Published : 08 Dec 2016 04:48 PM
Last Updated : 08 Dec 2016 04:48 PM

காதல் வழிச் சாலை 12: அபிராமி... அபிராமி...!

இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர் மனநிலை இப்படி விரிகிறது: “சார், எண்ணங்களுக்கு சக்தியுண்டு. பிரார்த்தனைகள் மூலம் காதல் வெற்றி பெற முயற்சியுங்கள் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதேபோல எனக்குள்ளும் வித்தியாசமான உணர்வுகள் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. அவள் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவளைப் பார்த்த நாளிலிருந்து அவளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எதிர்பார்க்காத இடங்களிலெல்லாம் அவள் பெயர் தெரிகிறது. செய்தித்தாள் எடுத்தால் ஒரு பிரபலத்துக்கு அவள் பெயர். டீக்கடைக்குப் போனால் ‘தீபா டீஸ்டால்’ என்றிருக்கிறது. என் அம்மா பெயர் லட்சுமி. ஒரு தொழில் தொடங்கினால் அம்மா பெயரோடு என் காதலியின் பெயரையும் சேர்த்து வைக்கலாம் என்றிருந்தேன். என்ன ஆச்சரியம்… எங்கள் ஏரியாவில் புதிதாகத் தொடங்கிய கல்யாண மண்டபத்துக்கு தீபலட்சுமி மஹால் என்று பெயர் வைத்திருந்தார்கள்.

முட்டாள் தனமாக யோசிக்காதே தம்பி என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. காதலே ஒரு முட்டாள்தனம்தானே. எல்லாம் சரி, இப்போது பிரச்சினையே அந்தப் பெண் இதுவரை எனக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. என் வீட்டில் அனைவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டேன். என் அக்காவுடன் அவள் வீட்டுக்குச் சென்றேன். போன் நம்பரைக் கேட்டபோது, தன்னிடம் மொபைல் இல்லை என்றாள். ஆனால் அவளிடம் போன் இருப்பது எனக்குத் தெரியும். வலியுறுத்திக் கேட்டதால் கடைசியில் ஒரு நம்பரைச் சொன்னாள். என் அக்காவை அந்த நம்பருக்கு போன் செய்யச் சொன்னேன். யாரோ ஒரு இளைஞர் பேசினார். அவளுக்கு அண்ணனும் இல்லை, தம்பியும் இல்லை. பின் எதற்காக யாரோ ஒருவரது எண்ணை எனக்குத் தர வேண்டும் என்ற குழப்பம் இன்றுவரை தீரவில்லை.

ஒன்பது மாதங்களாக அவள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் அவள் எனக்குத்தான் என்று உணர்த்துவதாக இருக்க, அவள் மட்டும் பதில் சொல்லாமல் இருப்பது டென்ஷனாக இருக்கிறது. உன்னைப் பிடித்திருக்கிறது, மறக்க முடியவில்லை என்று நான் சொன்னதற்குப் பதில் பேசாதவள், “உங்க அண்ணனுக்கு எங்க அக்காவைப் பெண் கேட்டு வரச் சொல்லுங்க” என்று மட்டும் சொன்னாள். இவளை விடவும் மனமில்லை. மேலெடுத்துச் செல்லவும் முடியவில்லை. ஹெல்ப் மீ சார்…” – உணர்வுக் குவியலாக இருந்தது அந்தக் கடிதம்.

ஞாபகங்கள் தாலாட்டும்

இவருக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும். ரொம்ப நாள் தொடர்பில் இல்லாத நண்பராக இருப்பார். எதையோ தேடும்போது அவரும் நீங்களும் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தைப் பார்ப்பீர்கள். அன்று மதியம் அவரே அழைப்பார். அதிர்ந்து போவீர்கள். உங்களுக்குப் பிடிக்காத குறுந்தகடு பாடல்களை நிறுத்திவிட்டு, ரேடியாவை ஆன் செய்திருப்பீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று நேயர் விருப்பமாகத் தவழ்ந்து வந்துகொண்டிருக்கும்.

புல்லரித்துப் போவீர்கள். எதேச்சையாக நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு ஏதும் விளக்கம் இருக்கிறதா? இருக்கிறது. ஆங்கிலத்தில் இவற்றைத் தற்செயல் (coincidence) என்று சொல்லிக் கடந்தும் போகலாம். மேலும் ஆராய்ந்தால் எதுவும் எதேச்சையல்ல, எல்லா நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

நினைத்தாலே நடக்கும்

ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவே சம்பவங்கள் இப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன (Synchronise). இதைத்தான் Synchro Destiny என்று சொல்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா. புகழ்பெற்ற பல சுயமுன்னேற்ற நூல்களின் ஆசிரியரான இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பே இதுதான். மேலோட்டமாகப் பார்த்தால் பெரிதாக எதுவும் புலப்படாது. ஆனால், பக்கவாட்டுச் சிந்தனையுடன் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்கு வேறு அர்த்தம் புலப்படும். இது மட்டுமல்ல, ஒரே விஷயத்தின் மீது நம் மொத்தக் கவனத்தையும் குவித்தால் அது நம்மை நெருங்கி வரும் என்பதே கவர்தல் விதி (Law of attraction).

நேர்மறை விஷயமானாலும் சரி; எதிர்மறை விஷயமானாலும் சரி, அதையே நினைத்துக்கொண்டிருந்தால் அது ஒரு நாள் நடந்தே தீரும் என்று சொல்வார்கள். சுய முன்னேற்ற நூல்களைப் படிக்க நேர்ந்தால் அவற்றின் அடிப்படை போதனைகளில் பலவும் எண்ணங்களின் சக்தியைப் பறைசாற்றும். அடுத்து ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தி எண்ணங்களின் துணையுடன் நினைத்ததைச் சாதித்துக்கொள்ளுங்கள் என்பதுதான் மையக் கருத்தாக இருக்கும்.

வேலை வந்தால் மாலை வரும்

இப்போது அந்த இளைஞர் கதைக்கு வருவோம். அன்புத் தம்பி, காதலில் விழும்போது இப்படி உணர்வது சகஜமே. இயற்கையே நமக்கு உத்தரவு கொடுத்தது போலவும் நடப்பதெல்லாம் உங்களிருவரைச் சுற்றியே நடப்பது போலவும் பிரமிப்பாக இருக்கும். இதற்கான அறிவியல் விளக்கத்தையும் மேலே சொல்லியிருக்கிறேன். அந்தப் பெண் ஏன் மவுனமாக இருக்கிறார்? காரணம் பயமாகவும் இருக்கலாம். ஆமாம், அவருடைய அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அது முடிந்தவுடன்தான் தன்னைப் பற்றி அவரால் யோசிக்க முடியும்.

உங்கள் நிலவரம் என்ன? போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். அதில் வெற்றி பெற்று நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று உங்கள் நிலை உயர்ந்தால் எல்லாமே மாற வாய்ப்பிருக்கிறது. காதல் எங்கேயும் போய்விடாது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வேண்டும்.

பொறுத்தாருக்குக் காதல் கிட்டும்

பெண்களின் மவுனம் நான் முன்பே சொன்னதுபோல் பல இடங்களில் நமக்குப் புரியாது. ஒவ்வொன்றாகத்தான் அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதற்குள் வேலையில் கண்டிப்பாக செட்டில் ஆக வேண்டும். அவரைத் தொடர்ந்து செல்வதை உடனே நிறுத்துங்கள். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், உங்கள் திட்டம் என்ன, எவ்வளவு காலம் காத்திருக்கப் போகிறீர்கள் என்பதைச் சந்தர்ப்பம் பார்த்து அவருக்குப் புரியவைத்துவிடுங்கள்.

காதலைச் சொன்னதுமே டூயட் பாடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து வெளியே வாருங்கள். முக்கியமாக அந்தப் பெண்ணின் மனதில் வேறு யாரும் இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா மவுனமும் சம்மதத்துக்கு அறிகுறியல்ல. ‘நீங்கள் ஐ லவ் யூ’ என்று சொன்னதும் அவரும் ‘லவ் யூ டூ’ என்று சொல்லிவிட்டால் நமக்குக் காதல் மேலேயே ஒரு சந்தேகம் வந்துவிடும்.

பல நேரங்களில் ஒரு வித பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆணோ பெண்ணோ தள்ளப்படுவார்கள். அப்போது நம்மைக் கடந்து போகிற, நம்மைப் பாதித்த ஒரு நபரை ரிசர்வில் வைப்பதுபோல பரிசீலனையிலேயே வைத்திருப்பார்கள். காதல் விண்ணப்பங்களும் சில நேரம் காத்திருப்பில் வைக்கப்படுகின்றன. மனதில் நாமும் அவர்களை நிறுத்தி நாம் விரும்புவதையும் காத்திருப்பதையும் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.

அதன் பின் இருவரது காதலே மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும். உங்கள் விஷயத்தில் அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. கடைக்கோடி கிராமத்தில் பெற்றொருடன் வாழும் பெண்ணுக்கும் மும்பை ஜுஹூ பீச்சுக்கு அருகில் ஹாஸ்டலில் வசிக்கும் நவ நாகரிக யுவதிக்கும் இருக்கும் சுதந்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால் உடனே ரியாக்ட் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

இளமை நமக்கு வைக்கும் தேர்வுகளில் முக்கியமானது காதல். அதில் வெற்றிபெற நிறைய திட்டமிடலும், கவனம் சிதறாத உண்மையான முயற்சியும், எல்லாவற்றையும்விட ஏராளமான பொறுமையும் அவசியம் தேவை.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x