Last Updated : 05 May, 2017 12:11 PM

 

Published : 05 May 2017 12:11 PM
Last Updated : 05 May 2017 12:11 PM

எதிர்கால கிரிக்கெட் கதாநாயகர்கள்! - ஐபிஎல் ரவுண்ட் அப்

ஐ.பி.எல். என்ற நவீன கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏராளமான வீரர்களை இந்திய அணிக்கு ஐ.பி.எல். அள்ளிக் கொடுத்திருக்கிறது. அஸ்வின், ஷிகர் தவான், விருத்திமான் சகா, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, ஹிர்திக் பாண்ட்யா, பும்ரா, மணீஸ் பாண்டே, கருண் நாயர் , கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் எல்லாமே ஐ.பி.எல்.லில் கவனம் பெற்று, இந்திய அணிக்குள் நுழைந்தவர்கள்தான். இவர்களைப் போலவே இன்னும் ஏராளமான வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி, இந்திய அணிக்குள் நுழையக் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில வீரர்களைப் பார்ப்போமா?

ரிஷப் பந்த் (19 வயது, டெல்லி டேர்டெவில்ஸ்)

இடது கை அதிரடி ஆட்டக்காரர். டோணி போலவே விக்கெட் கீப்பிங் ஆட்டக்காரர். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைத் தொடரில் கவனம் பெற்று, கடந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் நுழைந்தவர். தந்தையை இழந்து 4 நாட்களே ஆன நிலையில் இந்தத் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 56 ரன்களைக் குவித்து தனிக் கவனம் பெற்றவர். இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் வாய்ப்பு பெற்றார். டோணி ஓய்வை நோக்கிச் செல்லும் நிலையிலும் விருத்திமான் சகா 35 வயதை நெருங்கும் நிலையிலும் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யும் பணி ஓரிரு ஆண்டுகளில் இவருக்கு நிச்சயம் கிடைக்கலாம்.

நிதிஷ் ராணா (23 வயது, மும்பை இந்தியன்ஸ்)

டெல்லியைச் சேர்ந்த இடது கை ஆட்டக்காரர். இலங்கை வீரர் ஜெயசூர்யா போல பெரிய ஷாட்களை ஆடும் அதிரடி ஆட்டக்காரர். பகுதி நேர ஆப்-பிரேக் பவுலரும்கூட. இந்த சீசனில் மூன்றாவது வீரராகக் களமிறங்கி அதிரிபுதிரியாகப் பந்தை பறக்கவிடுகிறார். யாரும் இவரைக் கவனத்தில் கொள்ளாத நிலையில், தனி ஒருவனாக இந்த சீசனில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விட்டிருக்கிறார். இந்திய அணியில் சேவாக்குக்குப் பிறகு பெரிய ஷாட்களை ஆடும் வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்றால் நிதிஷ் ராணா அந்த இடத்தைப் பிடிக்கலாம்.

ராகுல் திரிபாதி (26 வயது, புனே ரைசிங் ஸ்டார்ஸ்)

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வலது கை ஆட்டக்காரர். வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டவர். குறைந்த விலைக்கு வாங்கப்பட்டாலும் நிறைவான பணிகளைச் செய்து வருகிறார். புனே அணியின் தொடக்க வீரர் இவர்தான். ரஹானே, ஸ்மித், டோணி, பென் ஸ்டோக்ஸ் என்று நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் தேவைக்குத் தகுந்தாற்போல விளையாடி, ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசிக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் விளையாடக்கூடிய வாய்ப்புள்ள வீரர் இவர்.

குருணல் பாண்ட்யா (26 வயது, மும்பை இந்தியன்ஸ்)

இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஆடி வரும் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் இவர். இடது கை அதிரடி ஆட்டக்காரர். எந்தச் சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் களமிறங்கி பந்தை அனாயாசமாக விரட்டுவதில் வல்லவர். தன் சகோதரரைப் போலவே இவரும் ஆல் ரவுண்டர். சுழற்பந்து வீச்சிலும் ஜொலிக்கிறார். விஜய் ஹசாரே தொடரைத் தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரிலும் ரன் மற்றும் விக்கெட் வேட்டையில் முன்னணியில் உள்ளார். இந்திய அணியில் இடம் பெறத் தகுதியுள்ள வீரர் இவர்.

பாசில் தம்பி (23 வயது, குஜராத் லயன்ஸ்)

ஸ்ரீசாந்துக்குப் பிறகு மலையாள தேசத்திலிருந்து வந்திருக்கும் இன்னொரு ‘கேரள எக்ஸ்பிரஸ்’ இவர். ஐபிஎல் தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிகம் கவனம் பெற்றவர். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணியினரைத் திணறடிக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் சீரான விக்கெட் வேட்டையையும் நடத்தி வருகிறார். எந்த நேரத்திலும் பதற்றமின்றி பந்து வீசுவது இவரது தனிச்சிறப்பு. இந்திய அணிக்காக இவர் பந்து வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சஞ்சு சாம்சன் (22 வயது, டெல்லி டேர்டெவில்ஸ்)

ரிஷப் பந்த் போலவே இவரும் விக்கெட் கீப்பிங் மற்றும் வலது கை அதிரடி ஆட்டக்காரர். அதிரடி ஆட்டக்காரராக இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப விளையாடுவதில் வல்லவர். விக்கெட் கீப்பிங் பணி மட்டுமல்ல, ஃபீல்டிங்கிலும் கலக்கி வருபவர். இந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிராக 102 ரன் குவித்து, முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். ரிஷப் பந்த்க்குப் போட்டியாக வரும் வாய்ப்புள்ள வீரர்.

இந்த ஆறு வீரர்கள் மட்டுமல்ல, இந்திய அணியில் விளையாடும் கனவோடு ஐ.பி.எல்.லில் இன்னும் ஏராளமான வீரர்கள் தங்கள் திறமையைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இளமையும் திறமையும் அந்த வீரர்களுக்குப் புது முகவரியைக் கொடுக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x