Published : 10 Mar 2017 10:53 AM
Last Updated : 10 Mar 2017 10:53 AM
எப்போதோ உதிர்ந்த
தங்களது சிறகொன்றை
திடீரெனக் கண்டெடுக்கிறார்கள்
என்று தொடங்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் அற்புதமான கவிதையை, முதன்முதலாகப் படித்த அந்த நள்ளிரவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்ட ‘குயிலே… குயிலே… உந்தன் கீதங்கள் கேட்காதோ?' பாடலும், ஜன்னல் வழியே இரைச்சலாக ஒலித்த கடல் அலைகளின் சத்தமும் அந்தக் கவிதையுடன் சேர்ந்து, ஏதேதோ நினைவுகளில் என்னை அலைக்கழித்தன.
சிறந்த கவிதைகளின் தன்மையே அதுதான். அந்தக் கவிதைகளின் சொற்கள், கவிஞன் சொல்லிய மற்றும் சொல்லாத பல விஷயங்களினூடாக நம்மை நெடுந்தூரம் பயணம் செய்ய வைக்கின்றன. நூறு சொற்களுக்கு ஒரு சொல் குறைவான அந்தக் கவிதையில், பெண்களுடைய வாழ்க்கையின் அவலமான சித்திரம், வெகு நுட்பமாகத் தீட்டப்பட்டுள்ளது.
மனுஷ்ய புத்திரனின் எழுதப்படாத அந்த நூறாவது சொல்லிலிருந்து நான் எனது கட்டுரையை எழுதுகிறேன்.
இருபதாண்டுகளுக்கு முன்பு, சிறிது காலம் மட்டும் வந்த ஒரு பத்திரிகையில், நான் மிகச் சிறிது காலம் ஃப்ரீலேன்ஸ் ரிப்போர்ட்டராக இருந்தேன். அப்போது ஒரு நடிகையைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். அவரிடம் நான், அவர் பிற மொழியில் நடித்திருந்த தோல்விப் படங்களை எல்லாம் குறிப்பிட்டுப் பேசினேன். அவர் குறும்புடன் என்னைப் பார்த்தபடி, “என்னை நல்லா ஃபாலோ பண்ணியிருக்கீங்க” என்றார். நான் சங்கடத்துடன் நெளிய… வெடித்துச் சிரித்தபடி, “என் படங்களைச் சொல்றேன்” என்றார்.
பத்திரிகையில் வெளியிடுவதற்கான ஒளிப்படங்களையும் அவரே கொடுப்பதாகச் சொன்னார். அதற்காகவும், பிறகு ஒளிப்படங்களைத் திருப்பி அளிக்கவும் என மூன்று முறை அவரைச் சந்தித்தேன். அந்த மூன்று முறையும் துளிக்கூட மேக்கப் இல்லாமல், மிகவும் இயல்பாக, எளிமையின் அழகுடன் காட்சியளித்தார்.
சமீபத்தில் அவரை ஒரு பொதுநிகழ்ச்சியில் பார்த்தேன். இரக்கமே இல்லாத காலம், அந்த தேவதையின் சிறகுகளை உதிர்த்திருந்தன. ஆனால் தன் சிறகுகள் உதிர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஏராளமான பவுடருடனும், லிப்ஸ்டிக்குடனும், கண்ணாடி முன்பு காலத்துடன் நடத்திய போராட்டத்தில் அவர் மிகச் சுலபமாகத் தோற்றுப் போயிருந்தார். நான் அவருடைய ஒளிப்படத்தைத் திருப்பி அளிக்கச் சென்றபோது, அவருடன் பேசியது நினைவிற்கு வந்தது. அழகைப் பற்றி அவர் ஏதோ கூறியபோது, “வயதாகி அழகை இழக்கும்போது என்ன தோன்றும்?” என்று கேட்டேன். “மைகாட்… அது மிகப் பெரிய தண்டனை” என்றார்.
இளமையில் தேவதைகளாக இருப்பவர்களைச் சுற்றி, அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சொர்க்கம் படைக்கப்படுகிறது. அவர், “இன்னைக்கி பத்தாம் தேதி” என்று சொன்னால்கூட, விழுந்து விழுந்து சிரிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும். வெள்ளிக்கிழமை ஈரக்கூந்தலின் நுனி முடிச்சிலிருந்து சொட்டும் நீரைப் பார்த்துக் கவிதை எழுதவென்று, இளைஞர் படை அவர் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும். அவர் கழுத்து செயினை நுனி நாக்கில் ஏந்தி, நாக்கைச் சுழற்றி, சுழற்றி, துருத்தி துருத்தி செயினை தாடையில் சரிய விடும் அழகுக்குப் பாதி சென்னையை எழுதித் தரலாம். மையிட்ட விழிகள் கலங்க, எங்கோ கழன்று விழுந்த கொலுசைத் தேடி, அது கிடைக்கும்போது, அவர்களின் கண்களில் ஒற்றை விநாடி எரிந்தணைந்த அழகின் சுடருக்கு மீதி சென்னையையும் எழுதி வைக்கலாம்.
காலத்தைப் போன்ற குரூரமான விஷயம், இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. காலம் அவர்களின் அழகை மட்டுமல்ல. அவர்களின் சுயத்தையும் சுயமரியாதையையும் அடையாளங்களையும் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கிறது. தேவதைகளைக் காலம் மலர்ப் படுக்கைகளிலிருந்து கீழே தள்ளுகிறது. மனுஷ்யபுத்திரன் அந்தக் கவிதையில் சொன்னது போல, அன்பின் தேவதைகளாக இருந்தவர்கள், ஒரு பாலைவனத்தை நீரூற்றி நிரப்பும்படி அனுப்பப்பட்டார்கள். திருமணம், கணவன், குழந்தைகள் வளர்ப்பு, பிரச்சனைகள் என்று எங்கெங்கோ அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
அவள் ஒரு சொல் பேசுவதற்காக, எத்தனையோ ஆண்கள் காத்திருந்த தேவதைகள், “ஏன்டி… நொய் நொய்ன்னு பேசிகிட்டேயிருக்க….” என்று எரிச்சலுடன் புறக்கணிக்கப்படுகிறார்கள். தனது ஒற்றைச் சிரிப்பில் நூறு இளைஞர்களின் மனதில், ஆயிரம் பூக்களைப் பூக்க வைத்த தேவதைகள், “ஏன்டி… எப்பப் பார்த்தாலும் லூசு மாதிரி சிரிச்சுகிட்டேயிருக்க…” என்று காயப்படுத்தப்படுகிறார்கள். பாட்டும் பரதமும், கவிதை எழுதவும், நடிக்கவும் கற்ற தேவதைகள், திருமணத்திற்குப் பிறகு, ஆட்கள் இல்லாத அறைகளில், ரகசியமாகப் பாடி, ஆடி, எழுதி, நடித்துச் சத்தமின்றி அழுகிறார்கள்.
எத்தனையோ இளைஞர்கள் அவளுக்காகக் காத்துக் கிடந்த சாலையில், குடிகாரக் கணவனிடம் அடி வாங்கும் தேவதைகள், தனது இளமைக் காலத்தின் இளைஞர்கள் அதைக் காணாமலிருக்க வேண்டும் என்று கண்ணீருடன் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். உடல் நன்கு திடமாக இருக்கும் வரையிலும், குழந்தை வளர்ப்பு என்ற பெயரில், வேலைக்குச் செல்லும் மகன், மகள், மருமகள்களால் வேலை வாங்கப்பட்டு, படுத்த படுக்கையானவுடன், முதியோர் இல்லத்தில் தூக்கி வீசப்பட்ட தேவதைகளின் கண்ணீரைத் துடைப்பதற்கு இந்த உலகில் இருக்கும் கைகள் போதாது.
சமீபத்தில் நான் ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். முதியோர்களின் பேச்சில் கலந்துகொள்ளாமல், டிவி பார்க்காமல், தனியே புத்தகம் படித்தபடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர், “நான் சென்ட்ரல் கவர்மென்ட் வேலைல இருந்து ரிட்டயராயிட்டேன். உடம்பு நல்லா இருந்தவரைக்கும், பிள்ளைங்கள வளர்க்கிறதுக்கு நான் தேவைப்பட்டேன். உடம்பு முடியலன்னவுடனே இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க” என்றார்.
சிறிது நேரம் பேசிய பிறகு, “என் ஃபோட்டோ ஆல்பம் பார்க்குறீங்களா?” என்று தலைமாட்டிலிருந்து ஒரு ஒளிப்பட ஆல்பத்தை எடுத்தார். உள்ளே ஏராளமான கறுப்பு வெள்ளை ஒளிப்படங்கள். “இது நான் காலேஜ் படிச்சப்ப எடுத்தது” என்று அவர் காட்டிய படத்தில் அவர் அழகாக இருந்தார். தொடர்ந்து அவர், “இது நாங்க காலேஜ் டூர் போனப்ப எடுத்தது. இது என் ஃப்ரண்டு கல்யாணத்தப்ப எடுத்தது…” என்று பக்கங்களைப் புரட்ட, புரட்ட அவரிடம் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இப்போது அவர் சுற்றுப்புறத்தையும், என்னையும் மறந்துபோயிருந்தார். அவர் ஒரு அழகியின் இறந்த காலத்திற்குள், பிறர் துணையின்றி ஆரோக்கியமாக வாழ்ந்த ஒரு வசந்த காலத்திற்குள் மீண்டும் சென்று, சில விநாடிகள் வாழ்ந்துவிட்டு வந்தார். தொடர்ந்து அவர், “இது டான்ஸ் போட்டில நான் பிரைஸ் வாங்கினப்ப எடுத்தது… இது நான் டெல்லில ட்ரெய்னிங் போனப்ப எடுத்தது…” என்று சொல்லச் சொல்ல ஈரமாகப் பளபளத்த அவர் விழிகளில், ஒரு அழகின் தீச்சுடர் மீண்டும் ஏற்றப்பட்டது. அந்த அழகின் தீச்சுடர் அசைந்தாட, எனக்கு மனுஷ்ய புத்திரனின் அந்தக் கவிதை நினைவிற்கு வந்தது.
இளமையில் தேவதையாக இருந்தவர்கள்
நிலைக்கண்ணாடி முன்
பிடுங்கப்பட்ட இறகுகளை உடுத்தி
ஒரு கணம்
பரிசுத்தக் கனவொன்றைக் காண்கிறார்கள்
தேவதைகள் எப்போதும் விழித்துக்கொள்ள விரும்பாத,
ஒரு மகா பரிசுத்தமான கனவு அது.
- கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT