Published : 05 May 2017 12:07 PM
Last Updated : 05 May 2017 12:07 PM
‘நேஷன் வாண்ட்ஸ் டு நோ’ எனச் சொன்னாலே அவர் முகம் நம் கண் முன்னே வருவதற்கு முன்னதாக உச்சஸ்தாயியில் அலறும் அவருடைய குரல் நம் காதுகளில் கிரீச்சிடும். “நான் கத்துகிறேன். காரணம் நீங்கள் கத்தாவிட்டால் கேட்கப்படாமலேயே போய்விடுவீர்கள்” என நிதானமாகவும் நடுநிலையாகவும் செயல்படும் செய்தி சானல்களைச் சாடியவர் அர்னாப் கோஸ்வாமி.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள டெலிகிராஃப் நாளிதழில் பத்திரிகையாளர் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் என அதனை அடுத்து முன்னேறினார். தொடர்ந்து மேற்கத்திய கலாசாரத்தை சாடுவது, இந்திய தேசியவாதம் என்கிற பேரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது என ஒருதலை பட்சமாகக் கருத்துகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியே பிரபலம் அடைந்தார். டைம்ஸ் நவ் செய்தி சானல் மூலமாகச் சர்ச்சைக்குரிய செய்தியாளர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார்.
ஆனால், கடந்த நவம்பர் மாதம் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில், ‘ரிபப்ளிக் டிவி’யை விரைவில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கவிருக்கிறார். அதற்கான விளம்பரங்களும் நாடு பூராவும் பரபரப்பாகப் பரப்பப்பட்டுவருகின்றன.
அதில் ஒன்று, அர்னாப் கடிதம் எழுதுவது போன்ற வீடியோ பதிவு. அதிகாரம் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ‘உங்களைச் சந்திக்க விரைவில் வருகிறேன்’ என அர்னாப் கடிதம் எழுதும் அந்த வீடியோ பதிவு கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதை அடுத்து, மீண்டும் தொலைக்காட்சியில் தன்னுடைய புதிய அவதாரத்தைக் கம்பீரமாக அறிவித்திருக்கும் அர்னாபை பலர் கேலி செய்துவருகின்றனர்.
அவற்றில் பிரபல ஆர்.ஜே., வி.ஜேவான ஜோஸ் கொவாக்கோ ஒரிஜினல் வீடியோவுக்கு அர்னாப் போன்றே வாய்ஸ் ஓவர் கொடுத்தி ருக்கும் ஒரு பதிவு தற்போது வைரல் ஹிட் அடித்துள்ளது. அதில், அர்னாப் மோடியிடம், “டியர் மோடி உங்களிடம் இப்போது ரொம்ப கஷ்டமான கேள்விகளைக் கேட்பதற்கு என்னை மன்னிக்கவும்” எனத் தொடங்குகிறார். முழுக்க முழுக்க சீரியஸான குரலில் அவர் கேட்கும் கேள்விகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. வடிவேலு பாணியில் முதல் வார்த்தையை அடித்துச் சத்தமாகக் கேட்டுவிட்டு அடுத்த சத்தமில்லாமல் முணுமுணுக்கிறார். எப்படி, ஏன், எதற்குப் போன்ற சொற்களைக் கேட்பதற்கு அர்னாப் ‘பேர்போனவர்’ என்பதால், “எப்படி...” என அதிரடியாகக் கேட்டுவிட்டு, “இருக்கீங்க?” என்கிற உப்புச்சப்பில்லாத கேள்வியைக் கேட்கிறார். அடுத்து, “யார்…” என உறக்கச் சொல்லிவிட்டு, “முதலில் வந்தது? முட்டையா அல்லது கோழியா?”, “33-ன் ஸ்கொயர் ரூட் என்ன?”, “இந்த ஜோக்கோட அர்த்தம் என்ன?” என அடுக்கடுக்காக அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கலாய்த்திருக்கிறார்.
இதில் கொடுமை என்னவென்றால் ஒரிஜினல் வீடியோவுக்குப் பின்னால் ஆடியோவை மட்டும் ஜோஸ் கொவாக்கோ சேர்த்துவிட்டதால் இதுதான் ‘ரிபப்ளிக் டிவி’யின் அசலான விளம்பரம் என்றே பலர் நம்பிவிட்டனர். இதனால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. போதாததற்கு, ரிபப்ளிக் டிவியிலும் ‘நாடு உண்மையை அறிய விரும்புகிறது’ என மீண்டும் மீண்டும் சொல்வேன் என அர்னாப் அடம்பிடிக்கிறாராம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT