Last Updated : 31 Mar, 2017 10:46 AM

 

Published : 31 Mar 2017 10:46 AM
Last Updated : 31 Mar 2017 10:46 AM

சற்றே ‘நீளமான’ காதல் கதை!

காதல்!

அது உங்களை என்னவெல்லாம் செய்துவிடும்? பேருந்து நிலையங்களில் காத்திருக்க வைக்கும். கவிதை எழுத வைக்கும். தனிமையில் மோட்டு வளையத்துப் பார்த்துச் சிரிக்க வைக்கும். உள்ளம் உருக வைக்கும். உடலைத் துவள வைக்கும். இது எல்லோருக்கும் பொதுவானது.

கவுதம் மேனன் கதாநாயகர்களுக்கு இன்னும் ஒரு படி மேலே சென்று, தங்கள் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கும் கேரளாவுக்கும் ஓட வைக்கும். ஆனால், பிரத்யும்ன குமார் மஹானந்தியா எனும் ஓவியனுக்கு, தன் காதலியைத் தேடி இந்தியாவிலிருந்து ஸ்வீடனை நோக்கி ஓட வைத்திருக்கிறது. அதுவும் எப்படி? சைக்கிளில்!

ஒழுங்காக ஃப்ளைட்டைப் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தாலே, ‘ஜெட்லாக்’ காரணமாக, இரண்டு நாட்களுக்கு, உடல் அடித்துப் போட்டது போன்று வலுவற்றிருக்கும். ஆனால், சைக்கிளில், குண்டும் குழியுமான சாலைகளில், மணல் நிரம்பிய பாலைவனங்களில், ஒருவேளை அரைவயிறு மட்டுமே உண்டு, இரவு பகல் பாராமல் பெடலை மிதித்து, பல நாடுகளின் எல்லைகளைகப் பத்திரமாகக் கடந்து, தன் காதலியின் கையைப் பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே, போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறது இல்லையா?

பிரத்யும்ன குமார் எனும் பி.கே.வுக்கு, இந்தத் துன்பங்கள் ஒரு பொருட்டே இல்லை. காரணம், அவர் தன் காதல் மேல் வைத்திருந்த நம்பிக்கை. இன்று சின்னச் சின்ன விஷயங்களுக் கெல்லாம் ‘பிரேக் அப்’ செய்துகொள்ளும் இளைஞர்கள், பி.கே.வின் காதல் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய ஒரிஸ்ஸாவின் கிராமம் ஒன்றில் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர் பி.கே. பிறந்தவுடனே அவரின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. ‘இந்தக் குழந்தை வருங்காலத்தில் ஓவியனாக வருவான். இசையின் மீது காதல் கொண்ட, ரிஷப ராசியில் பிறந்த பெண், இவனுக்கு மனைவியாக வருவாள். இந்த மாவட்டத்துக்கு வெளியே, இந்த மாநிலத்துக்கு வெளியே… அவ்வளவு ஏன், இந்த நாட்டுக்கு வெளியே இருந்துகூட அவள் வரலாம்’ என்று சொல்கிறார் பி.கே.வின் குடும்ப ஜோதிடர்.

தீண்டத்தகாவர் என ஒதுக்கப்பட்டவரை யாராவது தெரியாமல் தொட்டுவிட்டால், தொட்டவர் உடனே சென்று குளித்துவிடுவார். அப்படியான கொடுமையான சாதியச் சூழல் நிலவிய காலத்தில், பல்வேறு சாதியச் சீண்டல்களுக்கிடையில் தன் பள்ளிப் படிப்பை முடிக்கிறார் பி.கே. அவரின் ஆர்வம் முழுக்க ஓவியத்தின் மீதிருக்க, தான் படித்துவந்த பொறியியல் படிப்பிலிருந்து விலகி ஓவியக் கல்லூரியில் சேர்கிறார்.

ஓவியத்தில் மேற்படிப்புப் படிக்க ஒரிஸ்ஸா அரசின் கல்வி உதவித் தொகையுடன் டெல்லி வருகிறார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அரசியல் காரணங்களால், உதவித் தொகை நின்றுவிட, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி டெல்லியின் நடைபாதைகளில் நாட்களைக் கழிக்கிறார் பி.கே. தன் திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர், டெல்லியின் வணிகத் தளமாக விளங்கும் கன்னாட் பிளேஸில் ‘10 ருபீஸ், 10 மினிட்ஸ்’ எனும் போர்ட் மாட்டி, மனிதர்களை ‘போர்ட்ரெய்ட்’ எனப்படும் உருவச் சித்திரங்களாக வரைகிறார். கொஞ்சம் பணம் கிடைக்கிறது. பசி போகிறது. தன் நண்பர்கள் சிலரின் உதவியால் தங்குவதற்கு அறையும் கிடைக்கிறது.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில், ஒருநாள் அவரிடம் தன்னை ஓவியமாக வரைந்துகொள்ள ஒரு வெளிநாட்டுப் பெண் வருகிறார். அவள் பெயர் சார்லோட். ஏனோ அவரை வரைவதற்கு அவருக்குக் கைகள் நடுங்குகின்றன. எனவே தன்னை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதற்கு, அவரிடம் பேச்சுக்கொடுக்கிறார் பி.கே. அப்போது, அவளுக்குப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும் என்பதையும், அவர் ரிஷப ராசியில் பிறந்தவர் என்பதையும், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் தெரிந்துகொள்கிறார். தனக்கான பெண் இவள்தான் என்பதை உணர்கிறார் பி.கே.

தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும், சிறு வயதில் தங்கள் குடும்ப ஜோதிடர் சொன்னதையும் சார்லோட்டுடன் பி.கே. பகிர்ந்துகொள்ள, இருவருக்கும் காதல் அரும்புகிறது. தன் செவிலியப் படிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வந்த சார்லோட், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஸ்வீடனுக்குத் திரும்புகிறார். பிறகு இருவருக்கும் இடையில் கடிதங்கள் வழியாகக் காதல் வலுப் பெறுகிறது. வறுமை காரணமாக பி.கே.வை ஸ்வீடனுக்கு அழைக்க சார்லோட்டால் இயலவில்லை. பி.கே.விடமோ ஸ்வீடன் செல்வதற்கான ஃப்ளைட் டிக்கெட்டை வாங்குவதற்குக்கூடக் காசில்லை.

இந்நிலையில், சைக்கிள் மூலமாகவே டெல்லியிலிருந்து ஸ்வீடன் வரை செல்ல முடிவெடுக்கிறார் பி.கே. அந்தப் பயணத்துடன், பி.கே. கடந்து வந்த பாதையையும் நாவலுக்கே உரித்தான தன்மையுடன் ‘தி அமேசிங் ஸ்டோரி ஆஃப் தி மேன் ஹூ சைக்கிள்ட் ஃப்ரம் இந்தியா டூ ஈரோப் ஃபார் லவ்’ எனும் புத்தகத்தில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் பெர் ஜெ. ஆண்டர்சன். ஒன்வேர்ல்ட் பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம், இப்போது ‘பெஸ்ட் செல்லர்’ வரிசையில் முன்னணியில் இருக்கிறது.

தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து, சார்லோட்டைக் கைப்பிடித்து, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி, ஸ்வீடனிலேயே ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது ஸ்வீடன் நாட்டுக்கான ஒடிஷா அரசின் கலாச்சாரத் தூதராக இருக்கும் பி.கே., ‘உண்மையாகவே நீங்கள் காதலில் விழும்போது என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும் தன்மை கொண்டவராக மாற்றப்படுகிறீர்கள்’ என்கிறார்.

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்கள் காதலருக்கு ‘மன்னிப்பாயா…?’ என்று மெஸேஜ் தட்டினால், உங்கள் காதல் உண்மையானது என்று அர்த்தம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x