கும், வாலிபத்துக்கும் இடைப்பட்ட வயது. அதாவது சிறுவனிலிருந்து சிறிது, சிறிதாக வாலிபனாக மாறும் பருவம். இதை ஆங்கிலத்தில் ‘அடோலெஸன்ஸ்’ என்கிறார்கள். இந்தப் பருவத்தை ஆண்கள் மெள்ள மெள்ளக் கடந்து வருவதை, அவர்களின் நடவடிக்கைகள் மூலமாகவே நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
வாலிபத்தின் முதல் படியில் ஏற ஆரம்பிக்கும்போது, அவர்கள் தனது நாளின் கணிசமான நேரத்தை முகக்கண்ணாடிக்கு ஒதுக்குகிறார்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கண்ணாடி முன் நின்று, வித விதமாகத் தலைமுடியை ஒதுக்கி அழகு பார்ப்பார்கள். நல்லவேளையாகக் கண், காது, மூக்கையெல்லாம் அவ்வாறு ஒதுக்கி சரி செய்துகொள்ளும் வசதி இல்லை. அப்படி இருந்தால், கண்ணைப் பிடுங்கிக் கன்னத்தில் வைத்தும், மூக்கைப் பிடுங்கி நெற்றியில் வைத்தும் அழகு பார்ப்பார்கள் என்று நினைக்கும்போதே இதயம் வெடவெடவென்று நடுங்குகிறது.
மேலும் தலைமுடி நீளமாக வளர, வளர, அவர்களுடைய அழகும் வளரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. எனவே இந்தப் பருவத்துக்கு வந்தவுடன், சலூனை ஒரு சட்ட விரோதமான இடம் போலக் கருதி அந்த ஏரியா பக்கமே தலைவைக்க மாட்டார்கள். பிறகு பள்ளியில் “முடி வெட்டாமல் இந்தப் பக்கம் வராதே…” என்று விரட்டிய பிறகுதான் சலூனுக்குச் செல்வார்கள். இதனால் எல்லாம் பெற்றோர் சந்தோஷப்பட்டுவிடக் கூடாது. அதன் பிறகுதான் அவர்கள் ஒரு மாபெரும் அதிர்ச்சியை எதிர்கொள்ளவேண்டும்.
பசங்கள் சலூனிலிருந்து வந்தவுடன் அம்மாக்கள், இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தை நேரில் கண்டது போல் அலறலாக, “என்னங்க… இந்தப் பையன் செஞ்சுட்டு வந்திருக்குற காரியத்தைப் பாருங்களேன்” என்று கத்துவார்கள். அப்பாக்கள் பதறிப்போய், ‘எவளயாச்சும் கல்யாணம் பண்ணி அழைச்சுட்டு வந்துட்டானோ?’ என்று பதட்டமாக வந்து பார்ப்பார்கள். நாம் பீஸாவும், பர்கரும், கேஎஃப்ஸியும் ஊட்டி, ஊட்டி, சீராட்டி வளர்த்த பையன் தலையின் மூன்று பக்க முடியை மொத்தமாகக் கரண்டிவிட்டு, உச்சந்தலையில் மட்டும் ஒரு பெரும் கொத்து முடியுடன் நிற்பதை பார்க்கும்போது கண்கள் கலங்காவிட்டால், உங்கள் கண் பார்வையில் ஏதோ கோளாறு. “என்னடா இது?” என்று கேட்டால், “ரொனால்டோ கட்டிங்” என்று பதில் வரும். இதெல்லாம் பரவாயில்லை. ஸ்பைக் கட்டிங்கின் அண்ணனான மைக் கட்டிங்கை எல்லாம் பார்த்தால், உங்களுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது.
மேலும் இந்த வயதில், அவர்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் அவர்களை நெருங்கினால் சட்டென்று சைலன்ட்டாகிவிடுவார்கள். பழைய நினைப்பில் அவர்களை கன்னத்தில் கிள்ளிக் கொஞ்சினால், கையை வேகமாகத் தட்டிவிடுவார்கள். திரைப்படங்களுக்குப் பெற்றோருடன் செல்வதைத் தவிர்த்து, நண்பர்களுடன் செல்ல ஆரம்பிப்பார்கள். பிறகு நண்பர்கள் ஒன்று சேர்ந்து ‘குரூப் ஸ்டடி’ என்று படிக்க ஆரம்பிப்பார்கள். இந்த குரூப் ஸ்டடியில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குரூப்பாகப் படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் கையிலும் புத்தகமே இருக்காது என்பதுதான்.
பிறகு அவர்கள் தாங்கள் சந்திப்பதற்கென்று சில ‘ஹேங்க் அவுட்’களை உருவாக்கிக்கொள்வார்கள். கிராமப்புறமாக இருந்தால், டீக்கடை, சாவடி, கட்டைச் சுவர்கள், ஆற்றங்கரை. நகர்ப்புறமாக இருந்தால் மால்கள், மிஸ்டர் சோடா கடைகள், கார்ப்பரேஷன் மைதானங்கள் போன்ற இடங்களில் சந்தித்து, “மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியைக் கொண்டு வருவது எப்படி?” என்று மணிக்கணக்கில் ஆலோசனை செய்வார்கள். இந்தச் சந்திப்புகளின்போது அவர்களைத் தவிர, இந்த உலகில் மீதமுள்ள அத்தனை பேரையும் திட்டுவார்கள்.
அடுத்ததாக… பெற்றோர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால், அதற்கு நேர்மாறாகச் செய்வார்கள். உதாரணத்திற்கு அவர்கள் ஏழு மணிக்குப் படிக்கும் ஐடியாவில் இருப்பார்கள். நாம் தெரியாத்தனமாக 6.55-க்கு “டேய் படிக்கலையா?” என்று கேட்டுவிட்டால், அடுத்து ஒரு வாரத்திற்குப் புத்தகத்தையே தொட மாட்டார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் அல்லது நடிகருக்கு ஆதரவாகப் பேசினால், அவர்கள் அதற்கு நேர் எதிர் தலைவர் அல்லது நடிகருக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.
பின்னர் இது நாள் வரையிலும் இல்லாத பழக்கமாக, பசங்கள் திடீரென்று குடும்பத்தினருடன் சேர்ந்து டிவி சீரியல் பார்த்தால், சீரியலில் ஏதோ ஒரு இளம் நடிகை அழகாக இருக்கிறார் என்று அர்த்தம்.
இவற்றை எல்லாம் படிப்படியாகக் கடந்து, அவர்கள் எப்போது துல்லியமாக ‘இளைஞர்’ எனும் நிலையை அடைகிறார்கள்? 12-13 வயதுவரை பெற்றோர்கள் நாயே, பேயே என்று திட்டினாலும் மௌனமாகத் தலையைக் குனிந்துகொண்டு நிற்கும் பசங்கள் வயதாக ஆக, வேறு விதமாக ரியாக் ஷன் காட்டுவார்கள். வயது 14: நாம் சொல்வதையே காதில் வாங்காதது போல் சட்டைக் காலரைத் திருகியபடி நிற்பார்கள். வயது 15: நாம் திட்டத் திட்ட நம் கண்களை எந்த உணர்ச்சியும் இல்லாமல் உற்றுப் பார்ப்பார்கள். வயது 16: உற்றுப் பார்க்கும் கண்களில் லேசாக ஆத்திரத்தைக் கலந்துகொள்வார்கள். வயது 17: ஆத்திரத்துடன், கொஞ்சம் வெறுப்பையும் கலப்பார்கள். வயது 18: கோபத்துடன், “நான் என்ன உங்க அடிமையா? எப்பதான் எனக்கு சுதந்திரம் தருவீங்க?” என்று அவர்கள் சுதந்திரப் போராட்டப் போராளிகளாகும்போது முழு வாலிபர்களாகிறார்கள்.
- கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT