Published : 24 Jun 2016 02:02 PM
Last Updated : 24 Jun 2016 02:02 PM

திரைக்கு வந்த டெம்பிள் மங்கி ராஜா

யூ-டியூப் தளத்தில் ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற சேனலின் வீடியோக்கள் யாவும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்றவை. டெம்பிள் மங்கீஸை வழிநடத்திவந்தவர்கள் விஜய் வரதராஜ், சரவணன், அப்துல். மூவருமே படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நண்பராக நடித்து திரையுலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார் விஜய் வரதராஜ்.

எப்படி அமைந்தது சினிமா வாய்ப்பு?

ஜி.வி.பிரகாஷும் சாம் ஆண்டனும் ஒரு நாள் போன் செய்தார்கள். அவர்களைப் பார்க்கச் சென்றபோது “உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லாயிருக்கு. நாங்க பண்ணப் போற படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்கு, பண்றீங்களா” என்றார்கள். உடனே ஓ.கே. சொல்லிவிட்டேன். படம் பார்த்துவிட்டு நிறைய பேர் போன் பண்ணினார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

யூ-டியூப் தள வீடியோக்களில் நடித்துவிட்டு, படத்தில் நடிக்கும்போது பயமாக இல்லையா?

உண்மையைச் சொன்னால் முதல் நாள் பயம் இருந்தது. நாங்கள் வீடியோ பண்ணும்போது நண்பர்கள்தான் உடன் இருப்பார்கள். ஆனால், முதல் நாள் படப்பிடிப்பில் நிறையப் பேர் இருந்தார்கள். ஜி.வி. சார்தான் “எதற்கும் பயப்படக் கூடாது. இணையத்துக்கு வீடியோ பண்ணும்போது எப்படி இருப்பீர்களோ… அப்படியே இருங்கள்” என்று சொன்னார். முதல் காட்சி படமாக்கப்பட்ட உடன் அடுத்த அடுத்த காட்சிகளில் பயம் போய்விட்டது. இயல்பாக நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

டெம்பிள் மங்கீஸ் யூ-டியூப் தளத்தை எதற்காக, எப்போது ஆரம்பித்தீர்கள்?

2008-09களில் தான் தொடங்கினோம். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் சொல்ல முடியாத விஷயங்களை இணையத்தில் சொல்லலாம் என்று வீடியோவாகப் பண்ண ஆரம்பித்தோம். எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் பண்ணினோம். வீடியோ வெளியிடும் அன்றைக்கே அது ஹிட்டா, ப்ளாப்பா என்பது தெரிந்துவிடும். அதிலிருந்து மக்கள் எதை ரசிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம். அதன் மூலமாக எங்களது பாதையையும் செதுக்கிக் கொண்டோம். நானும் என் நண்பன் சரவணனும் ஒன்றாக எழுதித்தான் வீடியோ எல்லாம் பண்ணினோம்.

வீடியோக்களில் நடிகர்களைக் கிண்டல் பண்ணியிருக்கிறீர்கள். எதுவும் மிரட்டல் வரவில்லையா?

இல்லை. ஏனென்றால் நாங்கள் தனிமனித தாக்குதல் பண்ணவில்லை. மக்கள் எதைப் பேசிக் கொள்கிறார்களே அதையே நாங்கள் வீடியோவாக வெளியிட்டோம். நான் தனிமனித தாக்குதலை முன்வைத்து ஒரு வீடியோ பண்ணினால் மக்கள் உடனே ஒதுக்கிவிடுவார்கள்.

யூ-டியூப் தளத்திலும் தற்போது உங்களைப் போலப் பலர் இருக்கிறார்கள். இந்தப் போட்டியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

எங்களது வீடியோவை ரசிப்பதற்கு என்று தனியாக சிலர் இருக்கிறார்கள். நம்ம எப்படிப் பேசிக்கொள்கிறோமோ அதை அப்படியே வீடியோவாகப் பண்ணியிருக்காங்க என்று அந்த வீடியோவை ஷேர் செய்வார்கள். இணையத்தில் ஒரே ஒரு விஷயம் தான்; நல்லாயிருக்கா, பார்ப்பார்கள். நல்லாயில்லை என்றால் அடுத்த வீடியோவுக்குச் சென்றுவிடுவார்கள். எப்போதுமே இணையத்துக்கு ஒரு பவர் உண்டு. உங்களிடம் கேமிராவும், வீடியோவுக்கான விஷயமும் இருந்தால் போதும்.

எங்கு பணிபுரிகிறீர்கள்? நீங்கள் பண்ணும் வீடியோவை எல்லாம் வீட்டில் பார்த்திருக்கிறார்களா?

கல்லூரி முடித்ததிலிருந்தே நாங்கள் இயக்குநராக முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பித்தில் சின்ன சின்ன வீடியோவாகச் செய்து தற்போது வெளி யூ-டியூப் சேனல்களுக்கு வீடியோ செய்து கொடுக்கிறோம். அதன் மூலம் கொஞ்சம் பணம் வருகிறது. எங்களுடைய யூ-டியூப் சேனல்களுக்கு வீடியோ பண்ணும்போது வருமானம் இருக்காது. முன்பு எல்லாம் செலவுக்கு வீட்டில்தான் வாங்குவோம். வேலைக்கு என்று எங்குமே இதுவரை சென்றதில்லை.

எங்களுடைய வீட்டில் எப்போதுமே உறுதுணைதான். என்னுடைய அம்மா என்னைவிட பயங்கரமாகக் கிண்டல் பண்ணுவார். சீரியஸாக நிறைய விஷயங்கள் பண்ணி சரியாகப் போகாமல், காமெடியில் எல்லாமே சொல்லலாம் என்றாகிவிட்டது. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

திரையுலகில் உங்களுடைய லட்சியம் என்ன?

படம் இயக்க வேண்டும். அதற்கான முயற்சி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 2-3 படங்களில் நடித்தால் என்னுடைய முகம் வெளியே தெரியவரும். அதை வச்சி ஒரு படம் இயக்க வேண்டும். ‘எ டெம்பிள் மங்கி மூவி’ என்று ஒரு படத்திலாவது வர வேண்டும். அதுதான் என் ஆசை. வந்ததே அதற்குத்தான். நிறைவேற்றாமல் பின்வாங்குவதில்லை. அது உறுதி.

படம் இயக்க வேண்டும். அதற்கான முயற்சி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 2-3 படங்களில் நடித்தால் என்னுடைய முகம் வெளியே தெரியவரும். அதை வச்சி ஒரு படம் இயக்க வேண்டும். ‘எ டெம்பிள் மங்கி மூவி’ என்று ஒரு படத்திலாவது வர வேண்டும். அதுதான் என் ஆசை. வந்ததே அதற்குத்தான். நிறைவேற்றாமல் பின்வாங்குவதில்லை. அது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x