Published : 27 Jan 2017 10:08 AM
Last Updated : 27 Jan 2017 10:08 AM
காதலில் நான்கு வகை உண்டு என்கின்றன கிரேக்கத் தத்துவங்கள். அவை ஈராஸ் (Eros), ஃபிலியோ (Phileo), ஸ்டோர்ஜ் (Storge), அகேப் (Agape).
விடலைக் காதல்
கண்டதும் காதல்தான் ஈராஸ். இது உடல் கவர்ச்சியின் அடிப்படையில் பிறப்பது. காமக் கிளர்ச்சியைக் குறிக்கும் எரோட்டிக் (erotic) என்ற ஆங்கில வார்த்தை இதிலிருந்து பிறந்ததுதான். உள்ளத்தின் அழகைப் பார்க்கும் முன், உடல் அழகைப் பார்த்துப் பிறக்கும் இந்த உணர்வு எப்படிப் போகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் காதல் நெருப்பு கல்யாணத்திலும் முடியலாம். தீயின் வேகம் கொஞ்சமாகக் குறைந்ததும் பல நிஜங்கள் வெளியில் தெரியும். அந்த உண்மையின் கசப்பு தாங்காமல் பாதி வழியிலேயே அந்தக் காதல் முறிவையும் சந்திக்கலாம்.
இந்த வகைக் காதல் ஒருவரது பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்க்கும். எதிர்மறைப் பக்கங்கள் வெளிப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் இருக்காது. பெரும்பாலான விடலைக் காதல் இதில்தான் சேர்த்தி.
நட்பின் பரிணாம வளர்ச்சி
நட்பு, காதலாக மாறுவது ஃபிலியோ. பல காலம் நண்பர்களாகப் பழகும்போது பெரும்பாலான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இதில் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உணர்வுக் குழப்பங்களை ஒருவிதப் புரிதலுடன் கடந்து செல்ல நட்பு நல்லதொரு வாய்ப்பு. ஒரு பெண் எப்படி என்பதைப் பத்து ஆண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிடத் தெளிவானது ஒரு தோழியோடு பழகி, புரிந்துகொள்வது. அதே போல ஒரு ஆண் அன்புக்கு எப்படி ஏங்குகிறான் என்பதை விளக்கிச் சொல்ல எல்லா ஆண்களாலும் முடியாது. காரணம் எல்லா ஆண்களும் கவிதை எழுதுவது இல்லையல்லவா? அங்கும் நட்புதான் கைகொடுக்கிறது.
கண்டதும் ஏற்படும் காமம் தோய்ந்த காதலைவிட நீண்ட காலம் பழகிய பின் ஏற்படும் இந்தக் காதல் நிச்சயமாக நிலைத்து நிற்கக்கூடியது. வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு அச்சாரமிடக் கூடியது. நியாயமாக இப்படித்தான் காதலிக்க வேண்டும். முதலில் எந்தவித கமிட்மெண்ட்டும் இல்லாத ஒரு நட்பு. நட்பு தரும் தெளிவு. மறுத்தாலும் வெறுத்தாலும் நட்பின் நாகரிகம் இருவரது சுய மரியாதையையும் காப்பாற்றும். அவ்வளவு நாள் பழகிய பழக்கம் சேதாரமின்றி இருவரையும் காக்கும். சரி என்றால் கல்யாணம்; இல்லை என்றாலும் நாம் என்றும் நண்பர்கள் என்ற நாகரிகம் அங்கே அவர்கள் இருவரையும் பெரும் மன உளைச்சலிலிருந்து லாவகமாகக் காப்பாற்றிவிடும்.
நட்பில் பிறக்கும் காதல் எவ்வளவு அழகானது! முரண்பாடுகளைக் கடந்த அந்த இடத்தில் மீதம் இருப்பது முதிர்ச்சி மட்டுமே. அந்த முதிர்ச்சிதான் காலங்களைக் கடந்தும் காதல் வென்று நிற்க முக்கியத் தேவை. மாட மாளிகை, கோபுரங்களைக்கூட ஏழெட்டு மாதங்களில் கட்டி முடித்துவிடலாம். ஆனால் காதல் கோட்டையைக் கட்ட நீண்ட காலம் பிடிக்கும் நண்பர்களே.
வீட்டுக்குள்ளே திருவிழா
மூன்றாம் வகையான ஸ்டோர்ஜ், குடும்ப ரீதியிலான காதல் (familial love). குடும்பம் மற்றும் உற்ற நண்பர்களிடத்தில் நமக்குத் தோன்றும் அன்புணர்ச்சி இது. இயல்பாகவே பெற்றோருக்குத் தம் பிள்ளைகள் மீது வரும் பாச உணர்ச்சி இந்த வகையைச் சேர்ந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். ஆண்டுக் கணக்கில் பேசிக்கொள்ளாத சகோதரர்கள்கூட தங்கள் மூன்றாவது சகோதரனுக்கு ஏதாவது பிரச்னை என்றவுடன் அனைவரும் ஒன்று கூடிவிடுவார்கள். அடி நாதமாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் பாசமே இதற்குக் காரணம்.
இந்த அன்பு நிபந்தனைகளற்றது. நண்பர்களிடத்தில் தவறு இருக்கலாம். பெற்ற பிள்ளைகளிடத்திலும் களங்கம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு காலப்போக்கில் அவற்றை மறந்து பின் மன்னித்தும் விடுகிறோமல்லவா. அந்த வகை காதலான இது, பாதுகாப்பானது; சவுகரியமானது; தியாகங்களும் நிறைந்தது.
அதையும் தாண்டி புனிதமானது
எதிர்பார்ப்புகளற்ற, நிபந்தனைகளற்ற, பிரதிபலன் பார்க்காத, புனிதமான காதலே அகேப். இது மனிதர்களுக்குச் சரிப்பட்டு வரக்கூடியதா என்றால் சந்தேகம்தான். இயற்கை நம் மீது வைத்திருக்கும் மாசற்ற அன்பைப் போன்றது இந்த வகைக் காதல். மழை ஒரு ஊரில் பெய்யும் போது பாகுபாடு பார்க்கிறதா? ஏதாவது பிரதிபலன் நம்மிடத்தில் கேட்கிறதா? அதைப் போன்றதுதான் இந்தக் காதல். “நீ இருந்தால் நன்று. இல்லாவிட்டாலும் நன்று. உனக்கு வேண்டியதை என்னால் முடிந்தவரை செய்துகொண்டே இருப்பேன்.
நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஒற்றை எதிர்பார்ப்பு. நடந்திருந்தால் எல்லாம் மகிழ்ச்சியே. வாழ்க்கை நம்மை ஒன்றுசேர்க்காவிட்டாலும் நீ எனக்குள் இடம் மாறியதால் நாம் என்றும் ஈருடல் ஓருயிரே. உடல் கலப்பு என்பது அண்டவெளியில் புலன்கள் சுகிப்பதற்காக நடப்பது. சந்ததி விருத்திக்கு அது வேண்டும்தான். ஆனால் ஆன்ம அளவில் என்னுடன் நீ கலந்திருப்பது எனக்கு மட்டுமே தெரிந்தது. கடவுளைப் பார்த்தவன் அதை அடுத்தவருக்குச் சொல்லி விளங்கவைக்க முடியுமா? அது போலத்தான் நமக்கான காதல் நமக்கானது மட்டுமே” - இப்படியானதுதான் இந்தக் காதல்.
‘என்னால் முடிந்தவரை நான் காப்பாற்றுவேன். அதைக் கடமை என்று சொன்னால்கூட அதன் புனிதம் சற்றே சிதைந்துவிடும். அவள் காக்கப்படுவது அவசியம். வேறு இடத்தில் இருந்தாலும் காக்கப்பட்டால் சரி. காதல் என்பதே காத்தல்தான் அல்லவா?’ - காதல் தோல்வி அடையும்போது இப்படி எத்தனை பேர் மாற்றி யோசித்துப் பார்த்திருக்கிறோம்? இதைத்தான் அகேப் கற்றுத்தருகிறது. எதிரிகளிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படை இது. நம்மைப் பிடிக்காதவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள் இருவரிடமும் நமக்கு ஈராஸ் உணர்வும் வராது. ஸ்டோர்ஜ் என்ற உணர்வும் வராது. ஆனால் அவர்களையும் நேசிக்கத் தலைப்படுவதுதான் இந்த அகேப் என்ற தெய்வீக உணர்வின் அடிநாதம்.
கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் காதலைப் பற்றிய ஆராய்ச்சியிலும் ஒரு முடிவுக்கே வர முடியாதுதான் போல!
எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். |
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT