Published : 20 Jan 2017 11:42 AM
Last Updated : 20 Jan 2017 11:42 AM
சாலைகளில் டூவீலரில் செல்லும்போது, டிராபிக் ஜாமிலோ சிக்னலிலோ மாட்டிக்கொள்கையில், கண்களைக் கொஞ்சம் அலைபாயவிட்டால் சுவரை அலங்கரிக்கும் போஸ்டர்கள் தென்படும். அவற்றில் கவனம் ஈர்ப்பவை திரைப்பட போஸ்டர்களாகத்தான் இருக்கும். ‘இன்று முதல் படப்பிடிப்பு’, ‘விரைவில் இசை’, ‘வெற்றிகரமான பத்தாவது நாள்’ எனப் பலவிதமான போஸ்டர்கள். ஒரு காலத்தில் போஸ்டர்தான் ஒரு சினிமாவுக்கான முதல் ‘விசிட்டிங் கார்டு’. இந்த டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’, நம் செல்போனுக்குள் வந்து குதித்துவிடுகிறது. அதிலும் சமீபத்திய டிரெண்ட்டான ‘மோஷன் போஸ்டர்’ வடிவிலும் சில படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக்குகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
எப்படியோ ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துபவை இந்த போஸ்டர்கள்தான். அப்படியானால் அந்த போஸ்டர் எத்தனை தனித்தன்மைகளுடன் இருக்க வேண்டும்?
போஸ்டர் வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் ஓவியராகவும் ஒருவர் இருப்பது, அவருடைய படைப்புகளைப் பார்க்கும்போது பளிச்செனத் தெரிந்தது. ‘ஜிகிர்தண்டா’ திரைப்படத்துக்கு இவர் வடிவமைத்த ‘இல்லஸ்ட்ரேஷன்’ வகை போஸ்டர் பெரிதும் பிரபலமானது. ‘ஜில்லா’, ‘கிருமி’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ போன்ற பல சினிமா போஸ்டர்களை வடிவமைத்தவர் சரத். சமீபத்தில் இவர் வடிவமைத்து வெளியான ‘எய்தவன்’,‘சைனா’ போஸ்டர்கள் தனிக் கவனம் பெற்றன.
ஓவியமும் நானும்
மதுரையில் சரத்தின் வீடு அருகே சில ‘சைன்போர்டு’ ஆர்ட்டிஸ்டுகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வரைவதைப் பார்த்தபோதுதான், தனக்கும் வரைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகச் சொல்லும் இவர், “அப்போ எங்க வீடு மதுரை தபால் தந்தி நகர்ல இருந்தது. நான் மூன்றாவது படிச்சிட்டுக்கிட்டு இருந்தேன். தினமும் ஸ்கூல் முடிந்ததும் ‘சைன்போர்டு’ ஆர்ட்டிஸ்டுகளின் வீட்டுக்குப் போய்விடுவேன். அவர்கள் வரைவதை வெகு நேரம் பார்த்துவிட்டு லேட்டாத்தான் வீட்டுக்குப் போவேன்.
முதலில் பத்திரிகைகள்ல வரும் நடிகர் நடிகைகளின் படங்களைப் பார்த்து வரைய ஆரம்பிச்சேன். ‘நல்லா இருக்கே’ என்று நண்பர்கள், அதை எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், என் வீட்டிலோ நிலைமை அதற்கு நேர்மாறா இருந்துச்சு. ‘இப்படிப் படிக்கிற வயசில படிக்காம வரைஞ்சிகிட்டிருந்தா, நாளைக்குத் தெருத் தெருவாதான் போகணும் வரையறதுக்கு’ என்று முதலில் கண்டித்தார்கள். அதன் பின் வரைவதைக் குறைத்துக்கொண்டு படித்து முடித்தேன். ஆனால், சின்ன வயசுல வரைவதில் எனக்கிருந்த ஆர்வம்தான் பின்னாட்களில் பெரிதும் உதவியது” என்கிறார்.
வடிவமைப்பாளர் பயணம்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின் அடுத்து என்வென்று யோசித்தபோது, நெருக்கமான வர்கள் சிலரின் அறிவுறுத்தலின்படி கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படித்திருக்கிறார் சரத். “அப்போதுதான் போட்டோஷாப் கற்றுக்கொண்டு டிஜிட்டலில் வரைய ஆரம்பிச்சேன். டிகிரி முடிச்சுட்டு வீட்டிலிருந்த சமயத்தில் டிஜிட்டலில் வரைந்த ஓவியங்களை, பேஸ்புக்கில் பதிவிட்டேன். பலர் அதைப் பார்த்துப் பாராட்டினார்கள்.
கொஞ்ச நாளில் சென்னையிலுள்ள ‘பெப்பர்ஸ் டிசைனிங் ஏஜென்சி’யில் வேலைக்குச் சேர எனக்கு அழைப்பு வந்தது. அதன் பிறகு ‘24am டிசைனிங் ஸ்டூடியோ’வில் வாய்ப்புக் கிடைச்சு, அங்க கொஞ்ச வருஷம் வேலை பார்த்தேன். அங்கே பல படங்களின் போஸ்டர்களை வடிவமைச்சேன். அப்போது டிசைன் செய்த ‘ஜிகிர்தண்டா’ பட போஸ்டர்களுக்குப் பலரிடமிருந்தும் மறக்க முடியாத பாராட்டு கிடைச்சுது. இப்போது படங்களுக்குத் தனியாகவே போஸ்டர்களை வடிவமைச்சு கொடுத்துட்டிருக்கேன்” என்று தான் வடிவமைப்பாளரான பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சரத்.
போஸ்டர் சவால்கள்
வெளியிலிருந்து பார்க்கும்போது சுலபமாகத் தெரிந்தாலும் சினிமா போஸ்டர் வடிவமைப்புக்கு மிகப் பெரிய படைப்பாற்றல் தேவை. நிறைய சவால்களைக் கடந்துதான் ஒவ்வொரு சினிமா போஸ்டரும் உருவாகிறது. “ஒரு படத்துக்கான போஸ்டரை வடிவமைப்பதற்கு முன், இயக்குநரிடம் படத்தின் கதையைச் சுருக்கமாகச் சொல்லச் சொல்லிக் கேட்போம். கதையை உள்வாங்கிய பின் படத்தின் தலைப்பை முதலில் வடிவமைப்போம். அதற்குப் பின் படத்தின் மூடுக்கு ஏற்றதுபோல், அதாவது த்ரில்லர் படம் எனில் ஒரே டோனிலும், ஜாலியான காதல் படமெனில் கலர்ஃபுல்லாகவும் போஸ்டரை வடிவமைப்போம்.
சில போஸ்டர்களை கொஞ்சம் உத்துப் பார்த்தா, அந்தப் படத்தின் கதையே போஸ்டருக்குள் அடக்கமா உட்கார்ந்திருக்கிறது தெரியும். இயக்குநர்களின் விருப்பப்படியே போஸ்டரை வடிவமைக்கத் தொடங்குவோம். ஆனால், சில படங்களுக்கு இயக்குநர்கள் வேறு சில உதாரணங்களைக் காட்டி, அதுமாதிரிதான் வேணும்னு கேட்பாங்க. இன்றைய இன்டர்நெட் உலகில் இப்படிச் செய்றது எங்களுக்குச் சில நேரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுண்டு. எங்களது கற்பனைக்கும் ஓரளவு சுதந்திரம் கொடுத்து வேலை செய்யவிட்டால், இன்னும் சிறப்பான போஸ்டர்களை நிச்சயமா எங்களால வடிவமைக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் சரத்.
போஸ்டர்களுக்கான ‘கேரக்டர் டிசைன்’ ஆர்டிஸ்ட்டாக நீடிப்பதே தன்னுடைய விருப்பம் என்று சொல்லும் சரத், குழந்தைகளுக்கான பாடல்களை எளிய வடிவிலான ‘ஆப்’பாகத் தயாரித்து வெளியிடும் திட்டத்தையும் கையில் வைத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT