Published : 02 Sep 2016 12:13 PM
Last Updated : 02 Sep 2016 12:13 PM

இயற்கையை ஆராதிக்கும் ‘பாடல் ஆசிரியர்கள்!

‘மண்ணே... மரமே... வணக்கம்!' இது இயற்கையை நேசிக்கும் இளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பத்துப் பேர் கைகோர்த்து சமைத்திருக்கும் குறுந்தகடு. இதிலுள்ள பதினோரு பாடல்களும் இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

மதுரை மாவட்டம் இளமனூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் இளசை மு.மகேந்திரபாபு. இந்தக் குறுந்தகட்டின் மூலவர். இவரும் சக ஆசிரியர்கள் ஒன்பது பேரும் சேர்ந்துதான் இந்தக் குறுந்தகட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்கள். ம‌கேந்திரபாபு வெளியிடும் இரண்டாவது குறுந்தகடு இது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மரம் வளர்ப்பின் அவசியத்தைச் சொல்லும் ‘மரமும் மனிதமும்’ எனும் குறுந்தகட்டை இவர் வெளியிட்டார். அந்தப் பாடல்கள் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பட்டுத் தெறித்தது. அதிலுள்ள மதுரையின் பெருமை சொல்லும் பாடலுக்கு மாணவிகள் ஆடிய நடனம் மாவட்ட அளவில் முதல் பரிசையும் மாநில அளவில் மூன்றாம் பரிசையும் அள்ளிக்கொண்டு வந்தது.

‘மரமும் மனிதமும்' பாடல்களுக்குப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொடுத்த வரவேற்புதான் மகேந்திரபாபுவுக்கு இரண்டாவது குறுந்தகட்டிற்குப் பாடல் எழுத அச்சாரமானது. ‘மண்ணே... மரமே... வணக்க'த்தில் வரும் பதினோரு பாடல்களையும் தானே எழுதியிருக்கும் மகேந்திரபாபு முதல் பாடலை தனது ஆறு வயது மகள் சஹானாவின் செல்லக் குரலில், ‘மரம் நடுவோம் நண்பர்களே’ என்று சிலிர்க்க வைத்திருக்கிறார்.

பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி திருத்தங்கல் ஆசிரியர் பா.டிஜே தினேஷ்பாபு பத்துப் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவரது தங்கை தமிழாசிரியை பா.அருண்பிரியா. இவரும் ஒரு பார்வைத் திறனற்ற‌ மாற்றுத் திறனாளி. பெண்கள் முன்னேற்றம் குறித்து இவரது கம்பீரக் குரலில் ஒலிக்கும் ‘புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்க... இனி, பூக்கள் போல உதிர்வதில்லை நாங்க...’ என்ற பாடல் உசுப்பி உட்கார வைக்கிறது.

அதுசரி, பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர்கள் ஏன் பாட்டெழுதிப் பாடக் கிளம்பினார்கள்? "வருங்காலத்தைக் கட்டமைத்துக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாணவர்கள் கையில்தான் உள்ளது. மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும்! நாளைய உலகு மாணவர்களால் விடியும்! என்பதுதான் யதார்த்தம்" என்று பதில் சொல்கிறார் மகேந்திரபாபு.

மேலும் அவர் கூறும்போது, "பெரும்பாலான பள்ளி விழாக்களில் பொருள் புரியாத சினிமா குத்துப்பாட்டுப் பாடல்களுக்கு மாணவர்களை ஆடவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றிப் பொருளோடு கூடிய சமுதாய நலன் சார்ந்த பாடல்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தோம். அந்த நினைப்புதான் இரண்டு குறுந்தகடுகளைச் சுகப் பிரசவமாய்ப் பிரசவிக்க வைத்திருக்கிறது" என்கிறார்.

பாடல்களைப் பாடியவர்களில் இரண்டு பேர் மட்டுமே இசை ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு ஒன்றுக்குப் பலமுறை பயிற்சி கொடுத்தே பாடவைத்திருக்கிறார் டிஜே தினேஷ்பாபு. ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்றொரு பாடலும் வருகிறது. இது சகாயம் ஐ.ஏ.எஸ் உருவாக்கிய வாசகம் என்பதால் இந்தப் பாடலை மட்டும் தேர்தல் சமயத்தில் ஈரோட்டில் அவர் கையாலேயே வெளியிட வைத்திருக்கிறார்கள்.

முழுமையான குறுந்தகடு வடிவத்தை ஆகஸ்ட் 4-ம் தேதி தனது பள்ளி வளாகத்தில் வைத்து மாணவ சமுதாயத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார் மகேந்திரபாபு.

"மாணவர்களுக்காக இப்படியொரு குறுந்தகட்டை வெளியிடப் போகிறோம் என்றதுமே வேளாண் அலுவலர் ‘அக்ரி’ ஆறுமுகமும் பொறியாளர் சுரேஷும் தயாரிப்புச் செலவில் முக்கால்வாசியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பள்ளிக்கூடங்களுக்கு ஐம்பது ரூபாய்க்குச் சலுகை விலையில் இந்தக் குறுந்தகடுகளைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.

மண்ணையும் மனிதர் களையும் இயற்கையையும் நேசிக்கும் பாங்கு மாணவப் பருவத்திலிருந்தே வர வேண்டும். பிறந்த நாளைக்கு இனிப்புக் கொடுத்து மகிழ்வதைவிட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரக்கன்றை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்துப் பாருங்கள். அப்புறம் இயற்கையைச் சிதைக்கும் எந்தக் காரியத்தையும் அனுமதிக்க மாட்டீர்கள். இதுபோன்ற விஷயங்களைத்தான் நாங்கள் பாட்டாகப் பாடியிருக்கிறோம். இதைக்கேட்டுப் பத்துக்கு ஒரு குழந்தையாவது இயற்கையை நேசிக்கப் புறப்பட்டால் அதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என்று சிலாகிக்கிறார் மகேந்திரபாபு.

இவரைத் தொடர்புகொள்ள: 97861 41410

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x