Published : 29 Mar 2014 02:35 PM
Last Updated : 29 Mar 2014 02:35 PM
வாழ்க்கையில் வரும் இயல்பான பிரச்சினை களை எதிர்கொள்ளத் திராணியற்று மரணத்தைத் தழுவிக்கொண்ட வெவ்வேறு விதமான மனிதர்களின் மரண வாக்குமூலங்களின் மூலம் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான உத்திகளையும் வழங்கும் நூல் இது. அதிலிருந்து ஒரு பகுதி.
ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். ஆனால் எல்லோரும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்போம், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’
உலகத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷ மாக இருந்துகொண்டிருப்பதுபோலவும் தனக்கு மட்டும் பிரச்சினை, தனக்கு மட்டும் தோல்வி, தனக்கு மட்டும் சிக்கல் எனவும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த இடத்தில் ஒரு முக்கியமான மனிதரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிருக்கிறது.
அவர் ஆர்தர் ஆஷே. பிரபல டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். டென்னிஸ் என்பதுதான் இவருடைய கனவு, எதிர்காலம், எல்லாமும்.
ஆனால் டென்னிஸ் விளையாடச் செல்லும் இடங்களில் எல்லாம் பலவிதமான எதிர்ப்புகள், அவமதிப்புகள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். மிக நன்றாக விளையாடவும் செய்தார். வெற்றிகள் குவிந்தன. பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
உலகின் பிரபலமான அத்தனை போட்டி களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் வந்தன. அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைச் சுவைத்தார்.
திடீரென ஒருநாள் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மாரடைப்பு என்றார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆஷே பிழைத்தார். டென்னிஸ் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். அந்தப் பெருமூச்சு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது. ஆஷேவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மீண்டும் மருந்துகள், மாத்திரைகள். ஆனாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. வெவேறு விதமான உடல்நிலைப் பிரச்சினைகள் தொடர்ந்தன. தீவிரப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீய பழக்கவழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவருக்கு எய்ட்ஸ் எப்படி வந்தது? ஆய்வுசெய்து பார்த்தபோது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது ரத்தம் ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம். விஷயம் தெரிய வந்தபோது ரசிகர்கள் துடிதுடித்துப்போனர்கள். அவருடைய ரசிகர்களில் ஒருவர் ஆஷேவுக்குக் கடிதம் எழுதினார், ‘உங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’
அதற்கு ஆஷே நிதானமாகப் பதில் எழுதினார். ‘உலகில் 5 கோடி சிறுவர்கள் டென்னிஸ் விளையாட விரும்புகிறார்கள். 50 லட்சம் பேரே விளையாடுகிறார்கள். 5 லட்சம் பேரே முறையான பயிற்சியுடன் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்களில் 50 ஆயிரம் பேருக்குதான் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் அவர்களில் 5 ஆயிரம் பேரால்தான் விளையாட முடிகிறது. அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் போன்ற சர்வதேசப் போட்டிகளுக்கு வருகிறார்கள். அவர்களில் நான்கு பேர்தான் அரை இறுதிக்கு முன்னேறுகிறார்கள். இருவர் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். ஒருவருக்குத்தான் கோப்பையை வெல்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன்? என அப்போது நான் கேட்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT